வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 25 ஆண்டுகள் கடந்துவிட்டது – இன்னும் முழுமையாக மீள்குடியேற்றப்படவில்லை

இலங்கையின் வடமாகாணத்தில் இருந்து விடுதலைப் புலிகளினால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 25 வருடங்களாகிவிட்ட போதிலும், அவர்கள் மீண்டும் சொந்த இடங்களில் மீள்குடியேறுவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் ஒரு லட்சம் வரையான முஸ்லிம்கள் வடமாகாணத்தின் ஐந்து
மாவட்டங்களிலும் இருந்து 24 மணி நேர அவகாசத்தில் வெளியேற்றப்பட்டிருந்தார்கள்.

கடந்த 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அப்போதைய அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் ஏற்பட்ட யுத்த நிறுத்தம் மற்றும் சமாதான பேச்சுவார்த்தைகள் என்பன நான்கு வருடங்கள் தொடர்ந்தன.

அப்போது வடமாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் தமது சொந்த இடங்களைப் பார்வையிவதற்கும் மீள்குடியேறுவதற்கும் அனுமதிக்கப்படும் என்ற விடுதலைப்புலிகள் அறிவித்திருந்தனர். ஆயினும் அவர்களுக்கான மீள்குடியேற்றம் துரிதப்படுத்தப்படவில்லை.

கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர், யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றும் நடவடிக்கைகள் அந்த வருட இறுதியிலேயே ஆரம்பிக்கப்பட்ட போதிலும், 2006க்குப் பின்னர் இடம்பெயர்ந்தவர்கள் மட்டுமே இந்த மீள்குடியேற்ற நடவடிக்கையில் மீள்குடியேற்றப்படுவார்கள் என்று அரசாங்கம் அறிவித்திருந்தது.

ஆயினும் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீள்குடியேற்றுவதற்கான விசேட திட்டங்கள் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இருந்த போதிலும், நாட்டில் அமைதி
ஏற்பட்டதையடுத்து முஸ்லிம் குடும்பங்கள் தாங்களாகவே சொந்த இடங்களில் மீள்குடியேறியிருக்கின்றன.

யாழ்ப்பாணத்தில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு மீள்குடியேற்றத்திற்கான அரச உதவிகள் கிடைத்துள்ள போதிலும், வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கான மீள்குடியேற்ற
வேலைத் திட்டம் எதுவும் மேற்கொள்ளாத காரணத்தினால் இன்னும் பல குடும்பங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியாதிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com