சற்று முன்
Home / செய்திகள் / வாடகை பெறப்படாமல் கொடுக்கப்பட்ட மாநகரக் கட்டடம் – ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினார் மாநகர உறுப்பினர் தயாளன்

வாடகை பெறப்படாமல் கொடுக்கப்பட்ட மாநகரக் கட்டடம் – ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினார் மாநகர உறுப்பினர் தயாளன்

சங்கிலியன் வீதியில் நல்லூர் பிரதேச ஆரம்ப சுகாதார மையம் இயங்கிய கட்டடத்தை இராணுவப் புலனாய்வாளர்களுக்கு வாடகைக் கட்டணம் ஏதுமின்றி யாழ் மாநகரசபையில் கடந்த ஆட்சியார்களான ஈபிடிபியினர் வழங்கியிருந்ததாகவும் யாழ்ப்பாணம் மாநகரசபையின் கடந்த ஆட்சிக்காலத்தின்போது ( 2014ம் ஆண்டு ஒக்டோபர் ) வாடகைக்குக் கொடுக்கப்பட்ட மாநகரக் கட்டடத்துக்கு 2017ம் ஆண்டு மே மாதம் வரை வாடகைப்பணம் செலுத்தப்பட்டிருக்கவில்லை என்ற தகவலையும் யாழ் மாநகரசபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளரான லோகதயாளன் இன்று சபையில் அம்பலப்படுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணம் மாநகர சபையில் முன்னர் இடம்பெற்ற ஆட்சிக் காலத்தில் சபையினை நிர்வாகம் செய்த கட்சி தமது கட்சி சார்பான அமைப்புகளிற்கும் தமது புகழ்ச்சிக்குமாக சபைக்கு வரவேண்டிய நிதிகளை வேண்டுமென்றே தெரிந்தும் இழக்கப்பட்டுள்ளதாக குறித்த உறுப்பினர் தனது கன்னி உரையிலேயே குறிப்பிட்டிருந்தார்.

அதனை முன்னர் ஆட்சி செய்த கட்சிசார் உறுப்பினர் ஒருவர் எழுந்தமானமாக இங்கே குற்றம் சாட்டவேண்டாம் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து களத்தில் இறங்கிய உறுப்பினர் தகவல் அறியும் சட்டம் உள்ளிட்ட வழிமுறைகள் ஊடாக சகல ஆவணங்களையும் திரட்டி இன்று சபையில் சமர்ப்பித்து குறித்த மோசடியினை அம்பலப்படுத்தியிருந்தார்.

இது தொடர்பில் அவரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரரணையில்,

“குறித்த விடயத்தினை நான் இங்கே ஆவண ரீதியாக நிரூபிக்க முடியும் என்பதன் அடிப்படையில் யாழ்ப்பாணம் மாநகர சபைக்குச் சொந்தாக யாழ் நகரின் மத்தியின் கடைத் தொகுதி மேல் மாடியில் இலக்கம் 05 கடையினை சபையின் அனுமதியினைப் பெறாமல் முன்னாள் முதல்வர் தன்னிச்சையாக வழங்கியுள்ளார்.

இதன் அடிப்படையில் 2014ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் 2017ம் ஆண்டு மே மாதம் வரையான காலப் பகுதிக்கான வாடகை மற்றும் வரி , தண்டம் உட்பட 10 லட்சத்து 16 ஆயிரம் ரூபா சபைக்குச் செலுத்த வேண்டியுள்ளது. குறித்த பணம் சபைக்குச் செலுத்தப்படவில்லை. இதேபோன்று இலக்கம் 2 கடையினையும் வழங்கிய வகையில் 56 ஆயிரத்து 12 ரூபா நிலுவை உள்ளது.

இதேபோன்று சங்கிலியன் வீதியில் அமைந்திருந்த சபைக்கான கட்டிடத்தினை புலனாய்வாளர்களிற்கு கொடுத்த நிலையில் அக் கட்டிடத்தில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையம் 22 மாதங்களாக வெளியார் வீட்டில் வாடகை அடிப்படையில் இயங்கியது இதற்காக மாதம் ஒன்றிற்கு 13 ஆயிரம் ரூபா வீதம் பணம் வழங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையிலும் 2 லட்சத்து 76 ஆயிரம் ரூபா பணம் வீணடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு குறித்த மூன்று சம்பவங்களிற்குமான சான்று ஆவணங்களும் என் கை வசம் உண்டு இதனால் சபைக்கு ஏற்பட்ட நட்டம் மற்றும் நிதி கிடைக்காமை போன்றவற்றினால் 13 லட்சத்து 48 ஆயிரத்து 12 ரூபா பணம் வீணக்கப்பட்டமை சபை ஆவணங்கள் மூலமே உறுதியாகின்றது. எனவே இதனையும் இது போன்ற வேறு சம்பவங்கள் இருப்பினும் அவற்றையும்கோரிப்பெற்று உடன் ஓர் வலுவான குழுவை நியமித்து விசாரணை செய்து சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என இச் சபையில் தீர்மானத்தை முன்மொழிந்து கோருகின்றேன்” – எனத் தெரிவித்தார்.
அதற்கான ஆவணங்களும் சபையில் காண்பிக்கப்பட்டன

இந்நிலையில் தனது ஆட்சிக்காலத்திலேயே குறித்த கட்டடம் வாடகைக்கு வழங்கப்பட்டதை ஏற்றுக்கொண்டிருந்த முன்னாள் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா கட்டடம் வழங்கப்பட்ட ஓரிரு மாதங்களிலேயே தமது ஆட்சிக்காலம் முடிவுற்றுவிட்டது என்றும் பின்னர் வாடகை அறவிடாததற்கும் தனக்கும் சம்பந்தமில்லை எனவும் சங்கிலியன் வீதியில் உள்ள குறித்த கட்டடம் இராணுவப் புலனாய்வாளர்களுக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை என்றும் பொலிசார் அலுவலகம் அமைக்கவே வழங்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்து உரையாற்றிய உறுப்பினர் லோகதயாளன் பொலிசார் அலுவலகம் அமைக்க வழங்கப்பட்டிருந்த அக்காலப்பகுதிகளில் ஏன் பொலிஸ் அலுவலகம் என ஒரு விளம்பரப் பலகை கூட வைக்கவில்லை என்றும் அங்கு மக்களுடன் தொடர்புடைய எந்தவிதமான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை இது தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பது என சபையில் தீர்மானிக்கப்பட்டது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com