வட்டுக்கோட்டை தீர்மானம் – எப்பவோ முடிந்த கருமம் – எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன்

Vakeesam # News1987 இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் படியாாகவும் அதனடிப்படையில் உருவாக்கப்பட்ட 13 ஆவது சீர்த்திருத்தம் மாகாணசபை முறைமைகளின்  பின்னராக வட்டுக்கோட்டைத் தீர்மானத்திலிருந்து தாம் வெளியேறிவிட்டதாக இலங்கை எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான  இராஜவரோதயம் சம்பந்தன் குறிப்பிட்டிருக்கிறார்.

தனித் தமிழீழமே தமிழருக்கான நிரந்தர அரசியல் தீர்வு என  1976 மே 14 ம் திகதி நடந்த தமிழர் விடுதலை கூட்டணியின் கட்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட வட்டுக்கோட்டையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நேற்றோடு (14.05.2016) 40 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இந்தியாவிலிருந்து வெளியாகும் தி இந்து (ஆங்கில) நாளிதழிற்காக கருத்துத் தெரிவித்தபோதே இரா. சம்பந்தன் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.

வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாளான நேற்றைய தினம் இரா. சம்பந்தனும் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இந்தியாவில் இந்தியப்பிரதமருடன் ஒரே மேடையில் கும்பமேளா நிகழ்வில் பங்குபற்றியிருக்கிறார்கள். இந்த நிகழ்வு கூட ஒரு விசித்திரமான சம்பவம்தான்.

1987 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னராக தாம் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திலிருந்து விலக்கிவிட்டோம் எனக் குறிப்பிட்டிருக்கும் சம்பந்தன் 1987 ஆம் ஆண்டே வட்டுக்கோட்டைத் தீர்மான நிலைப்பாட்டிலிருந்து விலகினாரா பின்னர் 2009 ஆண்டு மே 19 இற்குப் பின்னர் விலகினாரா என்பது சற்றுச் சிக்கலான நிலைப்பாடுதான்.

விடுதலைப் புலிகாளால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2009 மே வரை வட்டுக்கோட்டைத் தீர்மான நிலைப்பாட்டையே தனது தேர்தல் பிரச்சாரங்களிற்காக பயன்படுத்தியிருந்தது. 2007 ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு பிரிக்கப்பட்டு கிழக்கு மாகாணத்திற்கு தனியாக தேர்தல் நடைபெற்றபோது பிரிக்கப்பட்ட மாகாணம் ஒன்றிற்கான தேர்தலில் நிற்கப்போவதில்லை எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அத் தேர்தலைப் புறக்கணித்திருந்தது. பின்னர் 2013 ஆம் ஆண்டு வடக்கிற்கு தனியாக தேர்தல் நடைபெற்றபோது தேர்தலில் போட்டியிட்டு வடக்கு மாகாணசபை அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டாடியது.

வட்டுக்கோட்டைத் தீர்மான நிலைப்பாட்டையே பற்றிப் பிடித்துக்கொண்டிருப்பது சாத்தியமற்றது என அண்மைய மாதமொன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் உள்ளுர் நிகழ்வொன்றில் குறிப்பிட அது செய்தியாக பரவத் தொடங்கி விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில் தான் அவ்வாறு கூறவில்லை என மறுத்திருந்தார்.

இவ்வாறாகத்தான் இருக்கிறது தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பினரின் திருவாய் மொழிகள் வெளிநாடொன்றில் ஒரு கருத்தும் இங்கு ஒரு கருத்துமான நிலைப்பாடும் தேர்தல்களில் ஓரு கருத்தும் தேர்தல் முடிந்தால் வேறொரு கருத்தும் கேட்பதும் தமிழ் மக்களிற்கு சாதாரணமாகிவிட்டது.

வட்டுக்கோட்டைத் தீர்மானத்திலிருந்து தாம் வெளியேறிவிட்டதாக குறிப்பிட்டிருக்கும் சம்பந்தரின் கருத்தின் பின்னரான வட்டுக்கோட்டத் தீர்மானம் என்ன பாடு படப் போகின்றது என்பதை அடுத்த தேர்தல் ஒன்று நிகழும்வரை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com