வரவு செலவு திட்டம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின்போது 191 வாக்குகள் ஆதரவாகவும் 58 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டன.

பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஈழமக்கள் ஜனநாயக கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகியன ஆதரவாகவும், மக்கள் விடுதலை முன்னணி, கூட்டு எதிர்க்கட்சி ஆகிய தரப்புக்கள் எதிராகவும் வாக்களித்திருந்தன.

கடந்த 9 ஆம் திகதி இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்திற்காக நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் 2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த 10, 11, 13, 14, ஆகிய ஐந்து நாட்கள் விவாதம் தொடர்ச்சியாக நடைபெற்றதோடு ஆறாவது நாளான இன்று வியாழக்கிழமை பிற்பகல் 5.20 வரையில் விவாதம் இடம்பெற்றிருந்தது. இரண்டாவது வாசிப்பு மீதான விவாத்தினை எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் ஆரம்பித்திருந்த நிலையில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர திருத்தங்களுடனான உரையொன்றை ஆற்றியிருந்தார்.

இந்நிலையில் எதிர்க்கட்சி பிரதமகொரடாவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவருமான அநுரகுமார திஸாநயக்க எம்.பி வாக்கெடுப்பினை கோரினார்.

இதனையடுத்து சபாநாயகர் கருஜெயசூரிய வாக்கெடுப்பிற்கான அறிவிப்பினை விடுத்தார்.  உறுப்பினர்கள் அனைவரும் இலத்திரணியல் முறையின் மூலம் வாக்குகளை பதிவு செய்யலாம் என்றும் அதற்கு முடியாதவர்கள் கைகளை உயர்த்தி தமது விருப்பினை தெரிவிக்க முடியும் என்றும் சபாநாயகர் குறிப்பிட்டார்.

இதனையடுத்து வாக்கெடுப்பு செயற்பாடு இடம்பெற்றது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் பிரதான எதிர்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன் எம்.பி, சரவணபவன் எம்.பி ஆகியோர் உட்பட 17 உறுப்பினர்கள் சபைக்கு சமுகமளித்திருக்கவில்லை.

இதேவேளை சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அறிவித்த ரத்ன தேரர் எம்.பியும், முன்னாள் நீதி அமைச்சரும் ஆதரவாக வாக்களித்ததோடு வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகள் சிலதொடர்பில் கடுமையான விமர்சனத்தினை முன்வைத்திருந்த அமைச்சர்களான ராஜித சேனாரட்ன, சம்பிக்க ரணவக்க, சுசில் பிரேம்ஜெயந்த ஆகியோரும் ஆதரவாக வாக்களித்திருந்தனர்.

வாக்களிப்பு முடிவுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து நாளை வெள்ளிக்கிழமை முதல் குழுநிலையில் ஒவ்வொரு அமைச்சுக்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகள் தொடர்பில் தனித்தனியான விவாதங்கள் ஆரம்பமாகவுள்ளதாக நிதிஅமைச்சர் மங்கள சமரவீர அறிவித்ததோடு சபைமுதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்லவால் சபை நாளை காலை 9.30வரையில் ஒத்திவைக்கப்பட்டது.

நாளை ஆரம்பமாகும் 2018 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தின் மீதான குழுநிலையிலான விவாதம் எதிர்வரும் டிசம்பர் மாதம் எட்டாம் திகதி வரையில் நடைபெற்று மூன்றாம்வசிப்பு மீதான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com