‘ராஜீவ்காந்தி கொலையின் நேரடி சாட்சி ‘போட்டோகிராபர் ஹரிபாபு உயிரோடு இருக்கிறார்!’ -ஆவணப்பட அதிர்ச்சி

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டு 25 ஆண்டுகள் கடந்துவிட்டன. ‘படுகொலைக்குக் காரணமானவர்கள்’ என சி.பி.ஐயால் சொல்லப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர், தங்களது விடுதலையை எதிர்நோக்கிக் காத்துக் கிடக்கிறார்கள்.

ராஜீவ்காந்தி படுகொலையின் மிக முக்கிய ஆவணம் என ஜெயின், வர்மா கமிஷன் விசாரணைகளில் குறிப்பிடப்பட்டது சம்பவ இடத்தில் போட்டோகிராபர் ஹரிபாபு எடுத்த புகைப்படங்களைத்தான். சர்வதேச அரங்கையும் இந்தப் புகைப்படங்கள் உலுக்கியது. ” ஸ்ரீபெரும்புதூர் குண்டுவெடிப்பில் ஹரிபாபு இறந்துவிட்டாலும், அவர் எடுத்த புகைப்படங்களால்தான் குற்றவாளிகளை நெருங்க முடிந்தது” என பெருமைப்பட்டுக் கொண்டார் சி.பி.ஐ இயக்குநராக இருந்த கார்த்திகேயன்.
இந்நிலையில், ” போட்டோகிராபர் ஹரிபாபு இறந்துவிட்டார் என அதிகாரிகள் சொல்வது சுத்தப் பொய். அவர் உயிரோடுதான் இருக்கிறார். அவரை வேண்டுமென்றே அதிகாரிகள் தப்ப வைத்தார்கள். சம்பவ இடத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது அவருடைய கேமராவும் அல்ல. அத்தனையும் நாடகம்” என அதிர வைக்கிறார்கள் இரண்டு மருத்துவர்கள். தடய அறிவியல் ஆய்வு அறிக்கை, ஹரிபாபுவின் போஸ்ட்மார்ட்டம் அறிக்கை, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் ஆவணங்கள் என எட்டு ஆண்டுகளாக இதற்காகப் பயணித்து, பல புது தகவல்களைக் கண்டறிந்திருக்கிறார்கள்.

வருகிற மே 21-ம் தேதி ராஜீவ்காந்தி படுகொலை தினத்தன்று ‘பைபாஸ்’  என்ற தலைப்பில்,  ஆவணப்படத்தை வெளியிட இருக்கிறார்கள். கோவையைச் சேர்ந்த மருத்துவர் ரமேஷ் மற்றும் கல்பாக்கம் மருத்துவர் புகழேந்தி ஆகிய இருவரும்தான், ஹரிபாபுவை நோக்கிக் காய்களை நகர்த்தியவர்கள்.

கல்பாக்கம் மருத்துவர் புகழேந்தியிடம் பேசினோம்…

ஹரிபாபுவை நோக்கிப் பயணிக்கும் யோசனை எப்படித் தோன்றியது?

” எங்களுக்குத் தொடக்கம் முதலே ராஜீவ்காந்தி படுகொலையின் தடய அறிவியல் அறிக்கை, போஸ்ட்மார்ட்டம் உள்ளிட்ட பல விஷயங்களில் சந்தேகம் இருந்தது. கோவையைச் சேர்ந்த என்னுடைய நண்பர் மருத்துவர் ரமேஷ், படுகொலை வழக்கின் ஆவணங்களைத் தேடும் முயற்சியில் இறங்கினார். ஜெயின் கமிஷன், வர்மா கமிஷன் ஆகிய இரண்டிலும், ‘குற்றத்தைப் பற்றிய விடை தெரிவதற்கு மிக முக்கியமான காரணம், ஹரிபாபு எடுத்த கேமராவும் படங்களும்தான் முழு வழக்கையும் முடிவுக்குக் கொண்டு வந்தது’ என்றது.

எங்களுடைய கேள்வியெல்லாம், ‘ஹரிபாபு இறந்துவிட்டார். ஆனால், அவருடைய கேமரா மட்டும் எப்படி பாதிப்படையாமல் போனது?’ என்பதுதான். ‘தாமரை பூ வடிவில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது’ என்கிறது புலனாய்வு அறிக்கை. அப்படி வெடிக்கும்போது கேமரா பாதிப்படையாமல் இருக்காது என சந்தேகப்பட்டோம். அப்போது எங்களுடைய சந்தேகங்களுக்கு விடை கிடைக்கவில்லை. இதுதொடர்பான ஆவணங்களைப் பெறுவதற்கே மிகவும் கஷ்டப்பட்டோம்.

2008-ம் ஆண்டு ராஜீவ் படுகொலை வழக்கைக் கையாண்ட தடய அறிவியல் துறை பேராசிரியர் சந்திரசேகர், ‘ஃபர்ஸ்ட் ஹியூமன் பாம்’ என்ற புத்தகத்தை எழுதினார். அதில் பல கேள்விகளுக்கு விடை கிடைத்தன. ‘கேமரா எப்படி பாதிப்படையாமல் கிடைத்தது?’ என்ற கேள்விக்கு பதில் சொல்லும் சந்திரசேகர், ‘ பூகம்பம் நடக்கும்போது அதிர்ஷ்டவசமாக சிலர் இடிபாடுகளுக்கு நடுவிலும் பாதுகாப்பாக வெளிவந்திருக்கிறார்கள். அதைப் போலத்தான் கேமராவும் கிடைத்தது’ என்கிறார்.

ஆனால், ‘ கிரைம் சீன் இன்வெஸ்டிகேஷன்களில் இதுபோன்ற உவமைகள் எடுபடாது, சம்பவ இடத்தின் நிலவரத்தைப் பொறுத்து அறிவியல்ரீதியாகப் பேச வேண்டும்’ என அமெரிக்காவின் டாபெர்ட் வழக்கின் புலனாய்வு வழிமுறைகள் சொல்கிறது. டாபெர்ட் வழக்கின் புலனாய்வு முறைகளைச் சரியாகக் கையாண்டிருந்தால், இந்த வழக்கின் போக்கே திசைமாறியிருக்கும். அப்படி எதையும் புலனாய்வுத் துறை செய்யவில்லை. நாங்கள் டாபெர்ட் நடைமுறைகளைக் கையாண்டு விசாரணையைத் தொடங்கினோம்.”

ஹரிபாபு சாகவில்லை என்பதை எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?

” ஹரிபாபுவின் போஸ்ட்மார்ட்டம் அறிக்கையைத் தேடினோம். அந்த அறிக்கையில், ‘இறந்த நபருக்கு சுன்னத் செய்யப்பட்டிருக்கிறது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘வன்னிய சமூகத்தைச் சேர்ந்த ஹரிபாபு எப்படி சுன்னத் செய்வார்?’ தவிர, ‘அந்த சடலத்தின் வயது 30’ என்கிறார்கள். ஹரிபாபுவுக்கு 22 வயதுதான் ஆகிறது. ராஜீவ் காந்தியை படம் எடுக்கும்போது, அவர் நடந்துவரும் கார்பெட்டின் இடதுபக்க மூலையில் இருந்திருக்கிறார் ஹரிபாபு. அங்கிருந்துதான் போட்டோ எடுத்தார். ஆனால், அவரது உடலை வலது பக்கம் இருந்து எடுத்ததாகச் சொல்கிறார்கள். குண்டு வெடித்தாலும் உடல் வலது பக்கம் வந்து விழுவதற்கு வாய்ப்பே இல்லை.

‘உங்கள் மகனின் உடல் இது’ என போலீஸார் சொன்னதைக் கேட்டு, அவரது அப்பா சுந்தரமணி உடலைக் கையெழுத்து போட்டு வாங்கியிருக்கிறார். ‘சடலத்தை எரிக்கக் கூடாது, புதைக்க வேண்டும்’ எனப் போலீஸார் கூறியிருக்கிறார்கள். ஆனாலும், ஹரிபாபு குடும்பத்தினர் அன்றைக்கே உடலை எரித்துவிட்டார்கள். மருத்துவர்கள் அந்த சடலத்தில் இருந்து தலையை வெட்டி எடுத்திருக்கிறார்கள். அவர் முகம் முற்றிலும் சிதைந்துவிட்டது எனச் சொல்கிறார்கள். சடலத்தில் இருந்து கை ரேகை மட்டும் எடுத்தவர்கள், டி.என்.ஏ சாம்பிள் எடுக்கவில்லை. மருத்துவர்களும், ‘ஏன் சுன்னத் செய்யப்பட்டிருக்கிறது?’ எனவும் கேள்வி எழுப்பவில்லை. ஹரிபாபுவின் அக்கா விஜய ரேவதி சொல்லும்போது, ‘கிரீம் கலர் சட்டை அணிந்திருந்தான்’ என்கிறார். ஆனால், போலீஸோ, ‘ பச்சை கலர் முழுக்கை சட்டை’ எனச் சொல்கிறார்கள். இதையெல்லாம் யாரும் கேள்வி எழுப்பவில்லை.”

அப்படியானால், போலீஸார் காட்டும் சடலம் யாருடையது?

” அதற்கும் எங்களுக்கு விடை கிடைத்தது. ஸ்ரீபெரும்புதூரில் சுலைமான் சேட் என்று ஒருவர் இருக்கிறார். அவர்தான் ராஜீவ்காந்தி நடந்து வரும்போது பூ தூவுவதற்காக இருவரை ஏற்பாடு செய்திருந்தார். அவர்கள் இருவரும் முஸ்லிம்கள். கண்டிப்பாக இந்த இருவரில் ஒருவரைத்தான் ஹரிபாபு எனக் காட்டியிருக்கிறார்கள் என்று எங்களுக்குத் தோன்றுகிறது. இரண்டு பூக்கூடைகள் சம்பவ இடத்தில் இருந்தது என புலனாய்வு அறிக்கை சொல்கிறது. சுப்ரமணியன் சுவாமியும் இரண்டு பூக்கூடை இருந்ததாகச் சொல்கிறார். ”

இந்த விவகாரத்தில் தவறு செய்தது யார்?

“கிரைம் சீன் இன்வெஸ்டிகேசன் என்பதே இந்த வழக்கில் முற்றிலும் மீறப்பட்டிருக்கிறது. முன்னுக்குப்பின் முரணான தகவல்களைச் சொல்கிறார் தடய அறிவியல் பேராசிரியர் சந்திரசேகர். சம்பவ இடத்திற்கு மறுநாள் காலை 11 மணிக்குப் போனதாகச் சொல்லியிருக்கிறார்.

ஆனால், கே.ராமசுந்தரம் என்ற ஃப்ரீலான்ஸ் நிருபர், தன்னுடைய பிளாக்கில், ‘மே 22-ம் தேதி எனக்குப் பேட்டி கொடுத்தார் சந்திரசேகர்.ராஜீவ்காந்தியின் ஷூ, மனித வெடிகுண்டு தனுவின் தலையில் இருந்த கனகாம்பரம், பச்சை கலர் சல்வார், ஆரஞ்ச் கலர் பாட்டம், வெடிகுண்டுக்கு பயன்படுத்திய சுவிட்ச் ஆகியவற்றைக் காட்டினார் சந்திரசேகர். நான் அதை வீடியோ எடுத்தேன். சம்பவ இடத்திற்கு முதல்நாள் இரவே சந்திரசேகர் போய்விட்டார்’ என எழுதியுள்ளார்.  இந்த வீடியோப் பதிவுகள் லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் மற்றும் கனடாவின் டோரண்டோ ஸ்டார் ஆகியவற்றில் வெளியானது.”

இப்படிச் செய்ய வேண்டிய அவசியம் என்ன?

“இந்த வழக்கின் மிக முக்கியமான கேள்வி இது. சம்பவ இடத்தில் இருந்து காயத்தோடு ஹரிபாபுவை மீட்டவர்கள், அவரைத் தப்பியோட வைத்துவிட்டார்கள். இதற்குப் பின்னால் ஏராளமான மர்மங்கள் இருக்கின்றன.”

அப்படியானால், ஹரிபாபு இப்போது எங்கே இருக்கிறார்?

“அவர் இப்போது பக்கத்து மாநிலம் ஒன்றில் சாமியார் வேடத்தில் இருக்கிறார். அவரைத் தப்பவிட்டது யார்? என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு அவரிடம் விடை இருக்கிறது. அவரது குடும்பத்தினர் சென்னையில் குடியிருந்தார்கள். இப்போது வேறு இடத்திற்குப் போய்விட்டார்கள்.”

ஆவணப்படம் எப்போது வெளியாகும்?

” ராஜீவ்காந்தி படுகொலை தினத்தன்று வெளியிடத் திட்டமிட்டிருக்கிறோம். தவறான நீதியால் ஏற்பட்ட விளைவுகளைச் சொல்லும் சிலப்பதிகாரக் கதை நடந்த பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறோம். ஒரு மணி நேரம் ஓடக் கூடிய படம் இது. வழக்கின் பல மர்மங்களை அவிழ்க்கும் மிக முக்கியமான ஆவணப்படமாகவும் இது இருக்கும்!” என விரிவாகப் பேசி முடித்தார் மருத்துவர் புகழேந்தி.

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கு பற்றிய விவாதம் வரும்போதெல்லாம், ‘உண்மைக் குற்றவாளிகள் அரசு பதவிகளில் அமர்ந்து கொண்டு உலா வருகிறார்கள். தவறே செய்யாதவர்கள் இளமையைத் தொலைத்துவிட்டு, நோயோடு சிறைகளில் வாடுகிறார்கள்’ என்பார்கள். அது உண்மைதானோ!?

(நன்றி – விகடன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com