சற்று முன்
Home / செய்திகள் / யாழ் மாநகர முதல்வர் ஆர்னோல்ட்டின் ”ஆடம்பர பட்ஜெட்” நிராகரிப்பு

யாழ் மாநகர முதல்வர் ஆர்னோல்ட்டின் ”ஆடம்பர பட்ஜெட்” நிராகரிப்பு

யாழ்ப்பாண மாநகர சபையில் சமர்ப்பிக்கப்பட்ட 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் வரும் 12ஆம் திகதி புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
முதல்வர் இம்மானுவேல் ஆனொல்ட்டின் வரவு செலவுத் திட்டத்துக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈபிடிபி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். உறுப்பினர்களுக்கான செலவீனங்களைக் குறைப்பதுடன், கடைகளுக்கான வாடகையும் குறைக்குமாறு அவர்கள் வலியுறுத்தினர்.

இன்றைய அமர்வில் வருமானங்கள் தொடர்பில் விவாதிக்கப்பட்ட நிலையில் வரும் புதன்கிழமைவரை விவாதம் ஒத்திவைக்கப்பட்டது.
யாழ்ப்பாண மாநகரசபையின் அமர்வு இன்று வெள்ளிக்கிழமை(7) காலை-10 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்றது. இதன் போது யாழ். மாநகர சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான பாதீட்டை முதல்வர் இம்மானுவேல் ஆனொல்ட் சபையில் சமர்ப்பித்தார்.

இந்த அமர்வு தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மக்களின் அபிவிருத்தித் திட்டங்கள் உள்வாங்கப்படாமல் ஆடம்பரமான வரவு செலவுத் திட்டம் காணப்படுவதால் அது தோற்கடிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் சபையில் தெரிவித்தனர். எனினும், பாதீடு தோற்கடிக்கப்பட்டதாகத் தாம் கருதவில்லை எனத் தெரிவித்த யாழ். மாநகர சபையின் முதல்வர் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளுமாறும் சபை உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டார்.

யாழ். மாநகர சபை முதல்வர், பாதீட்டை சபையில் சமர்ப்பித்த பின்னர் தனது கொள்கை விளக்க உரையை முடித்த பின்னர் பாதீடு வாக்கெடுப்புக்கு விடுவதே முறையானதென தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் வலியுறுத்தினர். எனினும் முதல்வர் அதற்குச் சம்மதிக்கவில்லை.

இந்நிலையில் பாதீட்டில் திருத்தங்கள் மேற்கொள்வதாகவிருந்தால் இதனை நிராகரிக்கப்பட்ட பாதீடாகவே ஏற்று செய்யத் தயாராகவிருப்பதாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் தெரிவித்தனர். இந்தக் கூற்றை முதல்வர் ஏற்றுக் கொண்டதன் அடிப்படையில் வருமான சீர்திருத்தங்கள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு திருத்தங்கள் செய்யப்பட்டன.
மாநகர சபையின் அமர்வு மதியநேர உணவு வேளையின் பின்னர் மீண்டும் ஆரம்பமான போது செலவீன திருத்தங்கள் தொடர்பான விவாதம் ஆரம்பானது.

இதன்போது வருமானத்தில் 350 மில்லியன் ரூபா குறைகின்ற காரணத்தால் செலவைக் குறைக்க வேண்டிய தேவைப்பாடு காணப்படுகின்றது. மக்களின் அபிவிருத்தித் திட்டங்கள் சார்ந்த செலவுகள் காணப்படாதததுடன் முற்றுமுழுதாக ஆடம்பரச் செலவுகளுக்கும், வெளிநாட்டுச் செலவுகளுக்கும், கடன்களுக்கும் இந்த பாதீட்டில் அதிக நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
எனவே, செலவுகளைத் திருத்தி தகுந்த செலவீனமுள்ள பாதீட்டைச் சபையில் சமர்ப்பிக்குமாறு மாநகர சபையின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களான வரதராஜன் பார்த்தீபன், எம். மயூரன் ஆகியோர் வலியுறுத்தினர்.

இதேபோன்று வருமானத்திற்குத் தகுந்தவாறு செலவுத் திருத்தங்களை மேற்கொண்டு பாதீட்டைப் புதுப்பித்துச் சபையில் சமர்ப்பிக்குமாறு வேறொரு கட்சியின் உறுப்பினர்கள் சிலரும் வலியுறுத்தினர்.

இதனையடுத்து பாதீட்டு வருமானத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் போன்று செலவீன திருத்தங்களையும் சபை உறுப்பினர்கள் மேற்கொள்ள வேண்டுமென யாழ். மாநகர சபை முதல்வர் கேட்டுக் கொண்டார்.

முழு செலவீன விவரங்களையும் தற்போது எங்களால் ஒவ்வொன்றாக எழுதிக் கணித்துக் கொண்டிருக்க முடியாது. 530 மில்லியன் ரூபாவுக்கான செலவீன விவரங்களையும் எங்களிடம் தருமாறு கேட்டுக் கொள்கின்றோம். எனவே, இந்த பாதீட்டை தோற்கடிக்கப்பட்டதாகவே எங்களால் கருத முடியும்.இது தொடர்பில் நாம் கலந்தாலோசித்தே முடிவெடுக்க முடியுமெனவும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

எனினும், சபையின் முதல்வர் நிராகரிக்கப்பட்ட பாதீடாக கருதக் கூடாது என அழுத்தமாகத் தெரிவித்தார். இதனையடுத்து சபையில் காரசாரமான விவாதங்கள் இடம்பெற்றன. இதன் போது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈ.பி.டி.பி கட்சி இரு கட்சி உறுப்பினர்களும் இணைந்து கழுத்தறுத்துவிட்டதாக யாழ்.மாநகர சபையின் முதல்வர் கடுமையாக குற்றச்சாட்டினார்.

இந்தக் குற்றச்சாட்டிற்குப் பதிலளித்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் எஸ்.கிருபாகரன் இரு பகுதியினரும் சேர்ந்து கழுத்தறுத்து விட்டதாக நீங்கள் கூறியிருந்தீர்கள். எங்களுக்கு ஈ.பி.டி.பியுடனருடன் சேர வேண்டிய அவசியமில்லை. எனவே, குறித்த குற்றச்சாட்டை மீளப்பெற வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.

இதனையடுத்து தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் எஸ்.கிருபாகரனுக்கும் யாழ். மாநகர சபை முதல்வருக்குமிடையில் காரசாரமான விவாதம் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து யாழ்.மாநகர சபையின் முதல்வர் பாதீட்டை வாக்கெடுப்புக்கு விடாமல் சபையை ஒத்திவைத்தார் – என்றுள்ளது.

யாழ்.மாநகர சபை செலவீன மதிப்பீடு 2019.

கடல் கடந்த பயிற்சி செலவு (முதல்வர் , உறுப்பினர்கள் ) 10, 000, 000.00

வாகன எரிபொருள் 12,000,000.00

தொலைத்தொடர்பு மற்றும் படிகள் (முதல்வர் மற்றும் உறுப்பினர்கள்) 10,000,000.00

வருட இறுதி நிகழ்வு 150,000.00
பொதுக்கூட்ட உபசரணை 300,000.00
முதல்வர் உபசரணை 500,000.00
தினக்குறிப்பு புத்தகம் 100,000.00
நினைவு சின்னம் வழங்கல் 100,000.00
உள்ளூரட்சி வாரம் 1,000,000.00
சட்ட ஆலோசகர் கொடுப்பனவு 500,000.00
புகையிரத ஆணைச்சீட்டு 1,500,000.00

நகர மண்டபம் , முதல்வர் வாசஸ்தலம் நிர்மாணிப்பு 125,000,000.00

ஊழியர் கடன் கொடுப்பனவு 100,000,000.00 (கொடுத்த கடன்கள் மீள் வசூலிக்காத நிலையில் புதிய கடன் கொடுப்பனவு)

இவ்வாறாக யாழ்.மாநகர சபையின் மொத்த செலவீனம் 911,124,000.00

இந்த பாத்தீட்டில் மக்கள் நலன், அபிவிருத்திக்கு ஒதுக்கிய நிதியை விட ஆடம்பர செலவுக்கு ஒதுக்கிய நிதி கூடுதலாக உள்ளது என தமிழ் தேசிய மக்கள் முன்னணி பதீட்டை திருத்த கோரியுள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com