வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் இன்றாகும். இதனை முன்னிட்டு இலங்கையின் வடக்கு கிழக்கின் அனைத்து மாவட்டங்களிலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், மக்கள் பிரதிநிதிகள், பொது அமைப்புக்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணியினை முன்னெடுத்திருந்தன. வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான குரல் அமைப்பின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டங்கள் இன்று காலை 10 மணியளவில் நடைபெற்றன.
வடக்கில் யாழ்ப்பாணத்தில் இரு இடங்களில் ஆர்ப்பாட்ட பேரணிகள் இடம்பெற்றிருந்தன. யாழ் மத்திய பேருந்து நிலயத்துக்கு முன்பாக வடமராட்சி கிழக்கில் போராட்டம் நடத்திவரும் காணாமல் போனோர் உறவுகளும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் இணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தன.

இதேவேளை நல்லூர் ஆலயம் முன்பாக பிறிதொரு ஆர்ப்பாட்டம் நடைபெற்றிருந்தது. இவ் ஆர்ப்பாட்டம் போரணியாக கோவில் வீதியிலுள்ள ஐ.நா அலுவலகம் வரை சென்றது.

வவுனியா பேரூந்து நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதுடன், அதன் பின் ஏ9 வீதி வழியாகச் சென்ற பேரணி 188 ஆவது நாளாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் போராட்டம் மேற்கொள்ளப்படும் இடத்திற்குச் சென்று, அங்கிருந்து வவுனியா நகரசபை மண்டபத்தை வந்தடைந்தது.
மன்னார் இரண்டாம் கட்டையில் அமைந்துள்ள மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு அலுவலக முன்றலிருந்து ஆரம்பமான பேரணி மன்னார் பனித செபஸ்தியார் ஆலய வீதியூடாக மன்னார் மாவட்ட செயலகத்தின் முன்பாக நிறைவடைந்தது. இதேவேளை முல்லைத்தீவில் மாவட்டச் செயலகத்துக்கு முன்பாகவும் கிளிநொச்சியில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இருந்து மாவட்டச் செயலகம் வரையிலும் பேரணி இடம்பெற்றது.

கிழக்கில் திருகோணமலை மாவட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. மட்டக்களப்பில் காந்தி சிலை சதுக்கத்துக்கு முன்பாகவும் அம்பாறையில் மாவட்டச் செயலகம் முன்பாகவும் குறித்த ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றது.
ஆர்ப்பாட்டப் பேரணிகளைத் தொடர்ந்து கண்டன உரைகளும் இடம்பெற்றன.

????????????????????????????????????

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com