வடக்கு கால்நடை அமைச்சின் நடமாடும் மருத்துவசேவை

வடக்கு மாகாண கால்நடை அமைச்சின் முதலாவது நடமாடும் மருத்துவசேவை இன்று (20.08.2016) மன்னாரில் நடைபெற்றுள்ளது. நானாட்டான் மோட்டைக்கடை அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் இடம்பெற்ற இந்நடமாடும் மருத்துவ சேவையை வடக்கு கால்நடைத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பிரதமவிருந்தினராகக் கலந்துகொண்டு ஆரம்பித்துவைத்துள்ளார்.

வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் மொத்தமாக 34 கால்நடை மருத்துவ நிலையங்கள் இயங்கிவருகின்றன. இம்மருத்துவ நிலையங்களுக்கு நோயுற்ற கால்நடைகளை எடுத்துவருவதில் கால்நடை வளர்ப்பாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இதனைக் கருத்திற்கொண்டு, கால்நடை வைத்திய சேவையை மக்களை நோக்கிக் கொண்டு செல்லும் நோக்கோடு நடமாடும் மருத்துவ சேவையை மாதந்தோறும் நடாத்துவது என வடக்கு கால்நடை அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன் அடிப்படையிலேயே, முதலாவது கால்நடை மருத்துவ நடமாடும் சேவை மன்னாரில் இடம்பெற்றுள்ளது.

இந்நடமாடும் கால்நடை மருத்துவ முகாமின் ஊடாக செயற்கைமுறைச் சினைப்படுத்தல், சினைப் பரிசோதனை, விசர்நாய்த் தடுப்பூசி ஏற்றல், நாய்களுக்குக் கருத்தடை செய்தல், மாடுகளுக்குக் காது இலக்கம் இடல், நோயுற்ற கால்நடைகளுக்குச் சிகிச்சை வழங்குதல் போன்ற பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டுள்ளன.

மருத்துவமுகாம் நடைபெற்ற மோட்டைக்கடை பாடசாலைக்கு மன்னார், நானாட்டான், முசலி ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளைச் சேர்;ந்த நூற்றுக்கணக்கான கால்நடை வளர்ப்பாளர்கள் வருகை தந்திருந்தனர். இவர்களது தேவைகளின் அடிப்படையில் கால்நடை வைத்திய குழு தேவையான மருத்துவ ஆலோசனைகளையும், மருந்துப் பொருட்களையும் வழங்கிவைத்ததோடு, கால்நடை வளர்ப்பாளர்களின் வீடுகளுக்கும் சென்று சிகிச்;சைகளையும் மேற்கொண்டது.

இதன்போது கால்நடை வளர்ப்பாளர்களுக்கு பசுக்களுக்கு உணவாகப் பயன்படுத்தும் கனியுப்புக்;கலவை மற்றும் கால்நடைகளுக்குரிய முதலுதவிச் சிகிச்சைப் பொருட்களும் இலவசமாக வழங்கிவைக்கப்பட்டன. வடக்கு கால்நடை அமைச்சர் பொ.ஐங்கரநேசன், போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன், மாகாணசபை உறுப்பினர் ஞா.குணசீலன் ஆகியோர் இவற்றை வழங்கிவைத்தனர்.

கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் சி.வசீகரன் தலைமையில் நடைபெற்ற இந்நடமாடும் கால்நடை மருத்துவ சேவையில் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர்கள் வக்சலா அமிர்தலிங்கம், தபோதினி தேவநேசன், கமலேஸ்வரி யோகராஜா, கிரிஜகலா சிவானந்தன் ஆகியோருடன் ஐந்து மாவட்டங்களில் இருந்தும் கால்நடை வைத்தியர்களும் கலந்துகொண்டிருந்தார்கள்.

இரண்டாவது நடமாடும் கால்நடை மருத்துவசேவை செப்டெம்பர் மாதம் முல்லைத்தீவு மாவட்டத்தில் உடையார்கட்டுப் பிரதேசத்தில் இடம்பெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.01 02 05 06 07

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com