வலி வடக்கில் 700 ஏக்கர் விடுவிக்க நடவடிக்கை

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் இராணுவ அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள காணிகளில் 700 ஏக்கர் காணிகளை அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.

தெல்லிப்பழை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட வறுத்தலைவிளான் மற்றும் அதனை அண்டிய கிராமங்களிலும், வளலாய், பலாலி கிழக்கு ஆகிய பிரதேசங்களில் உள்ள கிராமங்கள் என்பவற்றிலேயே இந்த 700 ஏக்கர் காணிகளையும் உரியவர்களிடம் கையளிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
திங்களன்று கொழும்பில் ஜனாதிபதி செயலாளரின் தலைமையில் நடைபெற்ற உயர் மட்டக் கூட்டத்தில், இது தொடர்பிலான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. இதனையடுத்து செவ்வாய்க்கிழமை குறிப்பிட்ட பகுதிகளுக்குச் சென்ற யாழ் மாவட்ட அரச செயலக அதிகாரிகள் குழுவொன்று அந்தப் பகுதிகளைப் பார்வையிட்டுத் திரும்பியுள்ளது.
அதிகாரிகளின் இந்த விஜயத்தையடுத்து, அந்தப் பிரதேசத்தில் உள்ள காணிகளின் உரிமையாளர்கள் அங்கு சென்று தமது காணிகளின் எல்லைகளை அடையாளம் காட்டவும், அவ்வாறு அடையாளம் காணப்பட்டதன் பின்னர் வரும் தைப்பொங்கலுக்கு முன்னர் அங்கிருந்து இடம்பெயர்ந்த சுமார் 700க்கும் மேற்பட்ட குடும்பங்களை மீள் குடியேற்றவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றார் யாழ் அரச அதிபர் வேதநாயகன்.
வலிகாமம் வடக்கில் இருந்து கடந்த 1990 ஆம் ஆண்டு இராணுவத்தினரால் வெளியேற்றப்பட்ட பல்லாயிரக்கணக்கான குடும்பங்களில், சுமார் பத்தாயிரம் குடும்பங்கள் இன்னும் தங்களது சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்ல முடியாதிருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com