யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவருக்கு பிணை

court_hammerயாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பான வழக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 25ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபரான அனைத்து பீட மாணவர் ஒன்றியத் தலைவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் யாழ் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.

இதன்போது, சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் யாழ் பல்கலைக்கழகத்தின் அனைத்து பீட மாணவர் ஒன்றியத் தலைவர் இன்று யாழ் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.

இதன்போது குறித்த மாணவன் சார்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் நீதிமன்றில் ஆஜரானார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள காயமடைந்த மாணவன் ஒருவன் கொழும்பில் பொஸிசாருக்கு வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் யாழ் பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் இன்று யாழ் நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்டிருந்தார்.

இந்த வழக்கில் மாணவர் ஒன்றிய தலைவர் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கருத்து தெரிவிக்கையில்,

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவன் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார், மாணவர் ஒன்றியத் தலைவரை கைது செய்ய முயன்றிருந்தனர்.

இதனை அறிந்த அனைத்து பீட மாணவர் ஒன்றியத் தலைவர் சசிதரன் இன்றைய தினம் காலை நீதிமன்றில் ஆஜரானார். இதன்போது பிணை வழங்க கேட்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவனின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பிணை வழங்க பொலிஸார் ஆட்சேபம் தெரிவித்தனர்.

எனினும் இந்த மாணவன் தாக்கியமைக்கான ஆதாரங்கள் எவையும் இல்லை என கூறியிருந்தோம். மேலும் தான் எவரையும் தாக்கவில்லை. தன்னையே ஏனைய மாணவர்கள் தாக்கினர் எனவும் அவர்களுடைய பெயர்களும் தமக்கு தெரியும் என்றும் மாணவர் ஒன்றியத் தலைவர் சார்பாக நீதிபதிக்கு கூறப்பட்டது.

விடயங்களை ஆராய்ந்த நீதிபதி, விசாரணைக்கு மாணவர் ஒன்றியத் தலைவர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக்கூறி 2 இலட்சம் ரூபா பெறுமதியான 2 ஆள் பிணையில் மாணவர் ஒன்றியத் தலைவரை விடுதலை செய்ததுடன் வழக்கு விசாரணைகளை ஆகஸ்ட் மாதம் 25 ம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com