வட மாகாண அமைச்சரிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் – திரைமறைவில் சதி – முதலமைச்சர் குற்றச்சாட்டு

vikneswaran-womanஎமது அமைச்சர்கள் மீது குற்றச் சாட்டுக்கள் ஏதாவது இருந்தால் எழுத்தில் ஆதாரத்துடன் தந்தால் உடனே உரிய நடவடிக்கைகள் எடுப்பேன் என்று கூறிய பின்னரும் சபையில் நம்பிக்கையில்லாத் தீர்மானங்களைக் கொண்டுவர வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்கள் சிலர் தயாராகுவதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் எமது மக்களின் மனம் அறியாது நிலை அறியாது உறுப்பினர்கள் பலர் செயற்பட்டு வருவதாகவும் செய்ய வேண்டிய வேலைகள் இருக்கும் போது அவர்கள் சிறுபிள்ளைத்தனமான பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

ஒருவரின் குற்றங்கள் கையுயர்த்தி ஏற்கப்படும் விடயங்கள் அல்ல எனத் தெரிவித்துள்ள முதலமைச்சர் தாருங்கள் நான் உரியவர்களைக் கொண்டு விசாரித்து நடவடிக்கை எடுக்கின்றேன் என்றால் எதையும் என்னிடம் கையளிக்காமல் சபையில் சாட விரும்புகின்றார்கள். அமைச்சர்களைப் பற்றி அவதூறுகளை எடுத்து விளம்பவே சபையைப் பாவிக்கப் பார்க்கின்றார்கள். பல நன்மைகளை எதிர்பார்த்து மக்கள் இருக்கின்றார்கள். அதற்காகப் பாடுபடாது எதிர்மறையான காரியங்களிலேயே சிலர் தம் காலத்தைக் கழிக்கின்றார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

முல்லைத்தீவு தேவிபுரம் பகுதியில் “புதுவசந்தம் தையல் நிலையம்” என்ற பெயரில் தையல் நிலையம் ஒன்றினைத் திறந்துவைத்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவரது உரையின் முழு வடிவம் வருமாறு,

புது வசந்தம் தையல் நிலையம்
திறப்புவிழா – 2016
‘அ’பகுதி, தேவிபுரம், புதுக்குடியிருப்பு
03.06.2016 காலை 10 மணியளவில்
பிரதம அதிதி உரை
குருர் ப்ரம்மா………………………….
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அவர்களே, கௌரவ வடமாகாணசபை உறுப்பினர் அவர்களே, பிரதேச செயலாளர் அவர்களே, வெளிநாட்டில் இருந்து வந்திருக்கும் திரு.அறிவழகன் அவர்களே, உத்தியோகத்தர்களே, சகோதர சகோதரிகளே, குழந்தைகளே!
“புதுவசந்தம் தையல் நிலையம்” என்ற பெயரில் தேவிபுரம் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இத்தையல் நிலையத்தை திறந்து வைத்து உங்கள் முன் உரையாற்றுவதில் மகிழ்வடைகின்றேன். அண்மையில்த்தான் பால் பதனிடும் ஒரு ஆலையை முல்லைத்தீவில் திறந்து வைத்தேன். முல்லைத்தீவு மக்களுக்கு ஏற்படும் நன்மைகளை நாங்கள் முற்றிலும் வரவேற்கின்றோம். முல்லைத்தீவிலிருந்து அமைச்சர் ஒருவர் இல்லாத குறையை நாங்கள் உணர்ந்து செயற்பட்டு வருகின்றோம்.
நீண்ட கால யுத்தத்தின் விளைவாக இப்பகுதியில் பல பாதிப்புக்கள் ஏற்பட்டன. 2009ம் ஆண்டு இக்காலப்பகுதியில் உயிர்ச்சேதம், பொருட்சேதம் என பல பாதிப்புக்களை மக்கள் அனுபவித்தார்கள். அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக வாழ்ந்து வந்த இம் மக்களில் ஒரு சிலருக்கு வாழ்வில் ஒரு நம்பிக்கை ஒளியை ஏற்படுத்தக் கூடிய வகையிலேயே இன்று இந்த தையல் நிலையம் திறந்துவைக்கப் பட்டுள்ளது. இங்கே தையல் வேலைகளை பயிற்றுவிப்பதற்கும், உடைகளைத் தைத்து விநியோகிப்பதற்குமாக தையலில் ஓரளவு பயிற்சிகளைப் பெற்றுள்ள 50 பயிற்சியாளர்களுக்கு இந் நிலையத்தின் ஊடாக தொழில் வாய்ப்பு கிடைக்கவிருக்கின்றது. இந்த 50 பேரின் வேலைகளை மேற்பார்வை செய்வதற்கும் பயிற்றுவிப்பதற்குமாக 04 பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் அமர்த்தப்பட்டிருக்கின்றார்கள். அவர்களின் வழிகாட்டல்களின் கீழ் இந்த 50 தையல் பயிற்சியாளர்களும் தையல் வேலைகளில் சிறந்து விளங்குவதுடன் மட்டும் நின்றுவிடாது புதிய புதிய தொழில் நுட்பங்களையும் மற்றும் தையல் கலை வடிவங்களையும் பயில்வார்கள் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.
அதுமட்டுமன்றி இதனூடு கிடைக்கப்பெறுகின்ற வருமானத்தில் இருந்து தமது வாழ்க்கையை ஓரளவுக்காவது சிறப்புற முன்னெடுத்துச் செல்வதற்கு இத் தொழில் உறுதுணையாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இப் பயிற்சி நிலையத்தில் தையல் தேவைகளுக்காக கிட்டத்தட்ட 9 இலட்சம் ரூபா செலவில் 32 தையல் இயந்திரங்கள் புதிதாகக் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. அத்துடன் இந்த 80’ஓ 23’அளவீட்டிலான மண்டபத்தையும் அமைத்து வழங்கியிருக்கின்றார்கள் எமது கொடையாளர்கள். இதற்கான நிதி உதவிகள் இங்கே பிறந்துவளர்ந்து தற்பொழுது வெளிநாடுகளில் வாழும் அன்பர்களின் ஆதரவுடன் அவர்களின் பெரு முயற்சியின் பயனாக இந்த நிலையம் அமைக்கப்பட்டிருக்கின்றது என்று அறிகின்றேன். அவர்களுக்கு எமது நன்றி அறிதல்களையும் பாராட்டுக்களையும் இத் தருணத்தில் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்வடைகின்றேன்.
முல்லைத்தீவுப் பகுதியில் புதுக்குடியிருப்பில் போரினால் மிகவும் பாதிப்படைந்து அல்லல்படுகின்ற மக்களின் அவல நிலையைப் போக்கும் நோக்குடன் 2015ம் ஆண்டில் புதுக்குடியிருப்பில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் “புதுவசந்தம் நிலையம்” இதுவரை சுமார் 37இலட்சம் ரூபா வரையில் வடக்கு கிழக்கில் வாழும் சுமார் 60 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கியிருக்கின்றார்கள்.
ஒவ்வொரு கிராமங்களிலும் அந்தந்த பகுதிகளில் காணப்படக்கூடிய பொருளாதார வசதிகளைக் கொண்டு சுயமான தொழில் முயற்சியில் ஈடுபட்டு வளமாக வாழ்ந்து வந்த குடும்பங்கள் இக் கொடிய யுத்தத்தின் பயனாக வீடு, வாசல், சொத்து, சுகம், கணவன், மனைவி, மக்கள் என அனைத்தையும் இழந்து நடைப்பிணங்களாக மாற்றப்பட்டிருக்கின்ற காட்சி எமது மனங்களை புண்ணாக்கியுள்ளது. இந்த மக்களுக்கு எப்படி உதவலாம், என்னென்ன வகையில் இவர்களுக்கான உதவிகளை நல்க முடியும் என்று அல்லும் பகலும் சிந்திக்க வைக்கின்றது. வெளிநாடுகளில் இருந்தும் உள்;ர்; கொடை வள்ளல்களிடமிருந்தும், நிறுவனங்களில் இருந்தும் கிடைக்கக் கூடிய சிறுசிறு உதவிகளைக் கொண்டு முடிந்தளவு உதவி செய்து வருகின்றோம். எமது அரசியலுக்கும் மேலாக இந்த மக்களை எப்படி சராசரி மனிதர்களாக சமுதாயத்தில் ஓர் அங்கமாக அவர்களை மாற்றலாம் என்றே அல்லும் பகலும் பாடுபட்டுக்கொண்டிருக்கின்றோம்.
ஆனால் நாங்கள் எவரும், எல்லோரும் கொண்டுவரும் பொருளாதார முன்மொழிவுகளை உடனே ஏற்றுக்கொள்ள மாட்டோம். எமது கருத்துரையாளர்களின் கருத்தறிந்தே இதைச் செய்கின்றோம்.
இதனால் எம்மால் பலவிதமான விமர்சனங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. உதாரணத்திற்கு ஒரு சிங்கள நபர் இதுவரை கைவிடப்பட்ட நிலையில் இருந்த ஆலையொன்றினைத் தனக்குத் தருமாறு கோரியிருந்தார். உண்மையில் எமது கூட்டுறவுச் சங்கமொன்று அதனை நடாத்தப் போதிய வசதி இல்லாததாலேயே அவ்வாலை பூட்டிக் கிடந்தது. நாங்கள்; எமது திணைக்களம் ஒன்றினால் அதனை ஏற்று செயலாக்க முன்வந்த போதே மேற்படி நபர் அதனைக் கோரினார். நாங்கள் மறுத்ததால் அவர் எமது ஆளுநரைச் சந்தித்து கைவிடப்பட்ட நிலையில் ஆலைகள் பல உண்டு அவற்றை எடுத்து நடத்தவும் வடமாகாணசபைக்கு முடியவில்லை, நாங்கள் கேட்டாலும் தருகின்றார்கள் இல்லை என்று புகார் செய்தார். இதனால் ஆளுநர் அதைப் போய்ப் பார்த்துவிட்டு பரிசீலித்து விட்டு கைவிடப்பட்ட சகல கைத்தொழில் ஆலைகளையும் நாம் தனியாருக்காவது கொடுத்து நடத்த முன் வரவேண்டும் என்றார். இவ்வாறு தான் பல விமர்சனங்களுக்கு நாங்கள் முகங் கொடுத்து வருகின்றோம்.
அதே நேரத்தில் எமது மக்களின் மனம் அறியாது நிலை அறியாது உறுப்பினர்கள் பலர் செயற்பட்டு வருகின்றார்கள். செய்ய வேண்டிய வேலைகள் இருக்கும் போது சிறுபிள்ளைத்தனமான பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். எமது அமைச்சர்கள் மீது குற்றச் சாட்டுக்கள் ஏதாவது இருந்தால் எழுத்தில் ஆதாரத்துடன் தந்தால் உடனே உரிய நடவடிக்கைகள் எடுப்பேன் என்று கூறிய பின்னரும் சபையில் நம்பிக்கையில்லாத் தீர்மானங்களைக் கொண்டுவரத் தயாராகின்றார்கள். ஒருவரின் குற்றங்கள் கையுயர்த்தி ஏற்கப்படும் விடயங்கள் அல்ல. தாருங்கள் நான் உரியவர்களைக் கொண்டு விசாரித்து நடவடிக்கை எடுக்கின்றேன் என்றால் எதையும் என்னிடம் கையளிக்காமல் சபையில் சாட விரும்புகின்றார்கள். அமைச்சர்களைப் பற்றி அவதூறுகளை எடுத்து விளம்பவே சபையைப் பாவிக்கப் பார்க்கின்றார்கள். பல நன்மைகளை எதிர்பார்த்து மக்கள் இருக்கின்றார்கள். அதற்காகப் பாடுபடாது எதிர்மறையான காரியங்களிலேயே சிலர் தம் காலத்தைக் கழிக்கின்றார்கள்.
எங்கோ ஒரு தேசத்தில், அந்த நோர்வே நாட்டில், கடும் குளிரின் மத்தியிலும் இரவு பகலெனப் பாராது தமது உடலை வருத்தி உழைக்கின்ற சில அன்பு உள்ளங்கள் இவ்வாறான ஒரு அமைப்பை ஆரம்பித்து அதன் மூலமாக ஒருவருட காலத்திற்குள் சுமார் 37இலட்சம் ரூபாவரையான பணத்தை இந்த அமைப்பினூடாக அனுப்பி வைத்து இப்பகுதியில் உள்ள மாணவர்களுக்கான கல்வி அபிவிருத்தி, பின்தங்கிய வடக்கு கிழக்கு மக்களுக்கான வாழ்வாதார உதவிகள், போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் விதவைகளுக்கான தையல் நிலையம் என இன்னோரன்ன உதவிகளை ஆற்ற முடியுமானால் நாம் எமது பங்கிற்கு என்ன செய்திருக்கின்றோம்? வழித் தேங்காயை எடுத்து தெருப் பிள்ளையாருக்கு அடித்துவிட்டு அதனை போட்டோ பிடித்து புதினப் பத்திரிகைகளில் போடுவது மட்டும் நிறைவாகாது. எனவேதான் நாங்கள் எங்கள் அலுவலர்களை மாற்றி ஒரு புதிய யுகம் சமைக்க ஆவன செய்து வருகின்றோம். எமது தேவைகள் பற்றிய ஒரு கணிப்பறிக்கையை கௌரவ பிரதம மந்திரி அவர்கள் விரைவில் எமக்குத் தயாரித்துத் தருவதாகக் கூறியுள்ளார். முதலில் எங்கள் மக்களின் தேவைகளை முழுமையாக அறிந்து தேவையான நீண்ட காலத் திட்டத்தினை அமைத்து முன்னேற முடிவெடுத்துள்ளோம்.
ஆனால் எங்கள் முயற்சிகள் பயனளிக்கும் வரையில் நீங்கள் காத்துக் கிடக்க முடியாது. அதனால்த்தான் இப்பேர்ப்பட்ட கொடையுதவிகள் எமக்கு மிகவும் தேவைப்படுகின்றன. எமது கொடையாளிகளுக்கு எமது மனமார்ந்த நன்றியறிதல்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
எமது மக்களை முன்னேற்ற வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. இங்குள்ள பெண் தலைமைத்துவக் குடும்பங்களும், மகளிர் அமைப்புக்களும் தங்களுக்குள்ளேயே குழுக்களை அமைத்துக் கொண்டு ஒருவருக்கொருவர் உதவியாக அவசர தேவைகள், திடீர் செலவீனங்கள் ஏற்படுகின்ற போது தமக்குள்ளேயே உதவி வாழ்க்கை நடாத்துகின்ற அந்தத் தன்மை வரவேற்கப்பட வேண்டியது. இம் மக்களுக்கு எமது அன்புக் கரத்தை நீட்டி சற்று மேலே இவர்களை உயர்த்தி விட்டால் இவர்கள் வாழ்க்கையிலும் வசந்தம் பிறக்கும். முன்னர் கூறியது போன்று இப்போது மகளிர் விவகாரம் தொடர்பான திணைக்களம் முதலமைச்சரின் அமைச்சின் கீழ் மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த மகளிர் அமைப்புக்கள் தொடர்பான விபரங்கள் எமது அமைச்சில் இருந்து விரைவில் கோரப்படும். அதன் பின்னர் பெற்ற தரவுகளின் அடிப்படையில் வாழ்வாதார உதவிகளுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்ற நல்ல செய்தியையும் உங்களுக்கு தெரிவித்து எங்கள் அரசியல் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் அனைவரையும் ஒன்றாக இணைந்து கொண்டு இம்மக்களை முன்னேற்ற வாருங்கள் என வரவேற்று எனது உரையை நிறைவு செய்கின்றேன்.
நன்றி
வணக்கம்
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com