சற்று முன்
Home / செய்திகள் / “ரணில் அரசாங்கத்திற்கு முண்டு கொடுப்பது உண்மைதான்” – சுமந்திரன் பளீர் பதில்

“ரணில் அரசாங்கத்திற்கு முண்டு கொடுப்பது உண்மைதான்” – சுமந்திரன் பளீர் பதில்

“இந்த அரசுக்கு நாங்கள் முண்டுகொடுக்கவேண்டிய தேவை – அவசியம் இன்றைய நிலையில் எமக்கு உண்டு. இல்லாவிட்டால் கடந்த ஒக்டோபரில் நடந்தது இப்போதும் உடனடியாக நடக்கும். அது தமிழ் மக்களுக்குப் படுபயங்கரமான ஒரு விளைவை ஏற்படுத்தும். ஆகவேதான் நாம் அரசுக்கு முண்டுகொடுக்கிறோம். ஐக்கிய தேசியக் கட்சிக்காக நாங்கள் செயற்படவில்லை. ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவாகவும் செயற்படவில்லை. எங்கள் மக்களுக்கு ஆதரவாகத்தான் இதைச் செய்கிறோம்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய நிலைப்பாட்டை மிக வெளிப்படையாகவே எடுத்துரைத்தார் அதன் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன்.

‘காலைக்கதிர்’ நாளிதழுக்கு வழங்கிய செவ்வியின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதேவேளை, ‘புதிய அரசமைப்பு மற்றும் போர்க்குற்ற விசாரணை என்பன தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளே ஒருமித்த நிலைப்பாட்டை காணவில்லை. பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோ மாறுபட்ட நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றதே?’ என்ற கேள்விக்கு அவர் பதில் வழங்கும்போது,

“அடிக்கடி இப்படியான குழப்பங்கள் கட்சிக்குள் வருவதும் சகஜமாகப் போய்விட்டது. ஆனால், கூட்டமைப்பு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் சென்ற வாரம் நடைபெற்றபோது ரெலோவும் பங்குபற்றியிருந்தது. அதில் இந்த விடயங்கள் பற்றிப் பேசப்பட்டன. அதன்போது நாங்கள் சொன்ன விளக்கங்களை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.

அதாவது இந்தக் கால அவகாசம் என்பது தவறான சொற்பிரயோகம் என்று சொன்னபோதும் அதை ரெலோ ஏற்றுக்கொண்டது.

இதனை முதலிலேயே எங்களுக்குச் சொல்லியிருந்தால் நல்லதுதானே என்று அவர்கள் கூறினார்கள்.

கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலும் இதே விடயங்களைத்தான் நாங்கள் விவாதித்தோம். கால அவகாசமா அல்லது சர்வதேச மேற்பார்வையா என்பது குறித்து நாங்கள் வவுனியவில் சந்தித்து ஒரு நாள் முழுவதும் அதனைப் பற்றிப் பேசி ஒரு தீர்மானம் எடுத்திருந்தோம் என்று நான் பதிலளித்தேன்.

ஆகவே, அதே விடயம்தான் இப்போதும் பேசப்படுகின்றது. இவ்வாறான நிலையில் இதனை முதலில் பேசியிருக்கலாம் என்று சொல்கின்றமை பொருத்தமில்லை. உண்மையில் இது தொடர்பில் இரண்டு வருடங்களுக்கு முன்னரே பேசிவிட்டோம். உங்களுக்கு மறதியா? திரும்பத் திரும்பப் பேசவேண்டுமா? என்று நான் கேட்டபோது அதற்கு அவர்கள் பதில் சொல்லவில்லை. அதனால் நாங்கள் எடுத்துக்கொண்ட நிலைப்பாட்டோடு ரெலோவினரும் இணங்கினார்கள்” என்றார்.

‘கூட்டமைப்பு எடுக்கும் நிலைப்பாட்டுக்கு மாறுபட்ட நிலைப்பாடுகளை மக்கள் மத்தியில் வெளிப்படுத்தி வரும் பங்காளிக் கட்சியான ரெலோ கூட்டமைப்பில் இருந்த வெளியேற எத்தனிக்கின்றதா?’ என்ற கேள்விக்கு அவர் பதில் வழங்கும்போது,

“அவர்கள் அவ்வாறு வெளியேறப்போவதில்லை. கடந்த 2017 மார்ச்சிலும் இப்படியான கருத்துக்கள் ரெலோவில் இருந்தும் வந்தன. ஆனால், நாங்கள் எல்லோரும் ஒரு கூட்டத்தை ஒழுங்கு செய்து சந்தித்தபோது ஒரே நிலைப்பாட்டுக்கு அவர்கள் இணங்கினார்கள். அதேபோலவே சென்ற வாரமும் நடந்திருக்கின்றது” – என்றார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com