வித்தியா வழக்கு தொடர்பில் மைத்திரிக்கு சிறிதரன் எம்.பி கடிதம்!

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கோரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கினை யாழ்ப்பாண நீதி நியாயாதிக்கத்திற்குட்பட்ட நீதிமன்றத்திலிருந்து கொழுப்பிற்கு மாற்றுவதனை நிறுத்தி யாழ்ப்பாணத்திலேயே தொடர்ந்தும் வழக்கு விசாரிக்கப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விட்டுள்ளார்.

அவர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கோரிக்கைக் கடிதத்தில்,
‘யாழ்ப்பாணம் புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைச் சேர்ந்த செல்வி சிவலோகநாதன் வித்தியாவினது கொலை வழக்கினை கொழும்பிற்கு மாற்றுவது தொடர்பில் தங்களின் கவனத்தை ஈர்க்க இக்கடிதத்தை எழுதுகின்றேன்.

செல்வி. வித்தியா சிவலோகநாதன் கோரமான முறையில் கொலைசெய்யப்பட்டமை பற்றியும் அதனால் சமூகத்தில் எழுந்த உணர்வின் பிரதிபலிப்புக்கள் பற்றியும் தாங்கள் நன்கு அறிவீர்கள். இத்தகைய கொலைகள் ஏற்கனவே பலமுறை இங்கு நடைபெற்று இருக்கின்றது. அத்தகைய கொலைகளின் பின்னணியில் செயற்பட்ட காரணகர்த்தாக்களை எமது மக்கள் தெளிவாக இனம்கண்டும் இருந்தனர்.

ஆனால் நீதி விசாரணைகள் நேர்மையான முறையில் நடைபெற இடமளிக்கப்படவில்லை என்பதை வரலாற்றின் சம்பவங்கள் தங்களுக்கு நினவூட்டக் கூடும்.

ஆனால் நல்லாட்சி அரசின் வரவுக்குப் பின்னர் நீதித்துறையின் சுயாதீனம் அதிகரிப்பதாக நம்பப்பட்ட வேளையில்த்தான் செல்வி வித்தியாவின் கொலை இடம்பெற்றது. கொலையின் பின்னர் சமூக அமைதி குலைவிற்கான வாய்ப்புக்கள் தென்பட்டன. எப்போதும் போலவே நீதி இருட்டடிப்புச் செய்யப்படும் என்றே மக்கள் நம்பினர்.

ஆனால் 26.05.2016 அன்று நீங்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து செல்வி வித்தியாவினது பெற்றாருக்கு வழங்கிய உறுதிமொழிகள் வித்தியா குடும்பத்தினரதும் எமது சமூகத்தினதும் நம்பிக்கைகளைப் பலம் பெறச் செய்தது.

ஆனால் அண்மைக் காலங்களில் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்ற வித்தியா கொலை வழக்கினை மேல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தப்படவுள்ள நிலையில் அதனைக் கொழும்பிற்கு மாற்றுவதற்கு முயற்சிக்கப்படுகின்ற தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன.
யாழ்ப்பாண நீதிநியாயாதிக்க எல்லைக்குள் இவ்வழக்கு நடாத்தப்டுவதையே வித்தியா குடும்பத்தினரும் நீதிமீதான ஆர்வலர்களும் விரும்புகின்றனர்.

யாழ்ப்பாணத்திலே நீதிமன்ற மொழியாக தமிழ் பயன்படுத்தப்படுவதும், நம்பத்தகுந்த நீதித்துறையினர் பணியில் இருப்பதும், கொழும்பிற்கு மாற்றுவதால் எழுகின்ற செலவீனங்களை தாங்கும் சக்தி வித்தியா குடும்பத்திற்கு இல்லை என்பதாலும் குறித்த வழக்கு யாழ்ப்பாணத்தில் ட்ரஜல் அற்பார் (Trial at Bar) முறையிலான நீதிமன்றத்திலேயே நடைபெற வேண்டும். என்பதே மக்களது பெருவிருப்பாகும்.

வரலாற்றில் பலதடவைகள் இத்தகைய வழக்குகள் தென்னிலங்கைக்கு மாற்றப்பட்டு நீதிவழங்குவது தடுக்கப்பட்டும் தாமதப்படுத்தப்பட்டும் வந்தமை எமது மக்களின் மனங்களில் மாறாத விடயமாக பதிவாகியுள்ளது.

அதனால் இவ்வழக்கினை கொழும்பிற்கு மாற்றுவது தொடர்பில் அவர்கள் கொண்டிருக்கும் சந்தேகங்களில் அதிக நியாயங்கள் உண்டு என்பதை தங்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

எனவே மேற்குறித்த விடயங்களை ஆராய்ந்து நீதித்துறையின் சுயாதீனம் நிலைபெறும் வகையில் வித்தியா கொலை நிகழ்ந்த நியாயாதிக்க எல்லைக்குள் வாழ்கின்ற மக்களின் நம்பிக்கை பெருகும் வகையில் குறித்த வழக்கினை யாழ்ப்பாண நீதிநியாயாதிக்க எல்லைக்குள் நடாத்துவதே பொருத்தமானது என்பதை தங்களின் கவனத்திற்கு பணிவுடன் அறியத்தருகின்றேன்.’ என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com