வடமாகாணத்திற்கு 07 தங்க விருதுகள்!

நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவால் அறிமுகப்படுத்தப்பட்ட இணைய மயப்படுத்தப்பட்ட கணணி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் அமைச்சுக்கள், திணைக்களங்கள், மாகாண சபைகள், மாவட்ட செயலகங்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளடங்கலான தேசிய மட்டத்திலான 831 நிறுவனங்களது 2015ம் ஆண்டிற்கான செயலாற்றுகை மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

அவற்றுள் அதியுயர் செயலாற்றுகையை வெளிப்படுத்திய 81 நிறுவனங்களுக்கு தங்க, வெள்ளி விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு 2017.11.13 ம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் மிகத்திறமையான ஏழு நிறுவனங்கள் வடமாகாணத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு தங்க விருதுகளை பெற்றுக்கொண்டன.

அதியுயர் புள்ளிகளைப் பெற்று தங்கப் பதக்கங்களை சுவீகரித்துக் கொண்ட திணைக்களங்களில் முழுமையான 100 புள்ளிகளையும் பெற்று முன்நிலை வகித்த வடமாகாணத்திற்கான ஏழு நிறுவனங்களில் முதலமைச்சரின் அமைச்சு முதலாவது இடத்தையும் வடமாகாண சுகாதார அமைச்சு இரண்டாவது இடத்தையும் பெற்றுக் கொண்டன.

வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயங்கள் கூறப்பட்டுள்ளன.

அதேபோன்று மூன்றாம் இடத்தை பிரதிப் பிரதம செயலாளர், நிதி அலுவலகமும் நான்காவது இடத்தை சுகாதார திணைக்களமும், ஐந்தாவது இடத்தை நீர்ப்பாசனத் திணைக்களமும் பெற்றுக்கொண்டன.

ஆறாவது ஏழாவது இடங்களை உயர் புள்ளிகள் அடிப்படையில் 99 புள்ளிகளைப் பெற்று கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களமும் 95 புள்ளிகளைப் பெற்று வீதி அபிவிருத்தித் திணைக்களமும் பெற்றுக்கொண்டுள்ளன.

அதேபோன்று நிதிமுகாமைத்துவத்தில் சிறப்பான பெறுபேறுகளைப்பெற்று, நல்லூர்ப் பிரதேச சபை, வவுனியா (தெற்கு) பிரதேசசபை, மன்னார் பிரதேசசபை, பச்சிலைப்பள்ளிப் பிரதேசசபை மற்றும் கரைத்துரைப்பற்றுப் பிரதேசசபை ஆகிய ஐந்து பிரதேச சபைகளும் பாராட்டுச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com