ரூ.570 கோடி யாருடைய பணம்…! பகீர் கிளப்பும் வைகோ

vote4திருப்பூரில் கன்டெய்னர் லாரியில் பிடிபட்ட ரூ.570 கோடி கோடநாட்டில் இருந்து ஆந்திராவுக்கு அனுப்பப்பட்ட பணம் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், மே 13 ம் தேதி நள்ளிரவில் திருப்பூர் மாவட்டத்தில் செங்கப்பள்ளியிலிருந்து குன்னத்தூர் செல்லும் பாதையில் பறக்கும் படையினர் மூன்று கன்டெய்னர்களைத் தடுத்து சோதனையிட்டதில், 570 கோடி ரூபாய் அதில் கண்டுபிடித்ததாகச் சொல்லப்பட்டது. இந்தக் கன்டெய்னர்களுக்கு முன்னால் சென்று கொண்டிருந்த மூன்று இன்னொவா கார்கள் மாயமாய் மறைந்துவிட்டன. இவ்வளவு பெருந்தொகையான பணம் எங்கிருந்து, எங்கு, யாரால், யாருக்காகக் கொண்டுசெல்லப்பட்டது? என்பது மர்மமாகவே இருந்தது. 18 மணி நேரம் கழித்து இந்தப் பணம் கோயம்புத்தூர் ஸ்டேட் வங்கியிலிருந்து விசாகப்பட்டினத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக ஒரு கோயபல்ஸ் பொய் அவிழ்த்துவிடப்பட்டது.

இதில் எழும் கேள்விகள்…

1. கோயம்புத்தூரில் இருந்து இவ்வளவு பெருந்தொகையான பணத்தை நள்ளிரவில் அனுப்ப வேண்டிய அவசியம் என்ன?

2. மூன்று கன்டெய்னர்களில் ஏன் அனுப்ப வேண்டும்? ஒரே பெரிய கன்டெய்னரில் இவ்வளவு பணத்தையும் சீருடை அணிந்த காவல்துறையின் பாதுகாப்புடன் அனுப்பியிருக்கலாமே?

3. இந்த மூன்று கன்டெய்னர்களுடன் வந்ததாகச் சொல்லப்படும் காவல்துறையினர் சீருடை அணியாமல் கைலி-லுங்கிகளில் வரவேண்டிய அவசியம் என்ன?

4. இவ்வளவு பெரும் தொகையை முதலில் விசாகப்பட்டினத்துக்கு அனுபியதாகச் சொன்ன ஸ்டேட் வங்கி அதிகாரிகள், பின்னர் விஜயவாடா என்று மாற்றிச் சொல்வது ஏன்?

5. ரூபாய் 570 கோடி எனும் இவ்வளவு பெரும் பணத்தை ஐதராபாத்தில் உள்ள ஸ்டேட் வங்கியிலிருந்தோ, அல்லது பெங்களூருவில் உள்ள ஸ்டேட் வங்கியிலிருந்தோ அனுப்பி இருக்கலாமே? மிக அருகாமையில் உள்ள இடங்கள்தானே இவைகள்?

6. இவ்வளவு பெருந்தொகை கோவை வங்கியில் எப்படி இருந்திருக்க முடியும்? பல கிளைகளில் இருந்துதானே கோவை வங்கிக்கு கொண்டுவந்து சேர்த்திருக்க முடியும்?

7. இப்பொழுது தான் மிக முக்கியமான கேள்வி எழுகிறது. ஒரே பெரிய கன்டெய்னரில் கொடநாட்டிலிருந்து கொண்டு செல்வது சிரமம் என்பதால், மூன்று கன்டெய்னர்களில் அனுப்பி தப்பித்துவிடலாம் என்று நினைத்திருப்பார்களோ?

8. கோயம்புத்தூரில் இருந்து சென்றிருந்தால், கணியூர் சோதனைச் சாவடியில் இந்த வண்டிகள் பதிவு செய்யப்பட்டனவா? அல்லது கொடநாட்டிலிருந்து மேட்டுப்பாளையம் -அன்னூர் -அவிநாசி வழியாகச் சென்றனவா?

9. நான்கு வழி புறவழிச் சாலையைவிட்டு, செங்கப்பள்ளியில் கீழே இறங்கி, குன்னத்தூர் சாலையில் சென்றதிலிருந்தே இது கொடநாட்டிலிருந்து அனுப்பப்பட்ட ஊழல் பணம் என்பது தெளிவாகிறது.

10 குன்னத்தூரிலிருந்து, கோபி-அந்தியூர்-அம்மாபேட்டை-மேச்சேரி தாண்டி, கிருஷ்ணகிரியிலிருந்து குப்பம் வழியாக ஆந்திராவுக்குள் சென்றுவிடலாம். கிருஷ்ணகிரியிலிருந்து குப்பம் வரை எங்கும் சோதனைச் சாவடி கிடையாது

11. கன்டெய்னர்களுடன் பாதுகாப்பாகச் செல்வதற்கு தமிழ்நாட்டுக் காவல்துறையைப் பயன்படுத்தாமல், ஆந்திர மாநில காவல்துறையை வரவழைத்தது ஏன்?

12. கோயம்புத்தூரில் இருக்கும் கன்டெய்னர்களைப் பயன்படுத்தாமல், வேறு இடத்திலிருந்து இந்தக் கன்டெய்னர்களைக் கொண்டுவரவேண்டிய அவசியம் என்ன?

13. மே 16 ம் நாள் வாக்குப் பதிவு முடிந்து, மே 19 ம் தேதி முடிவுகள் வெளியாகும்போது, அ.தி.மு.க. ஆட்சிக்கு வரமுடியாமல் தோற்கடிக்கப்பட்டுவிடும் என்று உறுதியாகத் தெரிந்ததால்தான், முதலமைச்சர் ஜெயலலிதா ஊழலில் சேர்த்து வைத்த கொள்ளைப் பணம் இந்தக் கன்டெய்னர்கள் மூலம் அனுப்பப்பட்டிருக்கிறது என்பதுதான் நேர்மையான சில உயர் அதிகாரிகளின் ஆணித்தரமான கருத்தாகும்.

14. இதே போன்றுதான் சிறுதாவூர் பங்களாவுக்கு நான்கு வழி புறவழிச் சாலையில் செல்லாமல், நடு இரவில் கிராமங்கள் ஊடான சாலை வழியாக இரண்டு கன்டெய்னர்கள், முதலமைச்சர் ஜெயலலிதா அடிக்கடி தங்குகிற சிறுதாவூர் பங்களாவுக்குள் அனுப்பப்பட்டன. அதில் இரண்டாவது கன்டெய்னர் விடியற்காலை இரண்டரை மணிக்கு சிறுதாவூர் பங்களாவின் சுற்றுச் சுவரில், பின்பக்கச் சுவரை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றது. காலை 6 மணிக்கு பதினோறு லாரிகள் சிறுதாவூர் பங்களா வளாகத்துக்குள் வந்தன.

இன்றைய முதலமைச்சரின் ஆயிரக்கணக்கான கோடி ஊழல் பணத்தை இந்தக் கன்டெய்னர்களில் கொண்டுபோய் இருக்கிறார்கள் என்பதால், உடனடியாக வருமான வரித்துறை அதிகாரிகளுடன், மத்திய ரிசர்வ் போலீஸ் படையுடன் சோதனையிட வேண்டும் என்ற கோரிக்கையை அனைத்துப் பிரசார மேடைகளிலும் நான் முன் வைத்தேன். மூன்று நாட்கள் கழித்து, தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி இதுபற்றி விசாரித்ததாகவும், சிறுதாவூர் பங்களாவுக்குள் அப்படி எதுவும் பணம் கொண்டுசெல்லப்பட வில்லை என்று மாவட்ட ஆட்சித் தலைவரும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும் கூறியதாகச் சொன்னார்.

தேர்தல் பிரசார அலங்கார வரவேற்பு ஏற்பாடுகளுக்காக கன்டெய்னர்களும், லாரிகளும் கொண்டுசெல்லப்பட்டதாக அ.தி.மு.க. தரப்பினர் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் விதத்தில் தமிழக மக்களை முட்டாளாக்கிவிடலாம் என்ற மமதையில் விளக்கம் அளித்தனர். கன்டெய்னர் பிரச்னை வந்தவுடன், ஏராளமான அ.தி.மு.க.வினர் கார்களிலும், ஆயிரக்கணக்கான தமிழ்நாடு காவல்துறையினரும் சிறுதாவூர் பங்களாவுக்கு எதிரே செல்லும் நெடுஞ்சாலையில் காவல் காத்து, ஊழல் கொள்ளைப் பணத்தை ஆந்திர மாநிலத்துக்கு அனுப்பிவிட்டதாக தங்கள் பெயரை வெளியிட விரும்பாத அதிகாரிகள் கூறினர்.

இந்த உலக மகா மோசடியில், தமிழக காவல்துறை தலைமை ஆணையர் டி.ஜி.பி. அசோக்குமாருக்கும், தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானிக்கும் பெரும் பங்கு இருக்கிறது என்பதும் அதிகார வட்டாரத்தில் நடமாடும் உண்மையாகும். காவல்துறை டி.ஜி.பி. அசோக்குமார் பணிக் காலம் முடிந்து, நீட்டிப்பில் இருக்கிறார். தேர்தல் பொறுப்புகளுக்கு டி.ஜி.பி. மகேந்திரன் அறிவிக்கப்பட்டிருந்தாலும் அவரது கைகளை அசோக்குமார் கட்டிப்போட்டுவிட்டார். உளவுத்துறை தலைமை காவல்துறை அதிகாரி எந்த ரகசிய அறிக்கையையும் நேரடியாக முதலமைச்சருக்கு அனுப்பாமல், தனக்கு மட்டுமே அனுப்ப வேண்டும் என்று வாய்மொழி உத்தரவிட்டிருக்கிறார். டி.ஜி.பி. அசோக்குமார் அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று இரண்டு முறை தலைமைத் தேர்தல் ஆணையத்துக்குக் கோரிக்கைக் கடிதம் அனுப்பினேன்.

இரண்டு நாட்களுக்கு முன்பு 14-ம் தேதி காலையில், எட்டரை மணி அளவில் இந்தியாவின் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “டிஜிபி அசோக்குமார் பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன், முயலோடும் ஓடுவது; வேட்டை நாயுடனும் சேர்ந்து கொள்வது என்ற விதத்தில் தான் சி.பி.ஐ. துறையில் உயர் அதிகாரியாக இருந்தபோது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி குடும்பத்தினருக்கு உதவியதாக ஒரு செய்தி உலவுவதால், தற்போதும் உளவுத்துறை அறிக்கைகளை தி.மு.க. தலைமைக்கும் அனுப்பி வருகிறார் என்று கூறியதோடு, தமிழ்நாட்டில் நியாயமான நேர்மையான தேர்தல் நடக்க வேண்டும் என்றால் டி.ஜி.பி. அசோக்குமார் உடனடியாக அப்பொறுப்பிலிருந்து விலக்கப்பட வேண்டும். நீங்கள் மத்திய அரசின் உளவுத்துறை மூலமாக நான் கூறியதை விசாரித்து நடவடிக்கை எடுங்கள்” என்றேன்.

மிக முக்கியமான கேள்வி, திருப்பூர் மாவட்டத்தில் பிடிபட்ட, அவர்கள் கணக்குப்படி 570 கோடி ரூபாய் (எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் என்ற உண்மை நமக்குத் தெரியாது) குறித்த மிகக் கடுமையான ஊழலில் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசுடன், முதல்வர் ஜெயலலிதா பல்வேறு வகைகளில் முயன்று அரசியல் பேரம் பேசுகிறார் என்பது மிக நம்பகமாகத் தெரிய வந்துள்ளது. மத்திய அரசு இந்த மோசடிக்குத் துணை போனால், உண்மை விசுவரூபம் எடுத்து வெளியே வரும். எனவே, இன்னும் அங்கே நிறுத்தப்பட்டிருக்கும் கன்டெய்னர்களில் இருக்கும் பணத்தை எண்ணும்போது, நேர்மையான அதிகாரிகளைக் கொண்டு அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில்தான் பணம் எண்ணப்பட வேண்டும்.

அ.தி.மு.க. ஊழல் அம்பலத்துக்கு வந்துவிட்டதால், தி.மு.க. ஊழல் பிரச்னையில் தப்பிவிட்டதாக எவரும் எண்ண வேண்டாம். ஒரு லட்சத்து எழுபத்து ஆறு ஆயிரம் கோடி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் மட்டுமின்றி, கிரானைட் கொள்ளை, ஆற்று மணல் கொள்ளை, தாது மணல் கொள்ளையிலும் தி.மு.க. கற்பனை செய்ய முடியாத கோடிகள் ஊழலில் கொள்ளையடித்ததை தமிழக மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள்.

தி.மு.க.வினரும், அ.தி.மு.க.வினரும் போட்டி போட்டுக் கொண்டு தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துவிட்டார்கள். அதற்கு சரியான உதாரணம்தான் அரவாக்குறிச்சி தொகுதி. அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. 14-ம் தேதி மாலை முதல் இன்று காலை வரை பணம் கொடுக்கப்பட்டது. ஒப்புக்காக சில இடங்களில் பறக்கும் படை சோதனையிட்டபோது, கண்டுபிடிக்கப்பட்ட பணத்தைத் தவிர, ராஜேஷ் லக்கானி ஒட்டுமொத்தமாக பணம் கொடுப்பதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இத்தகைய ராட்சச பணநாயகத்தால், உண்மையான ஜனநாயகம் வெல்லுமா? என்பது மே 19 ஆம் தேதிதான் தெரிய வரும். பண வெள்ளத்தை எதிர்த்து தே.மு.தி.க.-மக்கள் நலக் கூட்டணி-த.மா.கா. இணைந்து அமைத்த மாற்று அரசியல் வெற்றிக் கூட்டணி ஜனநாயகத்தைக் காத்து வெற்றி பெரும் என நம்புகிறேன். அத்தகைய வெற்றி கிட்டுமானால், புதிய வாக்காளர்களும், குறிப்பாக அலைபேசி, குறுஞ்செய்தி, முகநூல், டுவிட்டர், வாட்ஸ்அப் மூலம் கோடிக்கணக்கான மக்களுக்கு கருத்துகளைப் பரப்பிய கட்சிகளைச் சாராத அலைபேசி சிங்கங்கள் என்று நான் அழைக்கின்ற அலைபேசிப் புரட்சியாளர்கள்தான் அதற்கு முக்கியமான காரணமாவார்கள்.

மூன்று கண்டெய்னர்களில் கோடானு கோடி பணத்தை கள்ளத்தனமாகக் கொண்டு செல்ல முயன்ற அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், இன்றைய முதலமைச்சருமான ஜெயலலிதாவை ஊழலில் இம்முறை தப்பிக்கவிடாமல் மத்திய அரசு செயல்படப்போகிறதா? அல்லது உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தின் வாயிலாக ஊழல் குற்றவாளிக் கூண்டில் நாம் நிறுத்தப்போகிறோமா என்பதை அடுத்தடுத்த நடைபெறப் போகும் நிகழ்வுகள்தான் நிருபிக்கும்” என்று கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com