வவுனியா வடக்கு யாருக்கு ? – மும்முனை போட்டிக்களம் திறக்கப்பட வாய்ப்பு அதிகரிப்பு !!

வவுனியா வடக்கு பிரதேச சபை யாருக்கு என்ற நீண்டநாள் குழப்பத்தை இன்றைய (16) வவுனியா நகரசபை தேர்தல் முடிவு பரபரப்பாக்கியுள்ளது.

வவுனியா வடக்கு பிரதேச சபையில் 08 ஆசனங்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அடுத்தபடியாக 05 ஆசனங்களுடன் மகிந்த ராஜபக்சவின் பொதுஜன பெரமுன முன்னிலை வகிக்கிறது.

வவுனியா வடக்கு பிரதேச சபையில் ஐக்கிய தேசியக் கட்சி 03, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி 02, மக்கள் விடுதலை முன்னணி 01, ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி 01 என ஆசனங்களைப் பெற்றிருக்க மகிந்தவின் கட்சியுடைய 05 ஆசனங்களையும் சேர்த்து 12 உறுப்பினர்களுடன் சிங்களக் கட்சி ஒன்றின் பெரும்பான்மை இனத்தவர் ஒருவரே வவுனியா வடக்கு பிரதேச சபையின் தவிசாளராககும் வாய்ப்பு அதிகரித்தது.

இந்நிலையில் தமிழர் ஜக்கிய விடுதலை முன்னணி சில சபைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவு வழங்கியிருந்த நிலையில் வவுனியா வடக்கிலும் பெரும்பான்மை இனத்தவரை வீழ்த்துவதற்காக அக்கட்சியின் 03 உறுப்பினர்களின் ஆதரவைப் பெறலாம் என்ற நிலை இருந்தது.

எனினும் இதுவரை தவிசாளர் தெரிவுகளில் நடுநிலை வகித்துவந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 03 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தால் மட்டுமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 08 உறுப்பினர்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் 03 உறுப்பினர்களின் ஆதரவோடு 14 உறுப்பினர்கள் எனும் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டி சூழல் உருகியது.

இந்நிலையிலேயே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பெரும்பான்மை பெற்றிருந்த சபைகளில் கூட ஈபிடிபி மற்றும் பெரும்பான்மைக் கட்சிகளுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியைப் பிடித்திருந்தபோதிலும் வடக்கில் பெரும்பான்மை இனக்கட்சி ஒன்றின் பெரும்பான்மை இன உறுப்பினர் ஒருவர் தவிசாளராக வரக்கூடாது எனக்கருதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தமது உறுப்பினர்கள் மூவரும் ஆதரவு வழங்குவர் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அறிவித்தது.

இந்நிலையில்தான் இன்று வவுனியா நகரசபையில் நடைபெற்ற தவிசாளர் தேர்தல் முடிவு நாளைய வவுனியா வடக்கு தவிசாளர் தேர்விலும் தாக்கம் செலுத்தக்கூடும் என அஞ்சப்படும் சூழல் எழுந்துள்ளதால் நாளைய தேர்தல் பரபரப்பைக் கூட்டியுள்ளது.

08 ஆசனங்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வீழ்த்தி வவுனியா நகரசபையை ஈபிடிபி, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் மகிந்த ராஜபக்சவின் பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் 03 ஆசனங்களை மட்டும் கொண்டிருந்த உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டிருந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி கைப்பற்றியிருந்தது.

இந்நிலையில் வவுனியாவில் தமது ஆதிக்கத்தை நிலைநாட்ட முனையும் ஈபிஆர்எல்எவ் நாளையும் ஐக்கிய தேசியக் கட்சியுடனோ அல்லது சுதந்திரக் கட்சியுடனோ கைகோர்த்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.

அவ்வாறான சூழலில் மும்முனைப் போட்டிக் களம் ஒன்று திறக்கப்படக்கூடிய வாய்ப்புக்களும் அதிகரித்துள்ளது. மும்முனைப் போட்டிக்களம் ஒன்று திறக்கப்பட்டால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நடுநிலை வகிக்கக்கூடிய சாத்தியக்கூறுகளும் உள்ளதாக தெரியவந்துள்ளது.

எச் சூழ்நிலை வந்தாலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை தமக்கு வாக்களிக்க வைக்கவேண்டும் என்ற முனைப்பில் வடக்கு மாகாணசபையின் முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட தமிழரசுக் கட்சியினர் ஈடுபட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

வவுனியா வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் எண்ணிக்கை விபரம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 08
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 03
தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி 03

பொதுஜன பெரமுன 05
ஐக்கிய தேசியக் கட்சி 03
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி 02
மக்கள் விடுலை முன்னணி 01
ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி 01

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com