”வாகனத்தை நிறுத்திவிட்டு ரீ குடிப்பதற்குள் 80 இலட்சம் மாயமாகிவிட்டது“ – திரைப்பட பாணியில் கதை சொன்ன யாழ் வங்கி ஊழியர்கள் !!

அநுராதபுரத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு எடுத்துவரப்பட்ட 80 இலட்ச ரூபாய் பணம் திரைப்பட பாணியில் களவாடப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது ,

அநுராதபுரத்தில் உள்ள அரச வங்கி ஒன்றில் இருந்து யாழில் உள்ள வங்கிக்கு வாகனத்தில் இரகசியமான முறையில் 80 இலட்ச ரூபாய் பணம் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை எடுத்துவரப்பட்டது. குறித்த பணத்துடன் வங்கி ஊழியர்கள் மூவர் மற்றும் ஆயுதம் தாங்கிய பாதுகாப்பு உத்தியோகஸ்தர் ஒருவர் வாகனத்தில் பயணித்துள்ளனர்.பயணத்தின் இடைநடுவில் வங்கி ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் தேநீர் அருந்துவதற்காக வாகனத்தை விட்டு இறங்கி கடைக்கு சென்றுள்ளனர். தேநீர் அருந்திய பின்னர் வாகனத்திற்கு திரும்பிய போது வாகனத்தில் இருந்த பணம் மாயமானதை அறிந்துள்ளனர்.

அது தொடர்பில் குறித்த வங்கியின் யாழ். பிராந்திய முகாமையாளருக்கு தகவல் வழங்கியுள்ளனர். அதனை தொடர்ந்து பிராந்திய முகாமையாளர் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்தார்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸ்துறையினர் பணத்தினை கொண்டு சென்ற வங்கி ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகஸ்தரை சந்தேகத்தில் கைது செய்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்களே பணத்தினை எடுத்துவிட்டு நாடகமாடுகின்றார்களோ எனும் கோணத்திலும் , பல்வேறு கோணத்திலும் பொலிஸ்துறையினர்; விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

அதேவேளை பணம் மாயமான இடம் குறித்த தகவலை தெரிவிக்க பொலிஸ்துறையினர் மறுத்து விட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com