சற்று முன்
Home / செய்திகள் / வித்தியா – மரணம் முதல் இன்றுவரை – இரண்டு வருடங்களாய் என்ன நடந்தது? #Followup – தொகுப்பு – மயூரப்பிரியன்

வித்தியா – மரணம் முதல் இன்றுவரை – இரண்டு வருடங்களாய் என்ன நடந்தது? #Followup – தொகுப்பு – மயூரப்பிரியன்

 

13.05.2015. –

காலை பாடசாலைக்கு சென்ற மாணவி வித்தியா மாலை வரை வீடு திரும்பவில்லை.
இரவிரவாக உறவினர்கள் மாணவியை தேடினார்கள்.

14.05.2015. –

காலையிலும் வித்தியாவின் சகோதரன் , வித்தியா வளர்த்த நாய் மற்றும் ஊரவர்கள் தேடுகின்றார்கள்.
வித்தியா பாடசாலை செல்லும் பாதையில் உள்ள பாழடைந்த வீடொன்றின் பின் புறமாக கைகள் கால்கள் கட்டப்பட்டு வாய்க்குள் துணி அடையப்பட்ட நிலையில் வித்தியா சடலமாக மீட்கப்படுகின்றாள்.

14.05.2015. –

மதியம். புங்குடுதீவில் உள்ள 9 பாடசாலைகளையும் சேர்ந்த அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வித்துறை அதிகாரிகள், பிரதேச சபை மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் வர்த்தகர்கள், பொதுமக்கள் என பலதரப்பட்டவர்களும் புங்குடுதீவு மகாவித்தியாலய மைதானத்தில் கூடி ஆர்ப்பாட்டம்

14.05.2015. –

9ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த பூபாலசிங்கம் இந்திரகுமார் (வயது 40), பூபாலசிங்கம் ஜெயக்குமார் (வயது 34), பூபாலசிங்கம் தவக்குமார் (வயது 32) ஆகிய மூவரும் கைது.

15.05.2015. –

வாய்க்குள் துணி அடைந்தமையால், மூச்சுத் திணறல் ஏற்பட்டு, தலை கல்லில் அடிபட்டதில் மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டு மாணவி வித்தியா உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனைகளில் தெரிவிக்கப்பட்டது கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டமை உறுதி செய்யப்பட்டது. வித்தியாவின் உடற்பாகம் பரிசோதனைக்காக கொழும்புக்குஅனுப்பி வைக்கப்பட்டது.

15.05.2015. –

வித்தியாவின் இறுதிக் கிரியை . புங்குடுதீவில் கடையடைப்பு . தீவகத்திற்கான போக்குவரத்தும் இடைநிறுத்தம்.

17.05.2015 –

வித்தியா கொலை தொடர்பில் மேலும் 5 பேர் கைது. சந்தேக நபர்களை தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரி, குறிகட்டுவான் பகுதியில் உள்ள ஊர்காவற்துறை போலிஸ் காவலரணை முற்றுகையிட்டு மக்கள் இரவிரவாகப் போராட்டம். சில மணி நேரத்தில் சந்தேகநபர்களை பொலிஸார் கடற்படையின் உதவியுடன் யாழ்ப்பணத்திற்கு கடல் வழியாக கொண்டு சென்றனர். மக்கள் ஆத்திரமுற்று காவலரணை தாக்கினார்கள்.
கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களுடன் தொடர்புடையவர் என சுவிஸ் குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவரை பிடித்து மின் கம்பத்தில் கட்டி வைத்து மக்கள் தாக்கினார்கள்.
அவ்விடத்திற்கு சென்ற தற்போதைய இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் குறித்த நபரை பொலிசாரிடம் ஒப்படைக்குமாறு அங்கிருந்தவர்களிடம் கூறியதை அடுத்து அவர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

18.05.2015 –

கைதான 05 சந்தேக நபர்களையும் மருத்துவ பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற போது பொதுமக்கள் வைத்தியசாலையை முற்றுகையிட்டு அவர்களைத் தாக்கினார்கள்.

19.05.2015. –

சுவிஸ் குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் எனும் நபர் ஒன்பதாவது சந்தேக நபராக கொழும்பு வெள்ளவத்தையில் வைத்து கைது. (குறித்த நபர் பொது மக்களால் பிடிக்கப்பட்டு யாழ்ப்பாண பொலிஸில் 17 ஆம் திகதி ஒப்படைக்கப்பட்டு, யாழ்ப்பாண பொலிசாரால் விடுவிக்கப்பட்ட பின்னர் 19 ஆம் திகதி வெள்ளவத்தையில் மீண்டும் கைது செய்யப்பட்டார்)
மாலை. புங்குடுதீவுக்கு சென்ற சட்டத்தரணியும் கொழும்பு பல்கலைகழக சட்டத்துறை விரிவுரையாளருமான வி.ரி.தமிழ்மாறனே, சுவிஸ் குமார் தப்பி செல்ல உதவினார் எனக் கூறி ஊரவர்கள், அவரை சுமார் 5 மணித்தியாலங்களுக்கு மேலாக பொலிஸ் வாகனத்திற்குள் முடக்கினர். பின்னர் கடற்படையின் உதவியுடன் பொலிஸார் தமிழ்மாறனை ஊரவர்களிடம் இருந்து பாதுகாப்பாக மீட்டனர்.

20.05.2015. –

மாணவிக்கு நீதி கோரி ஹர்த்தால். அன்றைய தினம் சந்தேக நபர்களை யாழ்.நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை.நீதிமன்ற கட்டட தொகுதியைச் சுற்றி பெருமளவான மக்கள் கூடி நின்றனர். மதியம் 11. 30 மணி. மக்கள் திடீரென வன்முறையில் இறங்கினர். நீதிமன்றக் கட்டடத் தொகுதி மீது கல் வீசி தாக்குதல். சட்டத்தரணிகளின் வாகனங்கள் , சிறைச்சாலை வாகனம் மற்றும் அங்கிருந்த ஏனைய வாகனங்கள் மீதும் தாக்குதல்.
கலகம் அடக்கும் பொலிஸார் கண்ணீர் குண்டு வீசி போராட்டகாரர்களை துரத்தினர்.
வன்முறையில் ஈடுபட்டனர் எனக்கூறி 132 பேர் கைது செய்யப்பட்டனர்.

20.05.2015. –

மாணவியின் குடும்பத்தின் சார்பில் இலவசமாக முன்னிலை ஆவோம் என்றும் , சந்தேக நபர்கள் சார்பில் முன்னிலையாக மாட்டோம் எனவும் யாழ். சட்டத்தரணிகள் கூட்டாக அறிவிப்பு.

26.05.2016 –

வித்தியாவின் தாய், சகோதரனை சந்தித்து ஜனாதிபதி ஆறுதல். “விசேட நீதிமன்றம் மூலம் விரைவான விசாரணை, வித்தியா குடும்பத்துக்கு வீடு” என்னும் வாக்குறுதிகளை வழங்கினார்.( இன்னும் விசாரணை முடியவில்லை.வீடும் ஒன்றரை வருடங்களின் பின்னர் வவுனியா இராணுவக் குடியிருப்பில் வழங்கப்பட்டது)

15.12.2015 –

பத்தாவது சந்தேக நபராக ஜெயவர்த்தன ராஜ்குமார் (வயது 26) எனும் நபரை ஊர்காவற்துறை பொலிஸார் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தினார்கள்.குறித்த சந்தேக நபர் பஸ்ஸில் தப்பி செல்ல முற்படுகையில் பஸ்ஸினை துரத்தி சென்று அராலி சந்தியில் வைத்து அவரைப் பொலிஸார் கைது செய்தனர்.

25.01.2016.-

மகளின் கிரியைகளை செய்வதற்காக வழக்கினை துரி கதியில் முன்னெடுக்குமாறு புங்குடுதீவு மாணவியின் தாயார் சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் கோரிக்கை.உடல் புதைக்கப்பட்டதனால் இந்து சமய முறைப்படியான கிரியைகளை முன்னெடுக்க முடியவில்லை எனத் தெரிவித்தார்.

25.01.2016 –

“விசாரணைகளை துரிதப்படுத்தி குற்றவாளிகள் என இனம் கண்டால் எம்மை தூக்கிலிடுங்கள்” என புங்குடுதீவுமாணவி கொலை வழக்கின் சந்தேக நபர்கள் கூட்டாகக் கோரிக்கை.

19.02.2016 –

குற்றப்புலனாய்வு துறையினரால் மரபணு சோதனை அறிக்கை உட்பட எந்த அறிக்கையும் மன்றில் சமர்ப்பிக்கவில்லை.
அறிக்கைகளை விரைவில் சமர்பிக்க வேண்டும் என கடும் தொனியில் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் உத்தரவு (வழக்கு தொடர்பான சான்றுப் பொருட்களின் அறிக்கைகள், டீ.என்.ஏ பரிசோதனை அறிக்கைகள் என 12 அறிக்கைகளில் எவையும் எட்டு மாதத்தில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை)

04.03.2016 –

வித்தியாவின் கொலைக்கான காரணத்தை குற்றப்புலனாய்வு துறையினர் ஊர்காவற்துறை நீதிமன்றில் வெளியிட்டனர்.
“வித்தியாவை புங்குடுதீவை சேர்ந்த சிவதேவன் துஷாந்த் ஒரு தலையாக காதலித்தார். ஆனால் வித்தியா சம்மதிக்கவில்லை. வித்தியாவைப் பழிவாங்க,
தன் நண்பரான தில்லைநாதன் சந்திரஹாசனுடன் கூட்டு சேர்ந்து மாணவியை கடத்த திட்டமிட்டார். திட்டத்தின் சூத்திரதாரியாக மாறினார் சுவிஸ் குமார்.இன்னும் இருவர் துணைக்கு சேர்க்கப்பட்டனர்.அப்படிச் சேர்க்கப்பட்டவர்களுக்கும் வித்தியா குடும்பத்துக்கும் முன்பகை இருந்தது. அவர்களுக்கு எதிராக களவு வழக்கில் வித்தியாவின் தாயார் சாட்சி சொல்லி இருந்தார்.திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. வித்தியா கடத்தப்பட்டு கோரமாக கூட்டு வன்புணர்வின் பொன் கொல்லப்பட்டார்.துசாந்த், சந்திரஹாசன் ஆகிய இருவருமே கொலை செய்தவர்கள்” -இதுவே குற்றப்புலனாய்வாளர்களின் அறிக்கை.

03.03.2016. –

11ஆவது சந்தேக நபரான உதயசூரியன் சுரேஷ் கரன் கைது.

18.03.2016. –

வழக்கு ஒரு சில மாதங்களில் யாழ்.மேல் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்படும் என ஊர்காவற்துறை நீதிமன்று அறிவிப்பு.

18.03.2016. –

புங்குடுதீவு மற்றும் ஊர்காவற்துறை பிரதேசங்களில் காணப்படும் பாழடைந்த வீடுகள் பற்றைகளை அழிக்குமாறு ஊர்காவற்துறைநீதிமன்று உத்தரவு.

01.04.2016 –

பன்னிரண்டாவது சந்தேக நபராக தர்மலிங்கம் ரவீந்திரன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

20.04.2016. –

மரபணு பரிசோதனை அறிக்கையை தம்மிடம் ஜின்ரேக் நிறுவனம் இதுவரை கையளிக்கவில்லை என பொலிஸார் மன்றில் தெரிவிப்பு. ஜின்ரேக் நிறுவன அதிகாரியை நீதிமன்றில் முன்னிலை ஆகுமாறு உத்தரவு.

20.04.2016. –

பொதுமக்களால் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சுவிஸ் குமார், எவ்வாறு பொலிஸ் நிலையத்தில் இருந்து தப்பி சென்றார் என்பது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவு.

04.05.2016. –

வித்தியா கொலை வழக்கின் மரபணு பரிசோதனை அறிக்கை தாமதமாக கராணம் பணம் செலுத்தப்படாமையே என ஜின்டேக் நிறுவனம் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிப்பு.

04.05.2016. –

ஊர்காவற்துறை நீதிமன்றுக்கு வெளியில் வைத்து சுவிஸ் குமாரின் தாய் மற்றும் துஷாந்தனின் தாய் ஆகிய இருவரும் தன்னை மிரட்டியதாக வித்தியாவின் தாய் ஊர்காவற்றுறை பொலிஸில் முறைப்பாடு.

09.05.2016. –

வித்தியா கொலை வழக்கின் ஒன்பதாவது சந்தேக நபரான சுவிஸ் குமாருடன் தொடர்புகளை பேணியவர்கள் , தப்பி செல்வதற்கு உதவியவர்கள் , போன்றவர்கள் தொடர்பில் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என குற்ற புலனாய்வு பிரிவு பணிப்பாளருக்கு ஊர்காவற் துறை நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் உத்தரவு.

17.05.2016 –

வித்தியாவின் தாயாரை மிரட்டிய இருவரிடமும் பொலிஸார் வாக்கு மூலம் பெற்றனர்.

18.05.2016. –

வித்தியா கொலை வழக்கின் மரபணு பரிசோதனை அறிக்கையை குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவு ஊர்காவற்றுறை நீதிமன்றில் சமர்ப்பித்தனர்.

18.07.2016.-

வித்தியாவின் தாயை மிரட்டிய குற்றத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு இருந்த சுவிஸ் குமாரின் தாயாரான மகாலிங்கம் தயாநிதி சிறைச்சாலையில் சுகவீனம் காரணமாக உயிரிழப்பு.

18.07.2016. –

வித்தியா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு உள்ள சுவிஸ் குமாரும், அவரது தம்பி மகாலிங்கம் சசீந்திரன் ஆகிய இருவரும் தாயாரின் இறுதி கிரியைகளில் கலந்து கொள்ள ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இ. சபேசன் அனுமதி.
13.07.2016. –

வித்தியா கொலை வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கைகளை சட்டமா அதிபர் திணைக்களத்திடம் பாரப்படுத்தி உள்ளதாக குற்ற தடுப்பு புலனாய்வு பிரிவு பொலிசார் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் தெரிவிப்பு.

10.08.2016. –

வித்தியா கொலை வழக்கின் குற்ற தடுப்பு புலனாய்வு பிரிவின் விசாரணைகள் அனைத்தும் முடிவடைந்து விசாரணை அறிக்கைகள் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டு உள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் முன்னிலையான அரச சட்டவாதி யாழ்.மேல் நீதிமன்றில் தெரிவிப்பு.

20.09.2016. –

வித்தியா கொலை வழக்கின் குற்றவாளிகள் ,இனம் காணப்பட கூடிய நிலையில் குற்றப் புலனாய்வு பிரிவின் விசாரணை அறிக்கை உள்ளதாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் மன்றில் தெரிவிப்பு.

09.11.2016 –

வித்தியா கொலை வழக்கு தொடர்பில் மிக விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கோரி யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் சட்டமா அதிபருக்கு பணிப்புரை.

02.02.2017.-

வித்தியா கொலை வழக்கின் விசாரணைகள் முடிவுறும் தருவாயில் உள்ளதாகவும் விரைவில் நீதிமன்றில் குற்றபகிர்வு பத்திரம் தாக்கல் செய்யப்படும் என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தெரிவிப்பு.

22.02.2017 –

வித்தியா கொலை வழக்கின் 11 ஆவது சந்தேக நபர் அரச தரப்பு சாட்சியமாக மாறுவதற்கு ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் ஒப்புதல்.

22.02.2017. –

வித்தியா கொலை வழக்கு 98 சதவீத விசாரணைகள் முடிவடைந்து விட்டதாக ஊர்காவற்துறை நீதிவான் .எம்.எம். றியாழ் தெரிவிப்பு.
28.04.2017.-

வித்தியா வழக்கின் 10 ஆவது சந்தேகநபரான ஜெயவர்த்தனா ராஜ்குமார் மற்றும் 12 ஆவது சந்தேகநபரான ரவீந்திரன் ஆகியோர் சாட்சியங்கள் இல்லாமையால் வழக்கில் இருந்து விடுதலை.

04.04.2017. –

வித்தியா கொலை வழக்கின் ஆவணங்கள் அனைத்தும் சட்டமா அதிபர் திணைக்களத்தில் பரிசீலனையில் உள்ளது. இறுதி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது. என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தெரிவிப்பு.

05.05.2017. –

வித்தியா கொலை வழக்கின் குற்ற பகிர்வு பத்திரம் எதிர்வரும் 12 ஆம் திகதிக்கு முன்னர் யாழ்.மேல் நீதிமன்றில் பாரப்படுத்தப்படும் என அரச சட்டவாதி நாகரத்தினம் நிஷாந்த் மேல் நீதிமன்றில் தெரிவிப்பு.

10.05. 2017. –

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கை கொழும்பில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவர் முன்னிலையில் ‘ட்ரயல் அட் பார்’ முறையில் நடத்த சட்டமா அதிபர் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

11.05.2017. –

வித்தியா கொலை வழக்கு யாழ்.மேல் நீதிமன்றிலையே நடைபெற வேண்டும் என கோரி மாணவியின் தாய் உட்பட புங்குடுதீவு மக்கள் போராட்டம்.

12.05.2017. –

வித்தியா கொலை வழக்கு குற்றபகிர்வு பத்திர வழக்கெடுகள் யாழ். மேல் நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்டது. அதனை அடுத்து குறித்த வழக்கெடுகளை இரும்பு பொட்டகத்தில் வைத்து பாதுகாக்குமாறு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் பதிவாளருக்கு பணிப்புரை.

13.05.2017. –

இன்று வித்தியா கொலையுண்டு இரண்டாம் ஆண்டு நினைவு தினம்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com