வடக்குக் கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும்!

தமிழர்களின் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமையை பெறுவதற்கு வடக்குக் கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டுமென தமிழ் மக்கள் பேரவை தீர்மானித்துள்ளது.

புதிய அரசியலமைப்புத் தொடர்பாக வெளியிடப்பட்ட இடைக்கால அறிக்கை கடந்த வெள்ளிக்கிழமை தமிழ் மக்கள் பேரவையினால் ஆராயப்பட்டது. அங்கு சமகால நிலைமைகள் குறித்தும் ஆராய்ப்பட்டதுடன் காரசாரமான விவாதங்களும் இடம்பெற்றன.

இதன்பின்னர் ஊடகமொன்றுக்கு கருத்துவெளியிட்ட தமிழ் மக்கள் பேரவை உறுப்பினர் ஒருவர்,

கடந்த 70 ஆண்டுகால அரசியல் போராட்டத்தின் மூலம் இலங்கை அரசாங்கம் எந்தப் படிப்பினைகளும் இன்றி தமிழ் மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றி வருகின்றது. 1972ஆம் ஆண்டு அரசியல் யாப்பு, 78ஆம் ஆண்டு அரசியல் யாப்பு ஆகியவற்றை தமிழ் மக்கள் எதிர்த்தனர், நிராகரித்தனர்.

30 ஆண்டுகால அஹிம்சைப் போராட்டமும் தோல்வியடைந்தது. அதற்கு அடுத்த 30 ஆண்டுகால ஆயுதப் போராட்டமும் திட்டமிட்டு அழிக்கப்பட்டது. ஆகவே அதற்கு அடுத்தபடியான கட்டத்தில் இருந்துகொண்டு இனிமேலும் காலத்தை கடத்த முடியாது.

2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான சூழலில், இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளை எதிர்த்துக் கொண்டும் நிராகரித்துக் கொண்டும் இருப்பதுடன் மாத்திரம் நில்லாது, அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக சிந்திக்க வேண்டும் எனக்கூறிய அந்த உறுப்பினர் வாக்கெடுப்பு நடத்துவதுதான் இறுதி முடிவு எனவும் கூறினார்.

வாக்கெடுப்பை நடத்த இலங்கை அரசாங்கம் விரும்பாது. தடையும் விதிக்கப்படலாம். ஆனாலும் சுயமான முறையில் வாக்கெடுப்பு நடத்தக்கூடிய பொறிமுறை ஒன்றை வடமாகாண சபையின் உதவியுடன் மேற்கொள்ள வேண்டும்.

அவ்வாறான பொறிமுறை ஒன்றின் மூலம், வடக்கு கிழக்கில் வாக்கெடுப்பு நடத்தி, தமிழர் தாயகத்தை அங்கீகரிக்க வேண்டும் என்று கூறிய அந்த உறுப்பினர் தேசிய விடுதலை வேண்டி நிற்கும் மக்கள் ஒன்றாக இணைந்து தமது சுயநிரணய உரிமையை வலியுறுத்தினால் சர்வதேச சமூகம் அதனை அங்கீகரிக்கும் என்றும் குறிப்பிட்டார்.

சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை தமிழ் மக்கள் பேரவை இன்று அறிக்கையாக வெளியிடும் எனவும் அந்த உறுப்பினர் தெரிவித்தார். அதேவேளை இந்த வாக்கெடுப்பில் புலம்பெயர் தமிழர்களையும் கலந்துகொள்ள வைப்பது தொடர்பாக அங்குள்ள பொது அமைப்புகளுடன் பேச்சு நடத்த வேண்டும் என்ற யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும்  கூறினார்.

குர்திஸ்தான் வாக்கெடுப்பு இன்று உலகில் முக்கியமாக பேசப்படுகின்றது. கற்றலோனியாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள வாக்கெடுப்பும் முக்கியமானது.

இவ்வாறான சூழலில் வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகம் தொடர்பாக அரசாங்கத்தின் உதவியின்றி வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என தமிழ் மக்கள் பேரவை எடுத்த தீhமானம் இலங்கை அரசாங்கத்திற்கு அதிர்ச்சியையும் படிப்பினையையும் கொடுக்கலாம் என அரசியல் ஆய்வாளர்கள் கூறுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழரசுக் கட்சியை குறிப்பாக சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரின் அரசியல் செயற்பாடுகளை மக்கள் நிராகரிக்கும் காலம் நெருங்கிவிட்டது எனவும் ஆய்வாளர்கள் கூறுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com