சற்று முன்
Home / செய்திகள் / வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் பல மில்லியன் ரூபா ஊழல் – அம்பலமானது கணக்காய்வுத் திணைக்கள அறிக்கை

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் பல மில்லியன் ரூபா ஊழல் – அம்பலமானது கணக்காய்வுத் திணைக்கள அறிக்கை

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் அண்மைக்காலமாக பல்வேறு தரப்பினரால் அரச பொதுநிதி ஊழலுக்குள்ளானமை தொடர்பில் குற்றச்சாட்டப்பட்டு வந்த போதும், அண்மையில் தேசிய கணக்காய்வுத் திணைக்களம் வெளியிட்ட விசாரணை அறிக்கைகளின் மூலம் பல மில்லியன் ரூபா நிதி மோசடி செய்யப்பட்டுள்ள வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ள தற்போதைய பாடசாலையின் அதிபரினால் இந்த நிதித் மோசடியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள் எனப்பலரது முறைப்பாடுகளை அடுத்து பல மாதங்களாக மத்திய கணக்காய்வுத் திணைக்களம் கணக்காய்வுப் பணிகளில் ஈடுபட்டு வந்த நிலையில் பல்வேறு கணக்காய்வு விசாரணை அறிக்கைகள் கல்வி அமைச்சுக்கும், அதனோடிணைந்த திணைக்களங்களிற்கும் விநியோகிக்கப்பட்டிருந்தது.

அதில் ஓகஸ்ட் 23ம் திகதியிடப்பட்ட 2019/AQ/51ம் இலக்க கணக்காய்வு அறிக்கை தற்போது வெளியே கசிந்துள்ளது.
இதன் மூலம் 7.3 மில்லியன் ரூபா பொதுநிதி அதிபரினால் எவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ளது என்பதை அவ்வறிக்கை தெளிவுபடுகிறது.

அதே நேரத்தில் குறிப்பாக ஆரம்பப் பாடசாலை சிறார்களுக்கு என ஒதுக்கப்பட்ட சத்துணவுத் திட்டத்தில் இவ்வாறான முறைகேடு ஏற்படுத்தப்பட்டுள்ளமை வருந்தத்தக்க ஒரு விடயமாகும் என்று பாடசாலை சமூகம் தெரிவித்துள்ளது.
எமது மக்கள் போரின் பிடியிலிருந்து மீண்டெழுகின்ற இச்சந்தர்ப்பத்தில் காவலர்களாக இருக்க வேண்டிய தமிழ் அதிகாரிகளின் மிலேச்சத்தனத்தை எப்படித்தாங்கிக் கொள்வது என்பதே இவ்விடத்தில் முக்கியமாக கவனிக்கவேண்டிய ஒன்று என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் ஆரம்பப் பிரிவில் கற்கும் எல்லாப் பிள்ளைகளும் வசதியான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அல்லர். அதில் 65 சதவீத மாணவர்கள் மத்தியதர மற்றும் அடிமட்ட குடும்பங்களிலிருந்தே வருகின்றனர்.

இது நாட்டின் எல்லாப்பாகங்களுக்கும் பொருந்தக்கூடிய ஒன்று. அதனால்தான் நாட்டின் பிள்ளைகளின் போசாக்கு மட்டத்தை உயர்த்த அரசு சத்துணவுத்திட்டம் எனும் தேசிய வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது.

இவ்வாறான சூழலில் அரச சட்டவிதிகளுக்கு முரணான வகையில் போசாக்கற்ற உணவு வழங்கி, ஒதுக்கப்பட்ட 7.3 மில்லியன் ரூபாவில் 63 வீதமான நிதி பல்வேறு நுட்பங்கள் மூலம் திருடப்பட்டுள்ளமை கணக்காய்வு விசாரணை அறிக்கையின் மூலம் தெளிவாகியுள்ளது.

சட்டவிரோத உடன்படிக்கை மூலம் பல கட்டங்களாக இந்தநிதி தனிநபர்களுக்கு
எழுதப்பட்டுள்ள விதத்தினை அறிக்கையின் 1, 2, 3ம் பந்திகள் தெளிவுபடுத்துகின்றன.

மகாண, மத்திய கல்வி அமைச்சுக்களின் சுற்றறிக்கைகள் பின்பற்றப்படாமல் ரூபா 19 லட்சத்து 86 ஆயிரத்து 094 ரூபா முதலாம் கட்டமாக மோசடி செய்யப்பட்டுள்ளது. அவ்வாறே 7.3 மில்லியன் ரூபாவும் எவ்வாறு மோசடிக்கு உட்பட்டதை ஆவணம் விபரிக்கின்றது.

குறிப்பாக பாடசாலையில் சிறார்களுக்கு விநியோகிக்கப்பட்ட உணவு சுகாதாரமற்ற மந்த போசணையை ஏற்படுத்தக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டதாக 6.2, 6.3 பந்திகள் தெளிவுபடுத்துவதுடன் சுகாதார நியதிகள் பின்பற்றப்படவில்லை எனவும், பந்தி 15 பொதுச் சுகாதாரப் பரிசோதனை இடம்பெறவில்லை எனவும், பொதுச் சுகாதாரப் பதிவேடு பேணப்படவில்லையெனவும் தெளிவுபடுத்தப்படுத்துகின்றன.

இதனால் எமது பிள்ளைகள் நோய்வாய்ப்படவில்லை என்பது தெய்வாதீனமானதாகும். இதில் முக்கிய விடயம் யாதெனில் பாடசாலைக்கு அடிக்கடி செல்லும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் தனது கடமையைச் சரிவரச் செய்யவில்லை என்பதை ஆவணம் உறுதிப்படுத்துகின்றமை இங்கு கவனிக்கப்படவேண்டும்.

அத்துடன் பாடசாலைப் பிள்ளைகளுக்கு உணவு ஊட்டும் நிகழ்ச்சித் திட்டத்தில் முட்டைகள் கொள்வனவில் 20 ஆயிரத்து 451 முட்டைகள் மேலதிகமாகக் கொள்வனவு செய்யப்பட்டதாக தவறாகக் காண்பிக்கப்பட்டு அதற்காக 3 லட்சத்து 68 ஆயிரத்து 118 ரூபா மோசடிக்குள்ளாகியுள்ளது.

பிள்ளைகளுக்கு வழங்கப்படவேண்டிய மொத்த முட்டைகளில் 40 சதவீதமானவையே வழங்கப்பட்டுள்ளமை சத்துணவைக் கேள்விக்குறியாக்கியதுடன், பழம் கொள்வனவு, நெத்தலிக் கருவாட்டை வழங்காமல் தவிர்த்ததன் மூலம் குறித்த நாள்களுக்குரிய நிதியாக பல இலட்சம் ரூபா கையாடப்பட்டுள்ளது.

அரச சுற்றறிக்கை சத்துணவுத்திட்டத்தில் மரக்கறிகளின் விவர அட்டவணையை வழங்கியுள்ள போதும் அதனைப் பின்பற்றாமல் பூசணிக்காய் மாத்திரம் சமைக்கப்பட்டுள்ளமை அறிக்கையின் மூலம் தெளிவாகியுள்ளது.

மரக்கறி எண்ணெய் கொள்வனவில் அண்ணளவாக இரண்டு இலட்சம் ரூபா மோசடியாக்கப்பட்டுள்ளமை கணக்காய்வு விசாரணை அறிக்கை மிக நுணுக்கமாகத் தெளிவுபடுத்தியுள்ளது.

பந்தி 16.5ல் போசாக்குணவு என்ற போர்வையில் அரச நிதியைச் சத்துணவுக்காகப் பயன்படுத்தாமல் தமது சொந்தத் தேவைக்குப் பயன்படுத்தியமை தொடர்பில் கருதக்கூடியவாறு தெளிவாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளமை கவனிக்கப்படவேண்டிய விடயமாகும்.
பந்தி 21ல் 57 பிள்ளைகள் பாடசாலைக்கு வருகை தந்த நாளில் 26 ஆயிரத்து 550 ரூபா பணிஸ் கொள்வனவுக்காகச் செலவிடப்பட்டதாக தவறாகக் கணக்கு காண்பிக்கப்பட்டு அந்தப் பணம் கையாடப்பட்டுள்ளது.

உண்மையில் ஆரம்பப் பாடசாலையில் அண்ணளவாக 1000 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். குறித்த இந்த நாளில் முழுக் கடையடைப்பு நடைபெற்றமையினால் 57 பிள்ளைகள் மாத்திரம் பாடசாலைக்கு வருகை தந்திருந்தனர்.

அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தியே இந்தக் கையாடல் நடவடிக்கை நடைபெற்றுள்ளமை அறிக்கையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் கல்வி அமைச்சின் உணவு வழங்குவதற்கான சுற்றறிக்கையில் பணிஸ் வழங்குதலை அனுமதிக்கவில்லை என்பது இங்கே குறிப்பிடப்படவேண்டிய விடயம் ஆகும்.

பிள்ளைகளுக்கு வழங்கப்பட வேண்டிய சத்துணவில் இவ்வளவு மோசடியை மேற்கொண்டவர்கள் ஏனைய விடயங்களில் எவ்வாறு செயற்பட்டிருக்க முடியும் என்பதை எல்லோரும் ஊகித்துக் கொள்ள முடியும். எனவே ஏனைய கணக்காய்வு விசாரணைகளும் பகிரங்கப்படுமிடத்து பாடசாலை சீரழிவாகிக் கொண்டிருக்கும் விதத்தினை தெளிவுபடுத்த முடியும்.

2017ம் ஆண்டில் கணக்காய்வுத் திணைக்களத்தினால் இனங்காணப்பட்ட பல இலட்சம் ரூபா பெறுமதியான பொது அரச நிதி முறைகேடான விடயம் தொடர்பாக இதுவரை கல்வியமைச்சு எவ்வித விசாரணைகளையும் மேற்கொள்ளவில்லை. இதில் பல்வேறு அரசியல் தலையீடுகள் மற்றும் அதிகாரத் தலையீடுகள் காரணமாக 2017ஆம் ஆணடடின் கணக்காய்வு விசாரணை அறிக்கை மூடிமறைக்கப்பட்டுவிட்டது.

அப்போது நடவடிக்கை எடுத்திருந்தால் 2019ம் ஆண்டிலும் இந்த இழப்பினை பாடசாலைச் சமூகம் சந்தித்திருக்க வேண்டி இருந்திருக்காது. 2017ல் பாடசாலைக்கு வர்ணம் தீட்டுகிறோம் எனக்கூறி பல இலட்சம் ரூபாக்கள் சூறையாடப்பட்டது. இவ்விடயம் அப்போதைய பத்திரிகைகளில் பிரசுரமாகியமை இவ்விடயத்தில் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

மேற்படி கணக்காய்வு நடவடிக்கைகள் பல்வேறு உண்மைகளை வெளிப்படுத்தியுள்ள சூழலில் மேலும் பல விடயங்களை அவதானிக்க வேண்டியுள்ளது. பாடசாலையின் பல லட்சம் ரூபா பெறுமதியான பழைய இரும்புத்தொகுதிகளைக் காணவில்லை. நீர்த்தாங்கி, மலசலகூடம் அமைக்கப்பட்டுள்ளதாக பொய்க்கணக்குகள் காண்பிக்கப்பட்டுள்ளன.

பாடசாலைச் சுத்திகரிப்புக்காக அண்ணளவாக 15 லட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக தவறான கணக்குகள் தயாரிக்கப்பட்டு நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது. தனியார், அரச நிறுவங்களால் வழங்கப்பட்ட நன்கொடை நிதிகளில் இருந்து 6 லட்சம் ரூபா நிதி கையாடப்பட்டுள்ளது.

ஆங்கில மொழிமூல க.பொ.த உயர்தர வணிகப் பிரிவை ஆசிரியர் பற்றாக்குறை எனக் காரணம் காட்டி பாடசாலை அதிபர் அந்தப் பிரிவை மூடியுள்ளார். க.பொ.த உயர்தர வகுப்புக்களுக்கான செயலமர்வுகள் நடாத்தப்படாமல் அந்த நிதிக்கு என்ன நடைபெற்றதெனத் தெரியவில்லை.

உள்ளகமேற்பார்வைகள், மதிப்பிடல்கள் போன்றவற்றில் அதிபர் எவ்வித அக்கறையையும் கொண்டிருக்கவில்லை. ஆசிரியர்கள் வந்து தமது மனச்சாட்சிக்கு ஏற்ப கற்பித்தல் பணிகளில் ஈடுபடுகின்றார்களே தவிர அவர்களின் எவ்வித நலன்களும் கவனிக்கப்படுவதில்லை. ஒட்டுமொத்தமாக அதிபரின் நிர்வாகத்திறனற்ற இயலாமையின் வெளிப்பாடுகளாக நாம் இவற்றைக் கருத முடியும்.

இவ்வாறானதொரு சூழலில் சென்ற மே மாதம் பல்வேறு தரப்பினரால் பாடசாலை அபிவிருத்திச் சங்கக் கூட்டத்தில் அதிபர் மீதான சாட்டுதல்கள் தொடர்பாக வினாவப்பட்ட போது, பதிலளிக்கமுடியாமல் தான் பதவிவிலகுவதாக பகிரங்கமாக அறிவித்த அதிபர், பாடசாலைக்கு இடமாற்றம் பெற்று வந்த புதிய ஆசிரியர்களையும், ஊழலுக்கு உறுதுணையாக தொழிற்படும் ஒரு சில ஆசிரியர்களையும் முன்னிலைப்படுத்தி தனக்கு ஆதரவான பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டது மட்டுமன்றி இன்றுவரை பல்வேறு செல்வாக்குகளால் பதவியைத் தக்கவைத்துள்ளார்.

இந்த அட்டூழியம் தொடர்பில் கல்வி அமைச்சோ, மாகாண மற்றும் வலயக்கல்வித் திணைக்களங்களோ எந்தவித நடவடிக்கையொன்றையும் மேற்கொள்ளாமலிருப்பதன் பின்னணியை எல்லோரும் விளங்கிக் கொள்ள வேண்டும்.
மேற்படி விடயங்கள் தொடர்பில் பல்வேறு தரப்பினர் கல்வி அமைச்சு, ஆளுனரின் செயலாளர், வலயக்கல்வி அலுவலகம் எனப்பல இடங்களுக்கு முறையிட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. தாம் தப்பித்துக் கொள்வதற்காக “அது ஒரு தேசிய பாடசாலை” என பொறுப்பற்ற விதத்தில் அதிகாரிகள் கருத்துரைக்கின்றனர்.

தேசிய பாடசாலைகளின் நிதி, நிர்வாக நடவடிக்கைகள் அனைத்தும் மாகாணம், வலயக்கல்வித் திணைக்களங்களினாலேயே நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் இவர்களின் கருத்து பொருத்தமற்ற ஒன்றாகும் என்று பாடசாலை சமூகம் குற்றஞ்சாட்டுகின்றது.

மேற்படி சத்துணவுத்திட்டம் சார்ந்த ஊழல்கள் ஆரம்பப் பிரவில் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ள மாகாண ஆளணியைச் சேர்ந்த ஓர் பெண் அதிபரின் ஒத்துழைப்புடன் பாடசாலையின் அதிபரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் இதற்கு ஆதரவாக இரண்டு ஆசிரியர்களும் கல்வி சாராப் பணியாளர் ஒருவருமே இவற்றை அரங்கேற்றி உள்ளனர். குறித்த இவ் ஆரம்பப் பிரிவின் உபஅதிபர் வலயக்கல்விப் பணிப்பாளரின் தலையீட்டினால் இடமாற்றம் செய்யப்பட்ட போதும் தேர்தலினைக் காரணம் காட்டி இவ்விடமாற்றம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த அதிபரினால் பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம் என்பன முடக்கப்பட்டு செயலற்ற நிலையில் உள்ளன. இந்த நிலமை தற்போதைய சூழலுக்கு ஏற்றாற்போல் அதிபரால் திட்டமிடப்பட்ட ஒன்றாகும்.

பழைய மாணவர்கள் பல்வேறு துண்டுகளாகப் பிரிந்து தொழிற்படுவதால் அதிபர் சார்ந்த விநியோக அணி எனவும், அதிபர்சாராத ஊழலுக்கு எதிரான அணியெனவும் பழைய மாணவர் சங்கம் இருதுருவ நிலையில் இருப்பதும், அதனை அவ்வாறே பேணுவதும் அதிபரின் தந்திரம் என்பதை இவர்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்பதே கவலைக்கிடமான ஒன்றாகும்.

குறித்த அதிபர் பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம், நேர்மையான பெற்றோர்கள், தர்மத்தின்பாற்பட்ட ஆசிரியர்கள் என எல்லாத்தரப்புடனும் ஓர் முரண்பாட்டு நிலையை ஏற்படுத்தி உள்ளமை இவ்விடத்தில் கவனிக்க வேண்டிய ஒரு விடயமாகும்.

எனவே இதற்கான காரணம் அதிபரால் நகர்ச் சூழல் ஒன்றுக்கு முகங்கொடுக்க முடியாமல் உள்ளமையா? அல்லது 3 ஆயிரம் மாணவர்களைக் கொண்ட தேசிய பாடசாலையை வழிநடாத்த முடியாமல் திணறுவதா? என்பதை ஒவ்வொருவரும் கருத்தில் கொள்ள வேண்டும் என்பது மட்டுமன்றி வடமாகாணத்தின் நுழைவாயிலில் உள்ள 3 ஆயிரம் மாணவர்களைக் கொண்ட முன்னணிப் பாடசாலை ஒன்று குறித்த அதிபரினால் சீரழிக்கப்படுவதை பாடசாலைச் சமூகம் இதுவரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது கவலையான விடயமாகும்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com