வடக்கில் சிங்கள மீனவர்களுக்கு இடையூறும் விளைவிக்கக்கூடாது!

வடக்குக் கடற்பரப்பில் மீன்பிடிக்கும் சிங்கள மீனவர்களிடம் வடக்கிலுள்ள பிரதேச செயலர்களோ, அதிகாரிகளோ எந்தவொரு கேள்வியும் கேட்கக்கூடாது என நீரியல் வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எல்.சி. பெர்னாண்டோ எச்சரித்துள்ளார்.

அத்துடன் இவ்விடயத்தில் உள்ளூர் மீனவர்களின் கரிசனைகளைக் கருத்தில் கொள்ளத் தேவையில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கில் சிங்கள மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பாக ஆராயும் கூட்டமொன்று நேற்று முன்தினம்(7) வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே தலைமையில் அவரது அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு கொழும்பிலிருந்து நீரியல் வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எல்.சி. பெர்னாண்டோ வருகை தந்திருந்தார்.

அத்துடன் இக்கூட்டத்திற்கு பல பிரதேச செயலர்கள், மாவட்டத்தின் மேலதிக செயலர்கள், நீரியல்வளத் திணைக்களத்தின் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு அதிகாரிகள், வீடமைப்பு அதிகாரசபை அதிகாரிகள், முல்லைத்தீவு மாவட்ட காணி அலுவலகர்கள், தென்பகுதி மீனவர்கள் சிலர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் உரையாற்றிய நீரியல் வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எல்.சி பெர்னாண்டோ, வடபகுதிக் கடலில் மீன்பிடிக்க அனுமதி கொடுக்கப்பட்ட தென்பகுதி மீனவர்களுக்கு எந்தவித தொந்தரவும் கொடுக்கக்கூடாது என எச்சரித்துள்ளார்.

மேலும், தென்பகுதி மீனவர்கள் வடக்குக் கடற்பரப்பில் சுதந்திரமாக மீன்பிடிக்க அனுமதிக்கப்படவேண்டும். அதற்கு வடபகுதி அதிகாரிகள் இடைஞ்சலாக இருக்கக்கூடாது.

அத்துடன், வடபகுதியில் கடற்றொழில திணைக்களத்தினால் வழங்கப்பட்ட பாடுகளில் தென்பகுதி மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடிப்பதற்காக அந்தப் பாடுகளுக்கான அனுமதிப் பத்திரத்தை பிரதேச செயலர்கள் எந்தவித விசாரணையுமின்றி வழங்கவேண்டும்.

இந்த விடயங்களுக்கு உள்ளூர் மீனவர்களின் கருத்துக்களை பிரதேச செயலர்கள் கேட்கவேண்டிய அவசியம் இல்லையெனவும் என அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com