விக்னேஸ்வரனை வெளியேற்றுமாறு நான் வலியுறுத்தினேன் – உண்மையை உடைத்த சுமந்திரன்

அவர் முதலமைச்சராக இருக்கலாம் முன்னாள் நீதியரசராக இருக்கலாம். ஆனால் அவர் கட்சிக்கு விரோதமாக நடந்திருக்கிறார். எமது கட்சி அல்லாத வேறு ஒரு கட்சிக்கு ஆதரவளிக்கவேண்டும் என்று சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்டிருக்கிறார். எனவே அவரை கட்சியிலிருந்து நீக்குமாறு நான் கோரிக்கை விடுத்திருக்கின்றேன் என நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

வடக்கு மாகாண முதலமைச்சரை முதலமைச்சர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் நீக்கவேண்டும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்குள் சுமந்திரன் அணி ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாகாணசபை உறுப்பினர்களும் கடும் முனைப்புக்காட்டிவருவதாக அண்மைக்காலங்களாக செய்திகள் வெளியாகிவரும் பின்னணியில் வடக்கு முதல்வரை வெளியேற்றும் முனைப்பின் சூத்திரதாரி என நம்பப்படும் சுமந்திரன் முதல்வர் விக்னேஸ்வரனை கட்சியிலிருந்து நீக்குமாறு தான் கட்சியிடம் கோரிக்கை விடுத்ததாக அவுஸ்திரேலிவிலிருந்து ஒலிபரப்பாகும் வானொலி ஒன்றிற்கு அளித்திருந்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
இது தொடா்பில் சுமந்திரன் மேலும் தெரிவிக்கையில்,
நாம் நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் கனடாவிற்குச் சென்று தேர்தல் நிதிசேகரிப்பில் ஈடுபட்டு வருமாறு கோரிக்கை விடுத்தோம். அப்போது தனக்கு முழங்கால் ஏலாது எனவே அங்கு செல்ல முடியாது எனக் கூறிய அவர் பின்னர் அமெரிக்காவிற்குச் சென்றுவந்தார். அப்போதும் கனடாவிக்குச் சென்றுவருமாறு கூறினோம் அவர் செல்லவில்லை. வடக்கு மாகாண சபைத் தேர்தல் காலத்தில் நாங்கள் கனடா சென்று நிதி சேகரிப்பில் ஈடுபட்டோம்.
ஏற்கனவே ஜனவரியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் பொது நாம் குறிப்பிட்ட ஒருவரிற் வாக்களிக்குமாறு வலியுறுத்த கட்சிநிலைப்பாட்டை மீறி இரு உறுப்பினர்கள் தேர்தலில் நடுநிலமை வகிக்குமாறு மக்களிடம் வலியுறத்தினர். அதனால் அவர்களை கட்சியிலிருந்துர் இடைநிறுத்தி ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தினோம்.
அப்படியிருக்க முதலமைச்சர் கட்சிக்கு எதிராக செயற்பட்டிருக்கிறார். நடுநிலையாக இருக்கிறேன் என்று ஒருதடவை சொன்னார், ஊமையாய் இருக்கப்போகிறேன் என இன்னொருதடவை சொன்னார். பிறகு எப்படியானவர்கள் தெரிவுசெய்யப்படவேண்டும் என அடையாளம்காட்டுகின்றபோது மிகமிகத் தெளிவாக ஒரு மாற்றுக்கட்சியைச் சுட்டிக்காட்டி அறிக்கையினை வெளியிட்டார். எந்த அரசியற் கட்சியும் அவ்வாறு உறுப்பினர் ஒருவர் செயற்படுவதை அனுமதிக்காது என்றார் அவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com