வித்தியைக் களமிறக்க கடும் முயற்சி ! சுரேஸ் அணியில் இணைய வாய்ப்பு !!

யாழ்ப்பாணம் மாநகர சபைத் தேர்தலில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்.வித்தியாதரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மேயர் வேட்பாளராக நிறுத்த மேற்கொள்ளப்பட்ட கடும் முயற்சிகள் அவரது மைத்துனரான நாடாளுமன்ற உறுப்பினரின் கடுமையான எதிர்ப்பினால் நீத்துப்போகச் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் பொது அணி எனும் பிம்பம் ஒன்றினை உருவாக்கி வித்தியாதரனைக் களமிறக்கவைக்கும் கடும் முயற்சிகள் சில தரப்புக்களினால் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் ஆசீர்வாதத்தோடு வித்தியாதரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாநகர முதல்வர் வேட்பாளராக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவந்தன. இதனை அவரது மைத்துனரான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கடுமையாக எதிர்த்துவந்தார். வித்தியாதரனை உள்ளீர்ப்புச் செய்தால் தனது பத்திரிகை தமிழரசுக் கட்சிக்கு எதிராக எழுதவேண்டிய நிலைக்கு மாற்றமடையும் அது தமிழரசுக் கட்சியின் தேர்தல் வெற்றிகளை முழுமையாகப் பாதிக்கும் என அவரால் எச்சரிக்கப்பட்டதாகக் தமிழரசுக் கட்சித் தகவல்கள் தெரிவித்தன.

இந்நிலையில் வடக்கு மாகாணசபை உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் ஆரதவு பெற்றவருமான இம்மானுவேல் ஆர்னோல்ட்டை யாழ் மாநகர முதல்வர் வேட்பாளராக நிறுத்துவதற்கு தமிழரசுக் கட்சி முடிவெடுத்தது. இதனையடுத்து ஆர்னோல்ட் தனது மாகாணசபை உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்தார். இந்நிலையிலேயே வேறு அணிகளின் ஊடாகவாவது வித்தியாதரனை யாழ் மாநகர முதல்வர் வேட்பாளராக்கவேண்டும் என இந்தியா உள்ளிட்ட சில தரப்புக்கள் முயன்றுவருவதாக தெரியவந்துள்ளது.

இத்தரப்பினர் இந்திய ஆதரவுடன் ஆனந்த சங்கரியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் சுரேஸ் பிரேமச்சந்திரனின் அணியில் வித்தியாதரனை களமிறக்கச் செய்யும் இறுதிக்கட்ட முயற்சியில் தற்போது ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதற்கென சமூக அமைப்புக்கள் மற்றும் சில வர்த்தக அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.

தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழ் அரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகள், தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகியவற்றின் ஆதரவைப் பெறுவதற்கும் இத்தரப்பினர் முயன்றுவருவதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனின் ஆதரவைப் பெறுவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் அது கைகூடவில்லை எனத் தெரியவந்துள்ளது. எனினும் வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தனது ஆதரவை வழங்குவதாக தெரிவித்துள்ளார் எனவும் கூறப்படுகின்றன.

இதேவேளை இந்து மதவாத அமைப்பான சிவசேனைஅமைப்பும் ஆதரவை வழங்குவதாகத் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com