லாகூருக்குள் நுழைந்துவிட்டோம்: நவாஸ் செரீப்பை எச்சரிக்கும் தீவிரவாதிகள்!

மனித வெடிகுண்டு தாக்குதலில் லாகூரில் 70 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, ’நாங்கள் லாகூருக்குள் நுழைந்துவிட்டோம்’ என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப்பிற்கு தீவிரவாதிகள் எச்சரிக்கை செய்தி அனுப்பி உள்ளனர்.
பாகிஸ்தானில் சிறுபான்மை மதத்தினரை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2013 ஆம் ஆண்டு பெஷாவர் நகரில் கிறிஸ்தவ ஆலயம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 80 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில், லாகூரில் நேற்று நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் 70 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர், 300க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
ஈஸ்டர் விடுமுறை தினம் என்பதால், நேற்று மாலை நேரத்தில் கிறிஸ்தவர்கள் உள்பட ஏராளமானோர் லாகூரில் குல்ஷன்-இ-இக்பால் பொது பூங்காவில் திரண்டு இருந்தனர். குழந்தைகள், பூங்காவில் உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த பூங்காவின் வாகன நிறுத்தும் இடத்தில் மிகவும் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. அடுத்த வினாடி, அந்த இடமே ரத்தக்களறி ஆனது. உடல்கள் சிதறி, உடல் பாகங்கள் ஆங்காங்கே சிதறி விழுந்து கிடந்தன. பலர் தங்களை காப்பாற்ற கோரி கூச்சலிட்டனர்.
இந்த தகவல் அறிந்து போலீசாரும், மீட்புப்படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு, ரத்த தானம் செய்யும்படி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் 70 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டது. இவர்களில் பலர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். மேலும், 300-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது. இதற்கிடையே, இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியது, ஒரு மனித வெடிகுண்டு தீவிரவாதி என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த தாக்குதலுக்கு தலிபானிடம் இருந்து பிரிந்துசென்ற ஜமாத் உல் அக்ரார் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்று உள்ள நிலையில், அது பாகிஸ்தான் அரசுக்கும் எச்சரிக்கை செய்தியை அனுப்பி உள்ளது. அந்த செய்தியில், ”ஜமாத் உல் அக்ரார் தீவிரவாத இயக்கம் பாகிஸ்தானில் பல்வேறு தாக்குதல்களில் ஈடுபட்டு உள்ளது. எங்களுடைய தாக்குதல் இலக்கு கிறிஸ்தவர்கள். பிரதமர் நவாஸ் செரீப்பிற்கு ஒரு செய்தியை தெரிவிக்க விரும்புகிறோம். அது என்னவென்றால், நாங்கள் லாகூருக்குள் நுழைந்துவிட்டோம் என்பதுதான்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com