சற்று முன்
Home / செய்திகள் / வாழ்வியல் உரிமைகளை மீட்டெடுக்கும் வரை இரணைதீவு மக்களுடன் போராடுவேன் – மாவை எம்.பி உறுதி

வாழ்வியல் உரிமைகளை மீட்டெடுக்கும் வரை இரணைதீவு மக்களுடன் போராடுவேன் – மாவை எம்.பி உறுதி

இரணைதீவு மக்களின் வாழ்வியல் உரிமைகளை மீட்டெடுக்கும் வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து அவர்களுடன் இணைந்து செயற்படும் என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

இரணைதீவு பகுதியில் தமது பூர்வீக நிலங்களை மீட்பதற்காக போராடிவரும் மக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று சென்று பார்வையிட்டு, அவர்களுடன் கலந்துரையாடினர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சிவஞானம் சிறீதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் த.குருகுலராஜா ஆகியோர் நேற்று இரணைதீவுக்குச் சென்றிருந்தனர். இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்ததுடன், அவர்களது போராட்டத்திற்கு தமது முழுமையான ஆதரவுகளையும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்போது கருத்து வெளியிட்ட மாவை சேனாதிராசா, தமிழர் தாயகப் பகுதிகளிலிருந்து ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேறி எமது மக்களின் நிலத்தில் நிம்மதியாக வாழ வேண்டும். எமது மக்களுக்கு விடுதலை கிடைக்க வேண்டும் என்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் தொடர்ந்தும் போராடி வருகின்றோம்.

எமது மக்களின் நிலங்கள் அவர்களிடமே வழங்கப்பட வேண்டும் என நாம் நாடாளுமன்றத்திலும், சர்வதேச அரங்கிலும் தொடர்ந்தும் குரல்கொடுத்து வருகின்றோம். அதன் விளைவாக ஆக்கிரமிப்பாளர்கள் கையகப்படுத்தி வைத்திருந்த இராணுவத்தின் பிடியிலிருந்த சில பகுதிகள் எமது மக்களிடம் வழங்கப்பட்டுள்ள போதிலும் இன்னும் பெருமளவான மக்கள் வாழ்விடங்கள் இராணுவத்தின் பிடியிலுள்ளன.

அந்த நிலங்களும் எமது மக்களிடம் வழங்கப்பட வேண்டும் என்பதற்காக நாம் தொடர்ந்தும் போராடி வருகின்றோம். இரணைதீவு மக்களுடைய பூர்விக வாழ்விடங்கள் இன்னமும் உங்களிடம் அரசினால் சட்டப்படி கையளிக்காத நிலை காணப்படுகின்றது.

இந்த நிலை மாற வேண்டும். இரணைதீவு மக்களுடைய பூர்விக வாழ்விடங்கள் அவர்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என்பதற்காக எமது நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தொடர்ந்தும் நாடாளுமன்றத்தில் குரல்கொடுப்பதுடன் தன்னாலான முயற்சிகளை எடுத்துள்ளார். நீங்கள் இங்கு வருவதற்குக்கூட உங்களுக்குத் துணையாக அவர் இருந்துள்ளார். அண்மையில் உங்களது வாழ்வுரிமையை வலியுறுத்தி ஜனாதிபதி அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

உங்களது வாழ்விடம் உங்களிடம் வழங்கப்பட வேண்டும் என்பதற்காக அவர் பல வழிகளில் முயற்சித்து வருகின்றார். இன்று கூட அவரது ஒழுங்கமைப்பில் தான் நாம் இங்கு வந்து உங்களைச் சந்தித்துள்ளோம். எனவே எமது மக்களது பூர்விக வாழ்விடங்கள் எமது மக்களிடம் கையளிக்கப்பட்டு எமது மக்களும் சகல உரிமைகளையும் பெற்று நிம்மதியாக வாழும் வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் ஓயப்போவதில்லை. எமது மக்களுக்கான விடுதலை நோக்கிய எமது நீதியின் வழியான பயணம் தொடரும் என குறிப்பிட்டுள்ளார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com