வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இலங்கை அசமந்தம் – இணை அனுசரணை நாடுகள் அதிருப்தி

ஜெனிவாவில் இலங்கை வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில், மெதுவான முன்னேற்றங்களே இருப்பது குறித்து, இணை அனுசரணை நாடுகள், நேற்று ஏமாற்றம் வெளியிட்டுள்ளன.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நேற்று இலங்கை தொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணையானரினால் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையை அடுத்து, நடந்த விவாதத்திலேயே, ஜெனிவா தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கிய நாடுகள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தின.

அமெரிக்கா, பிரித்தானியா, மசிடோனியா, மொன்ரனிக்ரோ ஆகிய இணை அனுசரணை நாடுகள், இணைந்து, நேற்றைய அமர்வின் போது கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட;டன.

அதில், “இலங்கை பாதுகாப்பு படை அதிகாரிகள் சிலர் அதிகார மீறல்களில் ஈடுபடுவதாக வரும் அறிக்கைகள் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மதங்களுக்கிடையிலான வன்முறை, தாக்குதல்கள், சிறுபான்மையினருக்கு எதிரான இனவெறுப்பு பேச்சு உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள், நல்லிணக்க முயற்சிகளின் தேவையை வலியுறுத்தியிருக்கின்றது.

30/1 தீர்மானத்துக்கு இலங்கை இணை அனுசரணை வழங்கி ஒப்புக்கொண்டது போல, அரசியலமைப்பு மறுசீரமைப்பு மூலம், அரசியல் அதிகாரத்தைப் பகிர்ந்தளித்தல், நிலையான அமைதி, மற்றும் வன்முறைகள் மற்றும் மீறல்கள் மீள நிகழாமையுடன் இணைந்ததாக உள்ளது.

அனைத்து சமூகங்களையும் சேர்ந்த காணாமல்போனவர்களின் குடும்பங்கள், பதில்களுக்காக நீண்டகாலம் காத்திருக்கிறார்கள். எனவே காலதாமதமின்றி, காணாமல் போனோர் பணியகம், முழுமையாக செயற்பட வேண்டும்.

30/1 தீர்மானத்துக்கு அமைய, ஏனைய நிலைமாறுகால பொறிமுறைகளை உருவாக்குதற்கான அர்த்தமுள்ள நகர்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

காத்திரமான பாதுகாப்புத் துறை மறுசீரமைப்புகள், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குதல், இலங்கை இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவித்தல் என்பன, நம்பிக்கையைக் கட்டியெழுப்ப உதவும்.

உறுதியான தலைமைத்துவம் மற்றும் தெளிவான நடவடிக்கைக் காலவரம்புடன், அனைத்து இலங்கையர்களின் ஆதரவுடன் மறுசீரமைப்பு, நீதி நிகழ்ச்சிநிரல், மற்றும் நீண்டகால நல்லிணக்கத்துக்குத் தேவையான நடவடிக்கைகளை இந்த அரசாங்கத்தினால், எடுக்க முடியும்.

கடந்தகால பிளவுகளுக்குத் திரும்பாமல் தவிர்ப்பதற்கு இலங்கை இன்னமும் வரலாற்று வாய்ப்புகளைக் கொண்டிருக்கிறது.

34/1 மற்றும் 30/1 தீர்மானங்களை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் மூலம், அனைத்து இலங்கையர்களுக்கும் பாதுகாப்பான, அமைதியான, செழிப்பான எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்று நாம் உறுதியாக நம்புகிறோம்.” என்றும் இணை அனுசரணை நாடுகள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com