யாழ் நகர வீதிகளில் வலம்வரும் பழைய மொடல் கார்கள்


என்னதான் புதிதாக கண்டுபிடிப்புகள் வந்தாலும் பழையனவற்றிற்கு உள்ள மதிப்பே தனிதான். புதுமை விரும்பி களைப் போல பழமை விரும்பிகளும் இருக்கத்தான் செய்கின்றனர். பழைய உற்பத்திகளின் கார்களின் மவுசு தனித்து வமானது.
கார்களின் வரலாறு இங்கிலாந்தில்தான் ஆரம்பித்திருக்கிறது. மோரிஸ் மைனர், ஒக்ஸ்போட், பரீனா என பழைய கார் களின் வரலாறுகள் சுவாரஸ்மானவை. கார்களில்; பிரயாணிகளை ஏற்றி இறக் கும் கார் டக்சி பிரயாணங்கள் இலங்கையில் 1970, 1980 களில் பிரபல்யம் பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது. போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பிக்கப் பட்டமை மற்றும் கஜஸ் போன்ற சொகுசுவாகனங்களின் வருகையும் ஆட்டோக் களின் வருகையும் கார் சவாரிகளின் வர்த்தகரீதியான பயணங்களை பின்தள்ளி யிருக்கிறது. இலங்கையைப் பொறுத்தவரையில் தலைநகர் கொழும்பு உட்பட ஏனைய மாவட்ட நகரங்களில் பழையமொடல் கார்களின் சவாரிகளுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுவிட்டது என்றுதான் சொல்லலாம்.

ஆனால் யாழ்ப்பாணத்தில் பழைய கார்களின் வர்த்தகச் சவாரிகள் தற்போதும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறன. வீட்டுக்கு வீடு புதுப்புது வகை கார்களின் வருகை, ஆட்டோ சந்திகள் தோறும் ஆட்டோ சவாரிகள் என பிரயாணப் போட்டி கள் பல்கிப்பெருகிவிட்ட சூழலில் பழைய மொடல் கார்களின் சவாரிகளை நம்பி யாழ் நகர கார் சவாரிக்காரர்கள் சிலர் தொழில் செய்துகொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கென வாடகைக் கார் சங்கம் என்று ஒரு சங்கம்கூட இருக்கிறது. யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் இந்தக் கார்களை அதிகம் காணலாம். அப்படி ஒருநாள் யாழ் ஆஸ்பத்திரி வீதியில் வரிசையாக நின்ற கார்களைக் கண்டு அதன் உரிமையாளர்களைச் சென்று சந்தித்தோம்.
அவர்களில் கே. இரத்தினம் என்பவர் வாடகைக் கார் சங்கத்தின் தலைவர். கடந்த முப்பது வருடங்களாக வாடகைக்கு கார் ஓட்டும் தொழில் செய்துவருகிறார். முப்பது வருட கால அனுபவம் என்பது சும்மாவா என்ன? அவரும் தன் நீண்ட அனுபவத்தை எம்மிடம் பகிர்ந்துகொண்டார்.
‘நான் மைனர் கேம்பிரிச் என பல்வேறு ரகமான கார்களை மாறிமாறி வாங்கி ஓடியுள்ளேன். தற்போது எட்டு மாதங்களாக பரீனா ரக காரினைக் கொள்வனவு செய்து தொழில் செய்து வருகிறேன். தற்போது கார்ச் சவாரிகள் குறைந்து விட்டது. கடந்த 30 வருடத்தில் பாரிய மாற்றத்தை என்னால் உணர முடிகிறது. தற்போது காலடி எடுத்துவைக்கும் இடங்களில் எல்லாம் ஆட்டோக்கள் வந்து நிற்கிறன. பழைய மொடல் கார்களுக்கு யாழ்ப்பாணத்தில் தனி மவுசு இருப்ப தால் எம்மால் தொழில் செய்ய முடிகிறது. ஆட்டோவை விட நாங்கள் நூறு ரூபா அதிகமாக அறவிடுகிறோம். 1980 காலப்பகுதியில் ஒரு கலன் பெற்றோலின் விலை 4ரூபா 75 சதம். தற்போது லீற்றர் 100 ரூபாவரை விற்கிறது. அக்காலப்பகுதியில் ஒரு மைல் தூரத்திற்கு ஐந்து ரூபா அறவிடுவோம். தற்போது 100 ரூபா அறவிடவேண்டி இருக்கிறது. 
யுத்தகாலத்தில் பெற்றோலுடன் மண்ணெண்ணெய் கலந்து ஓடினோம். தற்போது அந்த நிலைமை இல்லை. தனியே பெற்றோல்தான் பாவி க்கிறோம்’ என்றார்.
1980 காலப்பகுதியில் இருந்து வாடகைக் கார்ச்சங்கம் இயங்குகின்றது. அன்றைய காலப்பகுதியில் சுமாhர் நூறுபேர்வரை சங்கத்தில் உறுப்பினர்களாக இருந்துள் ளனர். தற்போது 22 பேர்தான் சங்கத்தில் இருக்கின்றனர். நிர்வாக உறுப்பினர் களாக 9 பேர் இருக்கின்றனர். ஒவ்வொரு புதன் கிழமையும் இவர்களது சந்திப்பு இடம்பெறும். ஆனால் இவர்களுக்கான ஒரு நிரந்தரக் கட்டிடம் இல்லை என்பதை தலைவர் வருத்தத்துடன் கூறினார். அது பற்றி அவர் மேலும் கூறுகையில்…
‘இங்கு கார்கள் தரிப்பிடத்திலும், வீதி ஓரத்திலும்தான் ஒன்றுகூடுவோம். முன்னர் யாழ்.மாநகர சபையால ஒரு கட்டடத்தை தந்துவிட்டு பின் திருப்பி வாங்கிவிட்டார்கள். பின் ஆலய வளவொன்றினுள் இருந்து செயற்பட்டு வந்தோம். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் அதுவும் சாத்தியமற்றுப் போய்விட்டது. எமது சங்கம் கார்ச்சாரதிகளுக்கான சட்டதிட்டங்களை இடுவது, குற்றங்கள் புரியுமிடத்து அவர்களிடம் தண்டங்கள் அறவிடுதல் போன்ற பணிகளைச் செய்கிறது. நாம் பிரயாணிகளிடம் இவ்வளவு பணம்தான் அறவிடு வது என ஒரு அளவு வைத்திருக்கிறோம். அளவிற்கு அதிகமாக ஏமாற்றி கட்டணம் அறவிட்டதாக எமக்கு முறைப்பாடு வந்தால் அதுபற்றியும் நாங்கள் விசாரணை நடாத்துகின்றோம்’ என்று கூறினார்.
கார் விபத்துக்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் சங்க உறுப்பினர்கள் அங்கு கூடி சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் நியாய அடிப்படையில் பேசித்தீர்த்து வைப்பர். மிகவும் சிக்கலான சந்தர்ப்பங்களில் மட்டுமே பொலிஸார் அதனை பொறுப் பேற்பர். அவ்வாறான ஒரு அழகான ஒழுங்குமுறையைப் பேணி வருகின்றனர் இக்கார்ச்சவாரி சங்கத்தினர்.
தற்போது கார் ஓடும் தொழிலில் போதிய வருமானம் கிடைப்பதில்லை எனக் குறிப்பிடும் நடராசாவும் இத்தொழிலுக்கு முப்பது வருடம் பழைமை வாய்ந்தவர். அவரைச் சந்தித்தபோது, ‘நான் வட்டுக் கோட்டையில இருக்கிறனான். கடந்த மூன்று வருசமா மொரிஸ் மைனர் கார்தான் தொழிலுக்கு வச்சிருக்கிறன். முன்னாடி வேற கார்களும் வச்சிருந்தனான். இப்ப தொழில் மந்தமாப்போச்சு. இத விட்டுட்டு வேற தொழிலுக்கு மாறுறத்துக்கு மனமும் இல்ல. அதுக்கேற்ற வயதும் இல்ல. ஏதோ செய்த தொழிலையே செய்து சீவிக்கிறம்’ என்று கூறியவர் சவாரிக்காக ஒருவர் வரவே எம்மிடம் விடைபெற்றுக்கொண்டு பறந்துவிட்டார்.
இவர்கள் தாம் நினைத்தபடி பிரயாணி களை வாங்கோ வாங்கோ எண்டு இடையில் நின்று கூப்பிட முடியாது. வரிசை ஒழுங்கில்தான் கூப்பிட வேண்டும். பிரயாணி தானாக விரும்பி வந்தால் எந்தக் காரிலும் போகலாம்.
இங்கு சிவா என்பவர் மற்றவர்களைவிட வித்தியாசமான யுக்தி ஒன்றைக் கையாண்டு வருகிறார். அவரிடம் காரும் ஓட்டோவும் இருக்கிறது. இரு வாகன தரிப்புகளும் அருகருகில் நிற்பதால் இரண்டு தரிப்புகளிலும் தனது வாகனங் களை நிறுத்தியுள்ளார். ஓட்டோ சவாரிக்கு வரும்போது ஓட்டோ, கார்ச்சவாரிக்கு வரும்போது கார் என இரண்டு வாகனங்களையும் வைத்து தொழில் செய்து வரு கிறார்.
தனது முதல் புதிய கார் பயணத்தில் குடும்பத்தினருடன் மடுதேவாலயத்திற்குச் சென்றுவந்ததாக தனது பழைய நினைவுகளை அசைபோட்ட திருநெல்வேலி யைச் சேர்ந்த வடிவேலு பத்மநாதன் தான் கடந்த ஒரு வருடமாக ஒக்ஸ்போர்ட் கார் வைத்திருப்பதாக கூறுகின்றார்.
‘நான் கடந்த 15 வருடங்களாக கார் ரக்சி ஓட்டும் தொழில் செய்துவருகின்றோன். வடக்கு மாகாணத்திற்குள்; எங்கும் தற்போது ஓடித்திரிகின்றோம். எனினும் வவுனியா போன்ற தூர தேசங்களிற்கு ஓட்டங்கள் எப்போதாவது ஒருமுறை வரும். நாமம் வைத்தியசாலை ஸ்ராண்ட், பஸ்தரிப்பிட ஸ்ராண்ட் என இரண்டு இடங்களில் கார்களை தரித்து வைத்திருக்கிறோம். எமது கார்கள் பழைய மொடல்கள் ஆகையால் திருத்தங்களும் திருத்தச் செலவுகளும் அதிகம். பழைய மொடல் கார்களை விரும்பி வாங்கி ஓடுபவர்களும் இருக்கிறார்கள். தவில் நாதஸ்வரக் கலைஞர்கள் தற்போதும் இவ்வகை கார்களையே வைத்திருக் கிறா ர்கள். சுமாரான பழையமொடல் கார்கள் ஒன்றரை இலட்சம் முதல் மூன்று இலட்சம்வரை போகின்றது. இதனால் எங்களுக்கு தொழில் முதலீடு பெரிதாக இல்லை’ என்கிறார்.
தற்போது யாழ்ப்பாணத்தில் லீசிங் கம்பனிகள் பல்கிப்பெருகிவிட்டன. விதம் விதமான வாகனங்களையும் கார்களையும் லீசிங்கில் விற்றுத்தீர்க்கிறார்கள். எனினும் பழைய மொடல் கார்கள் வீதிகளில் ஒடிக்கொண்டுதான் இருக்கின்றன. பழைய மொடல் கார்கள் போக்குவரத்துச் சவாரித் தொழிலுக்கு பாரிய முதலீடற் ற பொருள் என்பதைத்தாண்டி இங்கிலாந்து தயாரிப்பான பழைய மொடல் கார் களின் பயன்பாட்டுகால அளவும் நீண்டதாகவே காணப்படுகின்றது. அக்காலத் தில் இக்கார்களின் பெறுமதி 500 ரூபாய் என தெரிவித்தனர். ஆனால் இன்றோ அதன் பெறுமதி பல கோடி மதிப்புள்ளது.
யாழ்ப்பாண வாழ்வியலில் பழமையென்பதும் அதனைப்பாதுகாப்பதென்பதும் மிகவும் முக்கியமானதும் பெறுமதிவாய்ந்ததுமாகும். முப்பது வருடகால யுத்தத்துக்குள்ளும் மக்களோடு மக்களாக தப்பிப்பிழைத்து நீண்ட ஆயுளுடன் நிற்கும் இத்தகைய கார்களைப் பார்க்கும் போது எமது சமூகத்தின் பழமையை யும் வளமான வாழ்வியலும் கண்முன்னே தெரிகிறதல்லவா? என்னதான் இருந்தாலும் ஓல்ட் இஸ் கோல்ட்!!

எஸ்.ஏ.யசீக்

 (மீள் பதிவு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com