விக்கியின் அறிக்கைக்கு சுமந்திரன் பதிலறிக்கை

வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் வெளியிட்டிருந்த அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்றிரவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:-

நேற்றைய தினம் வட மாகாண சபை முதலமைச்சர் விக்னேஸ்வரன் விடுத்த அறிக்கையில் பொதுத்தேர்தல் நேரத்தின் போது கட்சிக்கு எதிராக செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டிற்கு தன்னுடைய நீண்ட விளக்கத்தை கொடுத்திருக்கின்றார். இச்சம்பவங்கள் நடைபெற்றன என்று நான் கூறியதை அவரது அறிக்கை உறுதிப்படுத்துவது வரவேற்கத்தக்கது. அவற்றிற்கு அவர் கொடுக்கும் வியாக்கியானங்கள் நியாயமானதா? இல்லையா? என்பதை கட்சி தீர்மானிக்கும்.

வடக்கு மாகாணத்தின் முதலமைச்சராக செயற்படுவதற்கு என்று விக்னேஸ்வரன், இன்றைய தமிழ் மக்களின் தலைவரான சம்பந்தனால் விசேடமாக தெரிவு செய்யப்பட்டவர். தலைவரின் இந்த தெரிவுக்கு வட மாகாண சபை தேர்தலின் போது மக்கள் தமது ஏகோபித்த ஆதரவை வெளிப்படுத்தினார்கள். மக்களின் இந்த ஆதரவானது தொடர்ந்தும் பல்வேறு தேர்தல்களில் வெளிக்காட்டப்பட்டிருந்தன. தமிழ் மக்களுக்கும் அவர்களது தலைமைக்கும் புனிதமான உறவு ஒன்று இருக்கிறது. இந்த உறவை துண்டிக்க எத்தனித்தவர்கள் தொடர்ந்து மக்களால் நிராகரிக்கப்பட்டார்கள்; தொடர்ந்தும் நிராகரிக்கப்படுவார்கள். கட்சிக்கும் கட்சித் தலைமைக்கும் விசுவாசமாக நடப்பது எம் ஒவ்வொருவரினதும் இன்றியமையாத கடமையாகும்.

என்னைப் பொறுத்தவரையில் இந்த கடமையை நிறைவேற்றுவதில் எந்த விட்டுக்கொடுப்பிற்கும் இடம் கிடையாது. கட்சி சம்பந்தமான என்னுடைய செயற்பாடுகளில் இவ்வெளிப்பாடு தொடர்ந்து பிரதிபலிக்கும். தமிழ் மக்களின் தலையாய கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமையை குலைப்பதற்கான சதித்திட்டங்களிற்கு ஆளாகாமல் எமது மக்களின் விடிவிற்காகவும் நலன்களுக்காகவும் உழைக்க வேண்டியது எம் ஒவ்வொருவரினதும் கடமையாகும். இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் வட மாகாண சபையானது வினைத்திறன் உள்ளதாக செயற்பட வேண்டியது அத்தியாவசியமானதாகும்.

இன்றைய மாகாண சபை முறையில் இருக்கும் குறைபாடுகளை கலைந்து அதிகாரப் பகிர்வை அர்த்தம் உள்ளதா நாம் முனைப்பாக செயற்படும் அதேவேளை, இருக்கின்ற அதிகாரங்களையும் கிடைக்க கூடிய வளங்களையும் மக்கள் நலன்களுக்காக பயன்படுத்துவதற்காகவே இந்த நிர்வாகத்தை பொறுப்பெடுத்தோம். அந்த தருணத்திலிருந்து முதலமைச்சரின் பல வேண்டுகோள்களுக்கு இணங்கி அவருக்கும் வட மாகாண சபை நிர்வாகத்திற்கும் உதவியாக நான் செயற்பட்டதைபோல, எதிர்காலத்திலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சராக பதவியில் இருக்கும் எவருக்கும் எனது பூரண ஒத்துழைப்பை வழங்குவேன் என உறுதியளிக்கிறேன்.

இன்று எழுந்திருக்கின்ற சந்தர்ப்பத்தை முற்றுமுழுதாக எமது மக்களின் நன்மைக்கும் விடிவுக்குமாக மிகுந்த நிதானத்தோடு உபயோகித்து, வடக்கு மாகாண சபையில் சட்டதிட்டங்களை இயற்றி சர்வதேசத்திடமிருந்து வருகின்ற உதவிகளை எடுத்து உபயோகித்து நிர்வாகத்தை வினைத்திறன் மிக்கதாக மாற்றி எமது மக்களின் கடற்றொழில், விவசாயம், சுகாதாரம், கல்வி, தொழில்வாய்ப்பு, தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் வாழ்க்கைதரத்தை உயர்த்தும் அபிவிருத்தி திட்டங்கள் போன்றவற்றை திறம்பட செயற்றுவிக்க வேண்டிய பொறுப்பிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தப்பித்துகொள்ள முடியாது. இது சம்பந்தமாக எனது முழுமையான ஒத்துழைப்பை இத்தருணத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஏற்று உபயோகிப்பார் என்று எதிர்பார்க்கிறேன்.

– See more at: http://www.jaffnazone.com/?p=24335&utm_source=dlvr.it&utm_medium=facebook#sthash.9SKiPTkM.dpuf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com