வழிகாட்டல் குழுவிலிருந்து சம்பந்தனும் சுமந்திரனும் வெளியேறவேண்டும் – சுரேஸ்

தமிழ் மக்களுக்கு வரலாற்றுத் துரோகமிழைக்கும் செயற்பாட்டிலீடுபடும் இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரது நடவடிக்கைகளிற்கு பங்காளிக்கட்சி என்றவகையில் ஆ.பி.ஆர்.எல்.எவ். துணைபோகாது எனத் தெரிவித்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஸ்பிறேமச்சந்திரன் தமிழ் மக்களது அடிப்படை கோரிக்கைகளினை கூட பரிசீலிக்க தயாராக இல்லாத வழிகாட்டல் குழுவிலிருந்து இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர்  வெளியேற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அரசுடன் நேரடியாக பேசி தமிழ் மக்களால் முன்வைக்கப்பட்ட அடிப்படை கோரிக்கைகளான சமஸ்டி அடிப்படையிலான தீர்வு. வடகிழக்கு இணைப்பு உள்ளிட்டவற்றிற்கான பதிலை பெற்ற பின்னர் தேவையானால் வழிகாட்டல் குழுவிற்கு செல்வது பொருத்தமானதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவிக்கையில் இலங்கை அரச அமைச்சரான மகிந்த அமரவீர 21பேர் கொண்ட அரசியலமைப்ப வழிகாட்டல் குழுவில் கூட்டமைப்பு சார்பில் இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகிய இருவரும் இருப்பதாக தெரிவித்துள்ளார். அத்துடன் வடகிழக்கு இணைப்பு பற்றியோ, சமஸ்டி பற்றியோ, பௌத்தத்திற்கு முன்னரிமை வழங்குவது தொடர்பிலோ அவர்கள் ஆட்சேபனையெதனையும் தெரிவித்திருக்கவில்லையெனவும் சொல்லியுள்ளார்.

சுதந்திரக்கட்சி, ஜக்கிய தேசியக்கட்சி மற்றும் ஜேவிபி போன்றவை ஒற்றையாட்சி, பௌத்தத்திற்கு முதலிடம், வட-கிழக்கு இணைப்பில்லையென தமது கட்சியின் நிலைப்பாடாக கூறிவருகின்றன. இந்நிலையில் இக்கட்சிகளை பெரும்பான்மையாக கொண்ட வழிகாட்டல் குழுவில் இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகிய இருவரும் இருந்து எதனை செய்கின்றார்கள் என கேள்வி எழுப்பியிருந்தார் சுரேஸ்பிறேமச்சந்திரன்.

தமிழ் மக்களிற்கு வரலாற்று துரோகமிழைக்கும் இத்தகைய நடவடிக்கைகளினை கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியென்ற வகையில் ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணி ஏற்றுக்கொள்ளாது. முதலில் இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகிய இருவரும் தமிழ் மக்கள் முன்னராக வந்து வழிகாட்டல் குழுவில் நடப்பவற்றை தெளிவுபடுத்தவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com