விபத்தில் வீரர்களை இழந்த அணிக்காக விளையாடுகிறார் ரொனால்டினோ!

footi_14498விமான விபத்தில் 19 வீரர்களைப் பறிகொடுத்த சபிகோயன்ஸ் அணிக்காகப் பிரேசில் ஜாம்பவான் ரொனால்டினோ விளையாடப் போகிறார். கால்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற ரொனால்டினோ, அந்த அணியின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்திருக்கிறார்.

கால்பந்து விளையாட்டுக்கு பெயர் போன பிரேசில் நாட்டைச் சேர்ந்த சபிகோயன்ஸ் அணி கடந்த 1973-ம் ஆண்டு உருவானது. பிரேசிலின் சிறிய நகரமான சபிகோவை மையமாகக் கொண்டு இயங்கி வந்தது. இரு நாட்களுக்கு முன், கோபா சவுத் அமெரிக்கா கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில், பங்கேற்பதற்காகக் கொலம்பியாவின் மெட்லீன் நகருக்கு விமானத்தில் சென்று கொண்டிருந்தபோது, விபத்து ஏற்பட்டு கிட்டத்தட்ட 76 பேர் மரணமடைந்தனர். விபத்தில் சபிகோயன்ஸ் அணியின் 19 வீரர்கள் பலியானார்கள். சபிகோயன்ஸ் அணியின் 3 வீரர்கள் மட்டுமே உயிர் தப்பினர். காயம் காரணமாக விமானத்தில் போகாத 3 வீரர்கள் உள்ளிட்ட 6 வீரர்கள் மட்டுமே தற்போது எஞ்சியிருக்கின்றனர்.

இதனால், அணியை மீண்டும் கட்டமைக்கும் சவால் நிறைந்த பணி சபிகோயன்ஸ் நிர்வாகத்துக்கு இருக்கிறது. பிரேசில் நாட்டின் பல முன்னணி அணிகள் சபிகோயன்ஸ் அணிக்கு வீரர்களை லோனுக்குக் கொடுத்து உதவி புரிவதாக வாக்களித்துள்ளன. இதற்கிடையே, பிரேசில் அணிக்காக விளையாடி ஓய்வுபெற்ற புகழ்பெற்ற கால்பந்து வீரரான ரொனால்டினோ சபிகோயன்ஸ் அணிக்காக விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார்.

ரெனால்டினோ பார்சிலோனா, ஏசி மிலன் போன்ற புகழ்பெற்ற கால்பந்து அணிகளுக்காக விளையாடியவர். பிரேசில் அணிக்காக 97 சர்வதேச போட்டிகளில் விளையாடி 33 கோல்களை அடித்துள்ளார். கடந்த 2015-ம் ஆண்டுக் கிளப் கால்பந்தில் இருந்து ரொனால்டினோ ஓய்வு பெற்றார். சபிகோயன்ஸ் அணி விமான விபத்தில் தனது வீரர்களைப் பறிகொடுத்தது ரெனால்டினோவை மனதளவில் பாதித்திருந்தது. இதையடுத்து ஓய்வுக்கு ஓய்வு கொடுத்து விட்டு மீண்டும் கால்பந்து களத்துக்குத் திரும்ப ரொனால்டினோ முடிவு எடுத்திருக்கிறார்.

இதனை அவரது மேலாளர் ரபார்ட்டோ அசிஸோ உறுதி செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,” இது ஒரு கடினமான தருணம். வலியை நாங்கள் புரிந்து கொண்டிருக்கிறோம். நாங்கள் அவர்களுக்கு உதவி செய்ய நினைக்கிறோம். சபிகோயன்ஸ் விரும்பினால் ரொனால்டினோ அந்த அணிக்காக விளையாட முடிவு செய்துள்ளார். பிரேசிலியர்களாக நாங்கள் இந்த விஷயத்தில் ஒன்று சேர்ந்துள்ளோம்” என்றார்.

அதேபோல், அர்ஜென்டினா அணியின் முன்னாள் சூப்பர் ஸ்டார் ஜுவான் ரோமன் ரிக்லைமும் சபிகோயன்ஸ் அணிக்காக விளையாட முடிவு செய்துள்ளார். இவரும் பார்சிலோனா, போகா ஜுனியர்ஸ் அணிகளுக்காக விளையாடி புகழ்பெற்றவர். அர்ஜென்டினா அணிக்காக 51 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 17 கோல்களை அடித்துள்ளார். அர்ஜென்டினாவின் 10-ம் எண் ஜெர்சியை அணிந்து விளையாடிய வீரரும் கூட. இவர் கடந்த 2014-ம் ஆண்டு கிளப் கால்பந்தில் இருந்து ஓய்வு பெற்றார்.

கால்பந்து விளையாட்டைப் பொறுத்தவரை பிரேசில், அர்ஜென்டினா அணிகள் பரம வைரிகள். ஆனாலும் சபிகோயன்ஸ் அணிக்கு உதவி புரிய அர்ஜென்டினா அணியின் முன்னாள் சூப்பர்ஸ்டார் விருப்பம் தெரிவித்திருப்பது கால்பந்து பிரியர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு முன், கடந்த 1958-ம் ஆண்டு மான்செஸ்டர் யுனைடெட் அணி மியூனிச் நகர விமான விபத்தில் 8 வீரர்களை பலி கொடுத்தது. அப்போது அந்த அணியின் பரம வைரியான லிவர்பூல் அணி தனது வீரர்களை லோனுக்கு அளித்து மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு உதவி செய்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com