லயனல் மெஸ்சிக்கு 5வது முறையாக ‘பல்லான் டி ஆர் ‘ விருது

கால்பந்து உலகின் உயரிய ‘பல்லான் டி ஆர் ‘விருதை பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் லயனல் மெஸ்சி 5வது முறையாக கைப்பற்றியுள்ளார். இந்த விருதை 5 முறை வென்றுள்ள ஒரே வீரர் என்ற வரலாற்று சாதனையையும் மெஸ்சி படைத்தார்.
ஃபிபா அளிக்கும் இந்த விருதுக்கான இறுதி பட்டியலில் பார்சிலோனாவின் லயனல் மெஸ்சி (அர்ஜென்டினா), ரியல்மாட்ரிட்டின் ரொனால்டோ (போர்ச்சுகல் ) பார்சிலோனாவின் மற்றொரு வீரர் நெய்மர் ( பிரேசில் ) ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். விருதுக்குரிய வீரரை கால்பந்து பயிற்சியாளர்கள் மற்றும் விளையாட்டு செய்தியாளர்கள் வாக்கெடுப்பின் மூலம் தேர்வு செய்தனர். 

இதில் பார்சிலோனா வீரர் லயனல் மெஸ்சி 41.33 சதவீத வாக்குகளை பெற்று ‘பல்லான் டி ஆர்’ விருதை (தங்கப்பந்து ) வென்றார். ரொனால்டோவுக்கு 27.76 சதவீத வாக்குகளும் நெய்மருக்கு 7.86 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்தது.
ஒவ்வொரு 101 நிமிடத்துக்கும் ஒரு கோல் 

மெஸ்சி கடந்த சீசனில் 61 போட்டிகளில் 52 கோல்களை அடித்துள்ளார். 28 கோல்கள் அடிக்க காரணமாக இருந்துள்ளார்.

ஒவ்வொரு 101 நிமிடங்களுக்கும் ஒரு முறை மெஸ்சி கோல் அடிக்கிறார். ஒவ்வொரு 202 நிமிடங்களுக்கு ஒரு முறை கோல் அடிக்க உதவிகரமாக இருக்கிறார். 

ஸ்பானீஷ் லீக்கில் மட்டும் 49 கோல்களில் மெஸ்சியின் பங்களிப்பு இருக்கிறது. இதில் 34 கோல்கள் அவரே அடித்தது. 15 கோல்கள் அடிக்க பாஸ் செய்திருக்கிறார்.
கடந்த 2014-15-ம் ஆண்டு பார்சிலோனா அணி ஸ்பானீஷ் லீக், சாம்பியன்ஸ் லீக், கோபா டெல் ரே, ஐரோப்பியன் சூப்பர் கோப்பை, ஸ்பானீஷ் சூப்பர் கோப்பை, ஃபிபா கிளப் உலகக் கோப்பை என 6 முக்கியத் தொடர்களில் 5 போட்டிகளில் கோப்பையை கைப்பற்றியுள்ளது. இந்த 6 தொடர்களிலும் மெஸ்சி கோல் அடித்து அசத்தியுள்ளார்.  கால்பந்து உலகில் எந்த வீரரும் நிகழ்த்தியிராத சாதனை இது. 

அத்துடன் கடந்த 2009 முதல் 2012 வரை 28 வயது  மெஸ்சி தொடர்ச்சியாக 4 முறை பல்லான் டி ஆர் விருதை வென்றுள்ளார். கடந்த 2013, 14ஆம் ஆண்டுகளில் ரொனால்டோ இந்த விருதை பெற்றார். தற்போது மெஸ்சி மீண்டும் கவுரவமிக்க இந்த  விருதை கைப்பற்றியுள்ளார்.
”பார்சிலோனாவை விட்டு விலகப் போவதில்லை”

விருது பெற்ற பின் மெஸ்சி பேசுகையில், ” பார்சிலோனா எனது தாய்வீடு. ஒரு காலமும் இந்த அணியை விட்டு விலகிப் போகும் எண்ணம் இல்லை. எனது கால்பந்து வாழ்க்கை பார்சிலோனா அணியுடன்தான் முடிவடையும் ” என்றார். 

பார்சிலோனா அணியின் முன்னாள் பயிற்சியாளர் பெப் கார்டியாலா, அண்மையில் பேயர்ன்மியூனிச் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார். விரைவில் அவர் மான்செஸ்டர் சிட்டி அணிக்கு பயிற்சியாளராக பொறுப்பேற்கவுள்ளார்.
எனவே மெஸ்சி மான்செஸ்டர் சிட்டியில் இணையவுள்ளதாக வதந்திகள் பரவின. ஆனால் பிரீமியர் லீக் அணியில் இணையும் எண்ணம் இல்லையென்பதை மெஸ்சி  தனது பேச்சு மூலம்  உறுதிபடுத்தியுள்ளார்.
ஃபிபா லெவன்

முன்களம் : ரொனால்டோ, மெஸ்சி, நெய்மர்

மத்திய களம் :ஆன்ட்ரஸ் இனியஸ்டா, பால் போக்பா,  மோட்ரிச்

பின்களம் : டேனி ஏல்வியஸ், மார்சிலோ, செர்ஜியோ ரமோஸ், தியாகோ சில்வா,

கோல்கீப்பர்:  மனுவேல் நியூயார்
பார்சிலோனா பயிற்சியாளர் லூயீஸ் என்ரிக் சிறந்த பயிற்சியாளருக்கான விருது வழங்கப்பட்டது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds