வடக்கு முதல்வர் மெத்தப்படித்த மேதாவித்தனத்துடன் நடந்துகொள்கிறார் – சீறிப்பாய்கிறார் தமிழரசுக் கட்சி செயலாளர்

img_0016
வடக்கு மாகாண முதலமைச்சர் மெத்தப்படித்த மேதாவித்தனத்துடன் நடந்துகொள்வதாகத் தெரிவித்துள்ள தமிழரசுக் கட்சியின் செயலாளரும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான க.துரைராசசிங்கம் எமது தமிழினத்திற்கு காலாகாலமாக தன்னை அர்ப்பணித்துள்ள மாவை.சேனாதிராஜாதான் வட மாகாண முதலமைச்சராக வந்திருக்க வேண்டியவர் ஆனால்  உலகத்திற்கு ஒரு பெறுமதியான செய்தியைக் காட்ட வேண்டும் என்பதற்காகவே அவரை அழைத்து வந்ததாகவும் வடக்கு முதலமைச்சரை கடுமையாகச் சாடியுள்ளார்.

கிழக்கு மாகாண சிறுவர் நன்னடத்தைத் திணைக்களத்தினால் 9 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிருமாணிக்கப்பட்ட சிறுவர் நன்னடத்தைக் காரியாலயம் செவ்வாய்க் கிழமை (06) மட்டக்களப்பு – பட்டிருப்பில் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

அந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் குறிப்பிடுகையில்….

 

தமிழ் மக்கள் 1948 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை தேடிக்கொண்டிருந்த நிகழ்வுகள் தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தில் நடைபெற்றிருகின்றன.

இந்த நாட்டினுடைய சிறுபான்மை மக்களுடைய பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமாக இருந்தால் இங்குள்ள பெரும்பான்மைக் கட்சிகள் இரண்டும் ஒன்றுபட வேண்டும்.

எமது பிரச்சினைகளை அனுதாபத்துடன் நோக்கக் கூடிய உலக சூழ்நிலை உருவாக வேண்டும், தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும். இவற்றுள் 2 நிகழ்வுகள் நடந்தேறிவிட்டன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் 2 பெரும்பான்மைக் கட்சிகளும் ஒன்றிணைந்து நல்லாட்சியை உருவாக்கியுள்ளது.vavunativu_turai_004

எமது பிரச்சினைகளுக்கு சாதகமான பதில்கள் வரவேண்டுமாயின், மேற்படி 3 விடையங்களும் கைகூட வேண்டும் என்று தந்தை செல்வா, வன்னியசிங்கம், அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், போன்றோர் அப்போதே கூறியிருந்தார்கள் அவை தற்போது சம்பந்தன் ஐயாவின் காலத்தில் உருவாகியிருக்கின்றது.

நாம் பல சந்தர்ப்பங்களிலே எமது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக நெருங்கி, நெருங்கி வந்திருந்தோம். அவற்றை மிகவும் நிதானமாகக் கையாளாததன் காரணமாகத்தான் மீண்டும் நாம் போர்ச் சூழலுக்குள்ளும், உரிமை மறுப்புக்குள்ளும் ஆளாக்கப்பட்டிருந்தோம்.

அரசியலமைப்பில் வரிகளினால் ஆக்கப்பட்டால்தால் எமது உரிமைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். அவற்றை அந்த அரசியலமைப்புக்குள் எவ்வாறு போடுவது என்பதை நன்கு தெரிய வேண்டும்.

சில மெத்தப் படித்த மேதாவிகள் எமது கூட்டமைப்புக்குள் தற்போது வந்துள்ளார்கள். அவர்களை எதற்கோ அழைத்து வந்தோம் அவர்கள் எங்கோ போய்விட்டார்கள். அவர்களின் அறிவையும் ஆற்றலையும் பயன்படுத்தலாம் என்று நினைத்தோம் அவர்களுக்கு வந்தவுடன் பதவி வெறிவந்துவிட்டது.

எமது தமிழினத்திற்கு காலாகாலமாக தன்னை அர்ப்பணித்துள்ள மாவை.சேனாதிராஜாதான் வட மாகாண முதலமைச்சராக வந்திருக்க வேண்டியவர்.

ஆனால் உலகத்திற்கு ஒரு பெறுமதியான செய்தியைக் காட்ட வேண்டும் என்பதற்காகத்தான் ஒருவரை அழைத்து வந்தோம்.

தற்போது அவர் மெத்தப் படித்த மேலாவித் தனத்தினால் அரசியலமைப்பை எழுதுகின்றாராம்.

அரசியலமைப்பை யாரும் எழுத முடியாது அரசியலமைப்பு நாடாளுமன்றிலே ஆக்கப்படல் வேண்டும்.

அதனை நாடாளுமன்றம் அங்கீகரிக்க வேண்டும். இதனை விடுத்து புள்ளி இடுவதற்காக அரசியலமைப்பை உருவாக்க முடியாது.

நாம் நுணுக்கமுள்ள தலைவரைக் கொண்டுள்ளோம். அவரின் செயற்பாட்டின் பின்னால் நாம் நிக்கின்றோம்.

கடந்த வாரம் வடக்கிற்குச் சென்றிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம், பான்கீன்மூனை எமது தலைவர் இரா.சம்மந்தன் உள்ளிட்ட தலைவர்கள் சந்தித்துவிட்டு வந்த பின்னர் அவர்களின் பின்னால் நின்று அங்கிருந்தவர்கள் கூக்குரல் போட்டுள்ளனர்.

மிகச் சிறந்த தலைவர்களைப் பார்த்து கூக்குரல் இட்டு ஏளனம் செய்துள்ளார்கள்.

காந்தியைச் சுட்டுக் கொன்றான் கோட்சே, நாம் தீர்மானிக்க வேண்டியது கோட்சேயா, காந்தியா?

அதுபோல் சம்பந்தனா அல்லது சம்பந்தனை எதிர்த்து நின்று தேசியத்தை நேசிப்பதாகச் சொல்லிக் கொண்டிருப்பவர்களா? என்று தீர்மானிக்க வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், அதனுடைய தலைமைத்துவமும் தமிழர்களை காட்டிக் கொடுக்க நினைக்கின்றது என சிலர் தெரிவித்து மக்களைத் திசை திருப்பப் பார்க்கின்றார்கள்.

முஸ்லிம்கள் எடுத்த எடுப்பிலே வடகிழக்கு இணைப்பு வேண்டாம் என அவர்கள் தெரிவிப்பது ஏன் எதற்கு என்றெல்லாம் பற்றிச் சிந்திக்க வேண்டும். அவர்களுடன் கலந்துரையாட வேண்டும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com