வடக்கு விவசாய அமைச்சின் சூழலியல் விவசாயத்தை நோக்கி… நல்லூர் உற்சவகாலக் கண்காட்சி நாளை ஆரம்பம்

 

organic-farmingவடக்கு மாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் ‘சூழலியல் விவசாயத்தை நோக்கி…’ என்னும் தொனிப்பொருளிலான கண்காட்சி நாளை திங்கட்கிழமை (22.08.2016) ஆரம்பமாக உள்ளது. நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு நடைபெறும் இக்கண்காட்சி ஆலய வீதியில் அமைந்துள்ள நல்லூர் மங்கையற்கரசி வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்தில் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறது. இக்கண்காட்சி நாளை திங்கட்கிழமை (22.08.2016) பிற்பகல் 5 மணிக்கு ஆரம்பமாக உள்ளது. இதனை வடக்கு மாகாணக் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
வடக்கில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் விவசாயம் அதிக அளவிற்கு செயற்கை உரங்களையும் செயற்கைப் பீடைகொல்லிகளையும் பயன்படுத்தும் செறிவு வேளாண்மை ஆகும். இந்த இரசாயனங்கள் உணவின் மூலம் உடலை அடைந்து கேடுகளை விளைவிப்பதோடு, நிலத்தடி நீரையும் மாசுபடுத்தி வருகிறது. இவற்றைத் தடுப்பதற்கு நஞ்சுகளைப் பயன்படுத்தாத உணவு உற்பத்தி முறையை நோக்கி நாம் மீளவும் நகர வேண்டி உள்ளது. இது தொடர்பாகப் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி விவசாய இரசாயனங்களுக்கு மாற்றீடாக சேதனப் பசளைகள் மற்றும் இயற்கை முறையிலான பீடைகொல்லிகள் போன்றவற்றைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் நோக்கிலேயே ‘சூழலியல் விவசாயத்தை நோக்கி…’ என்னும் தொனிப்பொருளில் வடக்கு விவசாய அமைச்சு ஆண்டுதோறும் இக்கண்காட்சியை நடாத்திவருகிறது.
இக்கண்காட்சியில் வடக்கு மாகாண விவசாயத் திணைக்களம், கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களம் ஆகியவற்றின் காட்சிக்கூடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அத்தோடு, நடுகைப் பொருட்கள், சுதேச உணவுப்பொருட்கள் மற்றும் இயற்கைப் பழரசமென்பானங்கள் ஆகியவற்றின் விற்பனை மையங்களும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. இக்கண்காட்சியில் பார்வையாளர்களிடையே விவசாயம்; தொடர்பான வினாக்கள் கேட்கப்பட்டு சரியாக விடையளிப்போருக்குப் பயன்தரும் மரக்கன்றுகளும் தினமும் பரிசாக வழங்கப்பட உள்ளது.
22.08.2016 ஆரம்பமாகும் இக்கண்காட்சி பூங்காவனத் திருவிழா நடைபெறும் 02.09.2016 வரை தினமும் பிற்பகல் 2 மணியில் இருந்து 8 மணிவரை நடைபெறவுள்ளது. விசேட திருவிழா நாட்களான தேர், தீர்;த்தம் மற்றும் பூங்காவனத் திருவிழா நாட்களில் காலை 9 மணியில் இருந்து பிற்பகல் 8 மணிவரையும் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com