வாக்கெடுப்பு முடிவுகள் முதலமைச்சருக்கு சாதகம் – பொருளாதார வலயம் ஓமந்தையில்

31-2பொருளாதார மத்திய நிலையத்தை அமைக்கும் இடம் தொடர்பில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 21 மேலதிக வாக்குகளால் ஓமந்தை தெரிவு செய்யப்பட்டுள்ளது.
வடமாகாணத்துக்கென முன்மொழியப்பட்டு வவுனியாவில் அமைக்கப்படவிருந்த பொருளாதார மத்திய வலயம் எவ்விடத்தில் அமைக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் சில காலமாக சரச்சைக்குரியதாகவிருந்த நிலையில் அது தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சரினால் நடாத்தப்பட்ட வாக்கெடுப்பின் அடிப்படையில் 21 மேலதிக வாக்குகளால் ஓமந்தை தெரிவு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் அலுவலகம் விடடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் முழு விபரம் வருமாறு.

பல விவசாய அமைப்புக்கள், துறைசார் நிபுணர்கள், கல்விமான்கள், பொது அமைப்புக்கள் போன்றவை இந் நிலையம் ஒமந்தையில் அமைய வேண்டுமென்றே கோரினார்கள்.
இன்னும் சிலர் தாண்டிக்குளத்தில் விவசாய பண்ணையில் அமைய வேண்டுமென அடம் பிடித்தார்கள். இதனால் இவ்வமைவிடம் எங்கு அமைய வேண்டுமென்பதை தீர்மானிப்பதற்காக 03.07.2016ம் திகதி தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமாகிய கௌரவ இரா.சம்பந்தன் தலைமையில் கொழும்பில் இடம்பெற்ற கூட்டத்தில் வடமாகாண சபையின் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் எடுக்க முடியாத காரணத்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடமாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மத்தியில் கருத்துக் கணிப்பொன்றை நடாத்தி தீர்மானம் எடுக்குமாறு கௌரவ முதலமைச்சர் அவர்களை கௌரவ.இரா.சம்பந்தன் அவர்கள் கேட்டுக் கொண்டார். இவ் வழிகாட்டலின் அடிப்படையில் 30 மாகாணசபை உறுப்பினர்கள், 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் வாக்கெடுப்பு ஒன்று நடாத்தப்பட்டு இன்று 11.07.2016ம் திகதி நண்பகல் 12.00 மணி வரை வாக்குச்சீட்டுக்கள் பெறப்பட்டன.

இவ்வாக்குச்சீட்டுக்களின் முடிவுகளின் படி 30 மாகாண சபை உறுப்பினர்களில் 21 பேர் வாக்களித்துள்ளனர். அவர்களில் 18 பேர் ஓமந்தைக்கும் 03 பேர் தாண்டிக்குளத்திற்கும் வாக்களித்துள்ளனர். 09 மாகாண சபை உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. அதே போல் பாராளுமன்ற உறுப்பினர்கள் 10 பேரில் 05 பேர் வாக்களித்துள்ளனர். அதில் 03 பேர் ஓமந்தைக்கும் 02 பேர் தாண்டிக்குளத்துக்குமாக வாக்களித்துள்ளனர். ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கவில்லை.
இதனடிப்படையில் ஓமந்தைக்கு சார்பாக 21 வாக்குகளும் தாண்டிக்குளத்திற்கு சார்பாக 05 வாக்குகளும் கிடைக்கப் பெற்றுள்ளன. இவ் வாக்குச் சீட்டுக்கள் பதிவுத்தபால் மூலமும், மின்னஞ்சல் மூலமும், தொலைநகல் மூலமும் அனுப்பப்பட்டன.
இவ் வாக்கெடுப்பின் மூலம் ஆரம்பத்திலிருந்தே பலரும் விருப்பம் தெரிவித்த படி ஓமந்தை தான் பொருத்தமான அமைவிடம் என்பது உறுதியாகியுள்ளது. இத்தகைய ஒரு தீர்மானத்தை எடுப்பதற்கு வாக்களித்த பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோருக்கு கௌரவ முதலமைச்சர் அவர்கள் நன்றிகளைத் தெரிவத்துக் கொள்கிறார். அத்துடன் இத்தகைய ஒரு தீர்மானத்திற்கு தூண்டு கோலாக தமது கருத்துக்களை அச்சமின்றியும் எந்த விதமான எதிர்பார்ப்புக்களின்றியும் வெளியிட்ட பொதுமக்கள், துறைசார் நிபுணர்கள், கல்விமான்கள், விவசாய அமைப்புக்கள், அரசியல் பிரமுகர்கள், பொது நிறுவனங்கள் ஆகியவற்றிற்கும் கௌரவ முதலமைச்சர் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறார்.
குறிப்பாக மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சி.தவராசா அவர்களுக்கும், கௌரவ உறுப்பினர் வை.தவநாதன் அவர்களுக்கும் தங்களுடைய ஆதரவை பத்திரிகைகள் மூலம் வெளியிட்டமைக்கு கௌரவ முதலமைச்சர் அவர்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறார்.
இது சம்பந்தமான செய்திகளை வெளியிட்டும், நிபுணர்களின் கட்டுரைகளை வெளியிட்டும், கேலி சித்திரங்கள் மூலம் கருத்துக்களைத் தெரிவித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு தெளிவை ஏற்படுத்திய சகல பத்திரிகைகள், இணையத்தளங்கள், சகல ஊடகங்களுக்கும் கௌரவ முதலமைச்சர் அவர்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறார் என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com