யாழ் கோட்டையைத் தாருங்கள் மக்களின் காணிகளைத் தருகிறோம் – இராணுவம் கேட்கும் டீல் !!

யாழ்ப்பாணம் கோட்டையை வழங்கினால் இராணுவ முகாங்களை அங்கு நகர்த்திவிட்டு மக்களின் காணிகளை விடுக்க முடியும் என்று இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டம் யாழ். செயலகத்தில் இன்று இடம்பெற்றது. இராணுவம் மற்றும் பொலிஸார் வசமுள்ள மக்களின் காணிகளை விடுப்பது தொடர்பான கோரிக்கை கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. இதன்போதே மாவட்டச் செயலர் இந்த விடயத்தைத் தெரிவித்தார்.

“யாழ்ப்பாண மாவட்டத்தில் இராணுவம் வசமிருக்கும் பல இடங்கள் விடுவிக்கப்படும் என்று அரசால் சம்மதம் தெரிவிக்கப்பட்டது. எனினும் அவை இன்னும் விடுவிக்கப்படவில்லை.

எனவே அவற்றை விடுவிப்பது பற்றிப் பேசுவதற்கு இராணுவத்துடனான கூட்டம் ஒன்றை மாவட்டச் செயலாளர் ஒழுங்கமைக்கவேண்டும். அதுதொடர்பில் அரசுடனும் நாம் பேச்சு நடத்துவோம்” என்று இணைத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா கேட்டுக்கொண்டார்.

“மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளரின் தலைமையில் அண்மையில் கூட்டம் இடம்பெற்றது. விடுவிப்பதாக அறிவித்த பகுதிகளிலிருந்து இராணு நிலைகளை நகர்த்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக இராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

விரைவில் அந்தப் பகுதிகள் படிப்படியாக விடுவிக்கப்படும் என்றும் இராணுவத்தினர் குறிப்பிட்டிருந்தனர். அத்துடன், பருத்தித்துறை – பொன்னாலை வீதியும் படிப்படியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் இராணுவத்தால் கூறப்பட்டது.

மேலும் தொல்பொருள்கள் திணைக்களத்திடமிருக்கும் யாழ்ப்பாணம் கோட்டையை இராணுவத்துக்கு வழங்கப்படுமாயின் அங்கு இராணுவ முகாங்களை மாற்றிவிட்டு, பெரும்பாலான பகுதிகளை விடுவிக்க முடியும் என இராணுவ அதிகாரிகளால் தெரிவிகப்பட்டது.

இதுதொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேச்சு நடத்தப்படவேண்டும்” என்று யாழ்.மாவட்டச் செயலர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் கோட்டையை இராணுவத்தினருக்குப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிகையை தான் முன்னெடுத்துள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே கடந்த ஆண்டு தெரிவித்திருந்தார்.
தொல்பொருள் திணைக்களத்தால் தற்போது பராமரிக்கப்படும் யாழ்ப்பாணம் கோட்டை சுற்றுலாத் தளமாக உள்ளது. அத்துடன், கோட்டையை இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டால் அதற்கு அருகாமையிலுள்ள பண்ணை சுற்றலாக் கடற்கரையும் பாதுகாப்புக் காரணங்களுக்காக மூடப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com