விடுதலைப்புலிகளின் கனவுகளில் ஒன்று நிறைவேறியிருக்கிறது

விடுதலைப்புலிகள் யுத்தத்தில் மாத்திரம் ஈடுபடவில்லை. கல்வி வளர்ச்சியிலும் கூடுதல் அக்கறை காட்டினார்கள். இதனாலேயே பல்கலைக்கழகம் ஒன்றுக்குரிய கட்டுமானங்களை உருவாக்கும் நோக்கில் அறிவியல் நகரை உருவாக்கி கட்டிட நிர்மாணப் பணிகளையும் முன்னெடுத்திருந்தார்கள். இப்போது அறிவியல் நகரில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விவசாயபீடம் இயங்கி வருகிறது. நாங்களும் பண்ணையாளர்களுக்கும், எமது கால்நடை அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும் அறிவூட்டும் நோக்கில் பிராந்திய கால்நடை பயிற்சி நிலையம் ஒன்றை நிர்மாணித்திருக்கிறோம். அந்தவகையில் விடுதலைப்புலிகளின் கனவுகளில் ஒன்று இன்;று நிறைவேறியிருக்கிறது. அதை எமது திணைக்களம் செய்து முடித்திருப்பதையிட்டு நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன் என்று வடக்கு கால்நடைத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி அறிவியல் நகரில் நிர்மாணிக்கப்பட்ட பிராந்திய கால்நடைப் பயிற்சி நிலையம் நேற்று சனிக்கிழமை (29.04.2017) திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

விடுதலைப்புலிகள் பல்மருத்துவப் பயிற்சி நிலையம் ஒன்றை நிர்மாணிக்க ஆரம்பித்திருந்தார்கள். அரைகுறையாக இருந்த அந்தக் கட்டிடத்தின் அத்திவாரத்தின் மீதே நாங்கள் கால்நடைப் பயிற்சி நிலையத்தைக் கட்டிமுடித்திருக்கிறோம். சகல வசதிகளையும் கொண்டதாக இதனை அமைப்பதற்கு 50 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இந்நிதியை மாகாண அரசு, மத்திய அரசு மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் வழங்கியுள்ளன. ஒரே தடவையில் இவ்வளவு பெருந்தொகைப் பணத்தைப் பெறுவதில் இருக்கக்கூடிய சிரமங்கள் காரணமாகவே இதன் கட்டுமானப் பணிகளைப் பூர்த்தி செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது.

கால்நடை அபிவிருத்தியில் அதற்கான பயிற்சி மிகவும் அவசியம். எமது கால்நடை அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் பண்ணையாளர்களும் பயிற்சியைப் பெறுவதற்குப் பெரும்சிரமங்களின் மத்தியிலேயே கண்டியில் குண்டகசாலையில் உள்ள பயிற்சி நிலையத்துக்குச் சென்று வருகிறார்கள். கிளிநொச்சியில் பிராந்திய கால்நடைப் பயிற்சி நிலையத்தை நாம் இப்போது அமைத்திருப்பதன் மூலம், அவர்கள் சிரமங்கள் இல்லாமல் பயிற்சிகளை இனிமேல் இங்கேயே பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் சி.வசீகரனின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வடமாகாணசபை உறுப்பினர் வை.தவநாதன், விவசாய அமைச்சின் செயலாளர் இ.வரதீஸ்வரன், கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் க.சிவகரன், மத்திய விவசாய ஆராய்ச்சிப் பிரிவின் மேலதிக பணிப்பாளர் எஸ்.ஜே.அரசகேசரி ஆகியோருடன் கால்நடை வளர்ப்பாளர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.

இந்நிகழ்ச்சியின்போது தேசிய உணவு உற்பத்தித் திட்டத்தின்கீழ் நடாத்தப்பட்ட சிறந்த பாற்பசுப் பண்ணையாளர்களுக்கான போட்டியில் வடக்கு மாகாணத்தில் வெற்றி பெற்ற 54 பண்ணையாளர்களுக்கு பணப்பரிசாக மொத்தம் 33 இலட்சம் ரூபா பெறுமதியான காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com