வவுனியா வர்த்தக நிலைய தொகுதியில் தீ!

வவுனியா நகர பள்ளிவாசலுக்கு அருகில் அமைந்துள்ள வர்த்தக நிலைய தொகுதியொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு வர்த்தக நிலையங்கள் முழுமையாக தீக்கிறையாகியுள்ளன.

இந்த தீ விபத்து (இன்று) அதிகாலை 1.30 அளவில் நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீ பரவுவதை கவனித்த பள்ளிவாசல் நிர்வாகத்தினர், ஒலி பெருக்கியின் மூலம் சம்பவம் குறித்து அறிவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து அருகில் உள்ளவர்கள் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சித்த போதிலும், தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியவில்லை.

இந்த சம்பவம் குறித்து வவுனியா நகர சபை தீயணைப்பு பிரிவிற்கு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தீயணைப்பு பிரிவினர் உடனே தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இரண்டு வர்த்தக நிலையங்கள் முழுமையாக தீக்கிறையாகியுள்ளதுடன், மேலும் சில வர்த்தக நிலையங்களுக்கு சிறு அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

வவுனியா நகர பள்ளிவாசலுக்கு அருகில் அமைந்துள்ள இந்த வர்த்தக நிலையங்கள் சட்டவிரோதமானவை என அண்மையில் சுட்டிக்காட்டி ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டிருந்தன.

ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்ட வர்த்தக நிலையங்களே இவ்வாறு தீக்கிறையாகியுள்ளன. சம்பவ இடத்திற்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் வருகை தந்தார்.

விஷயங்களை ஆராய்ந்த அவர், இதுவொரு விசமிகளின் செயற்பாடு என்று குற்றம்சாட்டினார். சம்பவம் நடைபெற்ற நேரத்தில், இரண்டு நபர்கள் அந்த இடத்திலிருந்து இருவேறு பக்கமாக ஓடுவதனை சிலர் கவனித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சம்பவத்தை நேரில் கண்டவர்களின் கருத்துக்களை கேட்கும்போது, இந்த சம்பவமானது திட்டமிட்டு செய்த சதி எனவும் கே.கே.மஸ்தான் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த தீ விபத்து தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது திட்டமிட்ட செயலா அல்லது வேறு ஏதேனும் விதத்தில் இந்த தீ ஏற்பட்டதா என்பது தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com