வவுனிய அரச அதிபரை மாற்றாவிட்டால் அரசிற்கான நல்லெண்ண ஆதரவை வாபஸ்பெறவேண்டும் – வன்னி எம்பிக்கள்

வவுனியா மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக மறுபடியும் சிங்கள மொழி பேசும் பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த ஓர் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதை ஆட்சேபித்துள்ள வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வவுனியா மாவட்ட வடமாகாணசபை உறுப்பினர்கள் புதிய அரசாங்கத்திற்கு அளித்துவரும் நல்லெண்ண அடிப்படையிலான ஆதரவை கூட்டமைப்பின் தலைமைகள் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என கோரியிருக்கின்றனர்.
புதன்கிழமை காலை வவுனியா சுவர்க்கா தங்ககத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்த அவர்கள், இது தொடர்பில் கூட்டு அறிக்கையொன்றையும் வெளியிட்டிருக்கின்றனர்.
கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளில் ஒன்றாகிய ஈழ மக்கள் புரட்சிகரன முன்னணியின் சார்பில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், டாக்டர் சிவமோகன், வடமாகாண சபை உறுப்பினர்களான ம.தியாகராசா, ஆர்.இந்திரரசா, எம்.பி.நடராசா ஆகியோரும் தமிழரசுக் கட்சியின் சார்பில் வடமாகண சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சத்தியலிங்கம், தமிழீழ மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் ஆகியோர் இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.
முரண்பாட்டுக்கும் சர்ச்சைக்குமுரிய வவுனியா மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபர் நியமனம் தொடர்பில் தாங்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, உள்நாட்டு அலுவல்கள் மற்றும் பொதுநிர்வாக அமைச்சர் ஆகியோரை சந்தித்து, தமது ஆட்சேபனையையும் நியாயங்களையும் எடுத்துக்கூறிய போது, தமிழர் ஒருவரை அந்தப் பதவிக்கு நியமிப்பதாக உத்தரவாதம் அளித்த பின்னர், மறுபடியும் சிங்கள மொழி பேசும் பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்தவர் நியமிக்கப்பட்டுள்ளமையானது, ஜனாதிபதி தேர்தல் மற்றும் ஆட்சி மாற்றத்துக்கு நிபந்தனையற்ற ஆதரவளித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும், வாக்களித்த தமிழ் மக்களையும் ஏமாற்றும் ஒரு நடவடிக்கையாகவே தம்மால் பார்க்க முடிகின்றது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com