விமலுக்கு விளக்கமறியல் நீடிப்பு

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச எதிர்வரும் 7ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆட்சிக் காலத்தில் விமல் வீரவங்ச நிர்மாணம், பொறியியல் சேவைகள், வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சராக பதவி வகித்த வேளை, அந்த அமைச்சிற்கு சொந்தமான வாகனங்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமையால், அரசாங்கத்திற்கு சுமார் 41 மில்லியன் ரூபா நஸ்டம் ஏற்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இந்தநிலையில் கடந்த 10ம் திகதி அவர் வாக்குமூலம் அளிக்க பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

இதனையடுத்து அங்கு சென்ற அவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் இன்று குறித்த வழக்கு மீள விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளை, விமல் வீரவங்ச உள்ளிட்ட இருவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கைதுசெய்யப்பட்டவர்களை விளக்கமறியலில் வைக்கும் அளவுக்கு சாட்சிகளை முன்வைக்க பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவின் உதவிப் பொலிஸ் அதிகாரி தோல்வியடைந்துள்ளாக இதன்போது குறிப்பிட்டார்.

மேலும், விமல் வீரவங்சவின் மகள் இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரிட்சைக்கு தோற்றவுள்ளதால் அவரது மனநிலையையும் கருத்தில் கொண்டு தனது கட்சிக்காரருக்கு பிணை வழங்க வேண்டும் எனவும் அவர் வாதிட்டார்.

எனினும் முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த கோட்டை நீதவான் லங்கா ஜெயரத்ன, சந்தேகநபர்களுக்கு எதிராக போதுமான சாட்சிகள் உள்ளதாகவும், முன்வைக்கப்பட்ட ஏனைய காரணங்கள் பிணை வழங்க போதுமானது இல்லை எனவும் கூறினார்.

இதனையடுத்து இருவரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதவான், மோசடி இடம்பெற்றதாக கூறப்படும் காலப் பகுதியில் பிரதியமைச்சராக செயற்பட்ட லசந்த அலகியவன்ன மற்றும் அப்போதைய அரச பொருளியல் கூட்டுத்தாபன தலைவர் அஞ்சு மாரசிங்க ஆகிய இருவர் தொடர்பிலும் விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் உத்தரவு பிறப்பித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com