சற்று முன்
Home / செய்திகள் / வடக்கில் எடுக்கும் முடிவுகளை எங்கள் மீது திணிக்காதீர்கள் என்கிறார் தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி வியாழேந்திரன்

வடக்கில் எடுக்கும் முடிவுகளை எங்கள் மீது திணிக்காதீர்கள் என்கிறார் தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி வியாழேந்திரன்

வடக்கு மாகாணத்தில் எடுக்கும் முடிவுகளை கிழக்கு மாகாணத்தில் அமுல்படுத்த அனுமதிக்கமுடியாது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

வடக்கில் எடுக்கும் முடிவுகள் கிழக்கில் தமிழ் மக்களுக்கு நன்மையளிக்குமாகவிருந்தால்தான் இனி நாங்கள் அவ்வாறான முடிவுகளுக்கு ஆதரவு வழங்குவோம் எனவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட புதுக்குடியிருப்பு பொது விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டரங்கு திறப்பு விழாவும் விளையாட்டு விழாவும் நேற்று சனிக்கிழமை மாலை சிறப்பாக நடைபெற்றது.

புதுக்குடியிருப்பு சுடர் விளையாட்டுக்கழகத்தினர் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் அவர்களினால் ஒதுக்கீடுசெய்யப்பட்ட 15 இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டில் இந்த விளையாட்டரங்கு நிர்மாணிக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டது.

புதுக்குடியிருப்பு சுடர் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் டினேஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்கள் பல விளையாடப்பட்டதுடன் இந்த விளையாட்டு நிகழ்வுகளில் பெண்கள் ஆண்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து சிறப்பித்தனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்,

கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலானது அனேகமான கிராமங்களுக்குள் பிரிவினைகளை உண்டுபண்ணியிருக்கின்றது. வட்டாரத் தேர்தல் முறையினால் பல சொந்தங்கள் பிரிந்துபோயிருக்கின்றன. ஆனால் தற்போது தேர்தல் முடிந்துவிட்டது. தேர்தலுக்குப் பின் எந்தக் கட்சியையோ அமைப்பையோ சேர்ந்தவராக இருந்தாலும் பாகுபாடில்லாமல் தமிழ் மக்களுக்காக சேவை செய்ய வேண்டுமென்ற உயரிய நோக்கத்தோடு செயற்பட வேண்டும். இந்த மாவட்டத்திலிருக்கின்ற அனைத்து உறவுகளும் எங்களது உயிருக்கு நிகரானவர்கள். நாங்கள் அவர்களுக்கு சேவையாற்றுவதற்காக நியமிக்கப்பட்டவர்கள். இதில் எந்தவிதமான பாகுபாடுகளுமில்லை.

மண்முனைப்பற்று பிரதேச சபையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது 80வீத வெற்றியைப் பெற்றது. ஆனாலும் அந்த சபையை நாம் இழந்து நிற்கின்றோம். காரணம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்குள் காணப்பட்ட ஒற்றுமையீனமாகும். எங்களுக்குள் சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தால் மண்முனைப்பற்று பிரதேச சபையை இழந்திருக்கின்றோம்.
மண்முனைப்பற்று பிரதேச சபையை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கைப்பற்ற வேண்டும் என்பதற்காக கிரான்குளத்தில் வெற்றி பெற்ற,ஆரையம்பதியில் வெற்றி பெற்ற எந்த உறுப்பினரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கு சார்பாக வாக்களிக்கவில்லை. புதுக்குடியிருப்பில் வெற்றி பெற்றவர் மட்டுமே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கு சார்பாக வாக்களித்தார். அவர் வேற்றுக் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் இந்த மண்ணில் தமிழ்த் தேசியம் தோற்றுப்போகக் கூடாது என்பதற்காக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்தார்.

தேர்தல் காலம் என்பது வேறு. தேர்தலுக்குப் பின்னர் நாம் அனைவரும் கரம் கோர்த்து செயற்பட வேண்டும். ஒற்றுமைக்காக உழைக்க வேண்டும். நாம் எல்லோரும் சமனானவர்கள்.

வடமாகாணத்தின் நிலைமை வேறானதாகும். அங்கு அனைவரும் தமிழர்களாவர். வடமாகாணத்தில் எடுக்கின்ற முடிவுகளை கிழக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்த முடியாது. இங்கு தமிழ் மக்களோடு முஸ்லிம், சிங்கள மக்கள் இணைந்து வாழ்கின்றனர். வடமாகாணத்தில் எடுக்கப்படகின்ற முடிவுகள் கிழக்கு மாகாண மக்களுக்கு நன்மைபயக்கின்றனவாக இருந்தால் மட்டுமே அவற்றை கிழக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு நாங்கள் அனுமதிப்போம். ஏனெனில் இங்குள்ள எமது மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன.

கடந்த காலங்களில் நாங்கள் மாகாணசபைகளில் முதலமைச்சர் பதவியை கைப்பற்றவில்லை. இம்முறை உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் நாங்கள் பின்னடைவை சந்தித்திருக்கின்றோம். ஆகவே கிழக்கிலிருக்கின்ற தமிழ்த் தலைமைகளும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளும் ஒன்றிணைய வேண்டும். இல்லாவிட்டால் வரவிருக்கின்ற மாகாண சபைத் தேர்தலில் தமிழர்கள் ஆட்சியமைக்க முடியாது.

தேசியத் தலைவரின் உயரிய சிந்தனையால் உருவாக்கப்பட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்குள் சிலர் இருந்துகொண்டு அவர் ஒட்டுக்குழுவை சேர்ந்தவர்,இவர் ஆயுதக்குழுவை சேர்ந்தவர் என தேவையற்ற விடயங்களை பேசிக்கொண்டிருப்பதால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்து சில கட்சிகள் வெளியேறிவிட்டன. ஆகவே இவ்வாறான பேச்சுக்களை நிறுத்திவிட்டு கிழக்கு மாகாண தமிழ் மக்களை காப்பாற்றுவதற்காக கிழக்கு மாகாண தமிழ்த் தலைமைகள் ஒன்றிணைந்து பேச வேண்டும். நாங்கள் எங்களுக்குள் பிரிவினையை உண்டுபண்ணுவதால் மாற்றுச் சமூகத்தவர் வளர்ந்துகொண்டு செல்கின்றனர்.

எங்களுக்குள் பிளவுகள் ஏற்படக்கூடாது.கிழக்கு மாகாணத்தில் ஓரணியில் ஒன்றுதிரண்டு கிழக்கு மாகாணத்தினை வெற்றிகொள்ளவேண்டும்.அவ்வாறு இல்லாவிட்டால் எதிர்வரும் தேர்தல்கள் நாங்கள் இன்னும் பின்னடைவினை சந்திக்கவேண்டிய நிலையேற்படும்.

ஒவ்வொரு வரவுசெலவு திட்டத்திலும் நாங்கள் பல்வேறு கோரிக்கைகளை விடுத்தோம்.மேல்மாகாணத்திற்கு தனியான அமைச்சு இருக்கின்றது,வடமேல் மாகாணத்தின் அபிவிருத்திக்கு தனியான அமைச்சு இருக்கின்றது,யுத்ததினால் பாதி;க்கப்பட்ட வடகிழக்குக்கு தனியான அமைச்சுகள் இல்லையென்ற கோரிக்கையினை முன்வைத்தோம்.

தற்போது நடைபெற்ற அமைச்சரை மாற்றத்தின்போது வடமாகாண அபிவிருத்திக்கு என தனியான அமைச்சு ஒன்று உருவாக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.வடமாகாணத்தில் ஐக்கிய தேசிய கட்சியில் விஜயகலா மகேஸ்வரன் அமைச்சராகவுள்ள நிலையிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராக உள்ளபோதிலும் கிழக்கு மாகாணத்தில் எவரும் இல்லாத நிலையே இருக்கின்றது.

மிகவும் வேதனையான விடயமாகும்.இந்த மண்ணை நாங்கள் இழந்துவிடுவோம். தமிழ் மக்களின் இருப்பினை இழந்துவிடுவோம்.கிழக்கு மாகாணத்திற்கு என ஒரு தமிழ் அமைச்சு உருவாக்கப்படவில்லை.நாங்கள் பிரதேசவாதம் பேசவில்லை.

ஈழ விடுதலை போராட்டத்தில் ஆயிரக்கணக்கான போராளிகளை அள்ளிக்கொடுத்த மாகாணம் கிழக்கு மாகாணம்.வடக்கில் பல்வேறு போர்களை செய்த மாகாணம்.இன்று நாங்கள் அனாதைகளாக நிற்கின்றோம்.கவனிபாரற்ற நிலையில் நிற்கின்றோம்.
கிழக்கு மாகாணத்தினை காப்பாற்றுவதற்கு,கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற தமிழ் தலைமைகள் கட்சி பேதங்களை மறந்து கிழக்கு தமிழ் மக்களுக்கான ஒன்றிணையவேண்டும்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com