யாழ“ சிற்றங்காடிக் கடைத் தொகுதியில் பேய் – வியாபாரிகளின் வயிற்றிலடிக்க சிலரின் விசமம் என குற்றச்சாட்டு

“யாழ்ப்பாணம் நகர் சிற்றங்காடியில் பேய், பிசாசுகள் நடமாடித் திரிகின்றன எனக் கூறப்படுவது உண்மைக்குமாறானது. எமது வியாபாரத்துக்கு எதிரானவர்களால் கட்டிவிடப்பட்ட கட்டுக்கதை”
இவ்வாறு யாழ்.நகர சிற்றங்காடி வியாபாரிகள் சிலர் தெரிவித்தனர்.

யாழ்.மத்திய பேருந்து நிலையத்துக்கு அருகாமையில் யாழ்.மாநகர சபையால் புதிதாக அமைத்துக்கொடுக்கப்பட்ட சிற்றங்காடி கடை தொகுதியில் அமானுசிய சக்திகளின் நடமாட்டம் உள்ளதாக செய்தி வெளியாகியிருந்தது.
“சிற்றங்காடி கடைத் தொகுதியில் 76 கடைகள் உள்ளன. அதன் மூலம் 125 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இங்கு தொழில் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். இரண்டு வியாபாரிகள் முன்னர் உயிரிழந்தனர்.
அவர்கள் இருவரும் நீண்டகாலமாக நோய் வாய்ப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில்தான் உயிரிழந்தனர். ஒருவர் சிறுநீரகம் செயலிழந்து இருந்தமையால் நோய் வாய்ப்பட்டு இறந்தார். மற்றவர் மாரடைப்புக் காரணமாக உயிரிழந்தார். அவர்கள் பேய் பிசாசு அடித்து உயிரிழக்கவில்லை. நோய் வாய்ப்பட்டே உயிரிழந்தார்கள்.

யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளரிடம் புதிய கடைத்தொகுதிக்கு சாந்தி செய்ய வேண்டும் எனக் கோரி இருந்தது உண்மைதான். எமது இந்து மரபின் படி நாம் புதிய தொழில் முயற்சிகளை ஆரம்பிக்கும் போதும் புதிய கடையைத் திறக்கும் போதும் சாந்தி செய்வது வழமை. ஆனால் இந்த கடைகள் திறக்கும் போது அவ்வாறு சாந்தி செய்யவில்லை.
ஆடி மாதத்தில் கடை திறந்தமையால் மனதுக்கு சங்கடமாக இருக்கின்றது. அதனால் சாந்தி செய்வதற்கு ஏற்பாடுகள் செய்து தருமாறு யாழ்.மாநகர சபை ஆணையாளரை கோரியுள்ளோம். அவரும் அதற்கு சம்மதித்துள்ளார்.
நாம் சாந்தி செய்யன் கோரியது எமது மதம் சார்ந்த நம்பிக்கைக்காகவே தவிர, பேய் பிசாசுக்கு பயந்தில்லை. பேய் பிசாசு என்பதை இந்த காலத்தில் நம்புவது முட்டாள் தனமான மூட நம்பிக்கை. அப்படி இங்கு எதுவுமில்லை. தொழில் போட்டி காரணமாக சிலர் அவ்வாறான கட்டுக்கதைகளை கட்டிவிட்டுள்ளனர். மக்கள் அச்சப்படாமல் எமது கடைகளுக்கு வந்து பொருள்களைக் கொள்வனவு செய்து செல்லலாம்” என்று வியாபாரிகள் மேலும் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com