வாக்காளர்களுக்கு பணம் – அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் 23ம் திகதிக்கு ஒத்தி வைப்பு!

வாக்காளர்களுக்கு பணமும், பரிசுப்பொருட்களும் வினியோகம் செய்யப்படுவதாக அதிகளவில் புகார்கள் வந்துள்ளதை தொடர்ந்து, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதி வாக்குப்பதிவை மே 23–ம் தேதிக்கு ஒத்தி வைத்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைக்கு நாளை (திங்கட்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில், அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜியும், தி.மு.க. சார்பில் கே.சி.பழனிச்சாமியும், ம.தி.மு.க. சார்பில் கோ.கலையரசனும், பா.ஜ.க. கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் பிரபுவும், பா.ம.க. சார்பில் ம.பாஸ்கரனும் போட்டியிடுகிறார்கள்.

தமிழகம் முழுவதும் நேற்று மாலை 6 மணியுடன் பிரசாரம் முடிவடைந்த நிலையில், அரவக்குறிச்சி தொகுதியின் வாக்குப்பதிவு தள்ளி வைக்கப்படுவதாகவும், அந்த தொகுதிக்கு மட்டும் மே 23–ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் நேற்று இரவு திடீரென்று அறிவித்திருக்கிறது.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவில், ”அரவக்குறிச்சி தொகுதியில் பணமும், பரிசுப்பொருட்களும் வினியோகிக்கப்படுவதாக தேர்தல் ஆணையத்திற்கு ஏராளமான புகார்கள் வந்துள்ளன. கடந்த மாதம் 22–ம் தேதி அன்புநாதன் என்பவரின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.4 கோடியே 77 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. அத்துடன் 200 வேட்டி, சேலைகளும், சில ஆவணங்கள், ரூபாய் நோட்டுகளை எண்ணும் மெஷின்கள், பதிவு செய்யப்படாத ஆம்புலன்சுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், அந்த தொகுதியின் தி.மு.க. வேட்பாளர் கே.சி.பழனிச்சாமியின் வீடு, கரூர் மற்றும் சென்னையில் உள்ள அவரது மகன் கே.சி.சி.சிவராமனின் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனைகளில் மொத்தம் ரூ.1 கோடியே 98 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் கே.சி.பழனிச்சாமியின் வீட்டில் இருந்து மட்டும் பறிமுதல் செய்யப்பட்ட தொகை ரூ.95 லட்சம் ஆகும்.

இந்த தொகுதியில் பணம் வினியோகிப்படுவதாக 33 புகார்கள் வந்துள்ளன. இது தொடர்பாக 7 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. அதனால், அரவக்குறிச்சி தொகுதியில் வேட்பாளர்களும், அரசியல் கட்சிகளும் சட்டவிரோதமாக செயல்பட்டு வாக்காளர்களுக்கு பணமும், பரிசுப்பொருட்களும் கொடுப்பதாக தெரியவந்து உள்ளது. இதனால் அரவக்குறிச்சி தொகுதியில் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் வாக்குப்பதிவை நடத்துவதற்காக சூழ்நிலை இல்லாததால், அங்கு 16–ம்தேதி (நாளை) நடைபெறுவதாக இருந்த தேர்தல் தள்ளி வைக்கப்படுகிறது.

அந்த தொகுதியில் 16–ம் தேதிக்கு பதிலாக வருகின்ற 23–ம் தேதி (திங்கட்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறும். அந்த தொகுதியின் வாக்குகள் 25–ம் தேதி (புதன்கிழமை) எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்” என்று கூறப்பட்டு உள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com