வடமாகாண சபையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் சிலர் இரண்டு குழுக்களாக பிரிந்து வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதால் சுமார் இரு மணி நேரம் மகாணசபை களோபரமடைந்தது.
வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் நடைபெற்றது.
அதன் போது கடந்த அமர்வில் விவசாய அமைச்சர் மீது 11 குற்ற சாட்டுகள் முன் வைக்கப்பட்டு பிரேரணை ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது.
குறித்த பிரேரணையை மாகாண சபை பதிவேட்டில் (ஹன்சால்டில்) இருந்து நீக்க வேண்டும் என கோரி முதலமைச்சருக்கு எட்டு மாகாண சபை உறுப்பினர்கள் கையொப்பம் இட்டு கடிதம் அனுப்பி இருந்தனர்.
எனவே அந்த பிரேரணையை பதிவேட்டில் இருந்து நீக்குமாறு முதலமைச்சர் கோரினர்.
உடனே எழுந்த மாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன் யோசித ராஜபக்சேவுக்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சே சட்டத்தரணியாக நீதிமன்றம் சென்றது போன்று இன்று விவசாய அமைச்சருக்காக முன்னாள் நீதியரசர் சட்டத்தரணியாக வாதிட வந்துள்ளார் என நக்கலான தொனியில் கருத்து கூறினார்.
அதனை அடுத்து எழுந்த உறுப்பினர் கந்தையா சர்வேஸ்வரன் , கடந்த அமர்வில் முதலமைச்சர் விவசாய அமைச்சரிடம் கோர வேண்டும் என கோரியே பிரேரணை நிறைவேற்றபட்டது. அதனால் முதலமைச்சர் கருத்து கூறினார்
அதற்காக முதலமைச்சரை மஹிந்த யோசிதவுடன் ஒப்பிடுவது கீழ்த்தரமான செயற்பாடு என கடுமையான தொனியில் கூறினார்.
அதனை அடுத்து கருத்துக்கூறிய முதலமைச்சர், குற்றசாட்டு என்றால் என்ன சாட்டுதல் என்றால் என்ன என்பதை முதலில் அறியுங்கள் நீங்கள் முன் வைத்தவை சாட்டுதல்கள் மாத்திரமே குற்ற சாட்டுகள் அல்ல என ஆவேசமாக கூறினார்.
அதனை அடுத்து சபையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் சிலர் இரு பிரிவாக பிரிந்து கருத்து மோதலில் ஈடுபட்டனர். எதிர்கட்சி உறுப்பினர்கள் உட்பட பல ஆளும் கட்சி உறுப்பினர்கள் மௌனமாக கருத்து மோதல்களை பார்வையிட்டுக்கொண்டு இருந்தனர்.
சுமார் இரு மணி நேரம் ஆளும் கட்சி உறுப்பினர்கள் இடையில் கடும் கருத்து மோதல் இடம்பெற்றன சிலர் ஆவேசமான குரலில் கருத்து மோதலில் ஈடுபட்டனர்.
இறுதியில் முதலமைச்சர் அன்றைய தினம் அமைச்சர் மீது முன் வைத்த குற்றசாட்டுக்கள் தொடர்பில் அமைச்சரிடம் விளக்கம் கோரி எழுந்து மூலம் பதில்களை பெற்றுக்கொண்டு உள்ளேன் என்றார். அதை தொடர்ந்து விவசாய அமைச்சரும் தான் எந்த விசாரணையையும் எதிர்க்கொள்ள தயார் என கூறினார் அவைத்தலைவர் அன்றைய பிரேரணையை ஹன்சால்டில் இருந்து நீக்க முடியாது என கூறினார். அதனை தொடர்ந்து மோதல் தணிந்து தேநீர் இடைவேளைக்காக சபை ஒத்தி வைக்கபட்டது.