“யாழ்ப்பாண நாடகப் பாரம்பரியத்தில் பெண் கலைஞர்கள்;” – முன்னுரையும் அறிமுகமும்

Arulchandran“யாழ்ப்பாண நாடகப் பாரம்பரியத்தில்
பெண்கலைஞர்கள்;”
வரலாற்றுப்பதிவின் மறுபக்கம்

ஆசிரியர் – மார்க்கண்டு அருள்சந்திரன். M.A
மாவட்ட கலாசார உத்தியோகத்தர்,
கிளிநொச்சி.
வெளியீடு – பத்தினியம்மா நிதியம்,
தெல்லிப்பளை.

முன்னுரை
பெண் கலைஞர்களின் ஆற்றுகை பதியப்படல் வேண்டும்

“யாழ்ப்பாண நாடகப் பாரம்பரியத்தில் பெண் கலைஞர் கள்” என்ற அரங்கியல் சார்நூலின் ஊடாக வரலாற்றுப் பதிவில் மறைக்கப்பட்டிருந்த பெண்கலைஞர்களது உண்மையான பங்களிப்பினை வெளிக்கொண்டுவர முயன்றுள்ளேன். என்னுள் பல வருடங்களாக புதைந்திருந்த கருத்தியலை இன்று உங்கள் கைகளில் கிடைக்கச் செய்துள்ளேன். இந்நூலில் உள்ளடங்கி யுள்ள கருத்தாக்கம் நவீன மற்றும் பாரம்பரிய நாடகங்களில் கலைஞர்களாகப் பெண்கள் என்ற ஆய்வுக்கட்டுரையாக ஒக்டோபர்; 2010இல் கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்ற வடமாகாண தமிழ் இலக்கிய விழாவில் வாசிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதில் மேலும் பல தகவல்களை உள்ளடக்கி சம்பந்தப்பட்ட பெண் கலைஞர்களின் புகைப்படங்களுடன் வெளியிடுவதற்கு முயற்சி செய்துள்ளேன்.

இந்நூலானது அமரர் பத்தினியம்மா திலகநாயகம் அவர் களின் நினைவில் வெளியிடப்படுவதும் அவரது சேவைகளை நினைத்துப் பார்ப்பதும் முக்கியமாகின்றது. கலாசாரத் துறையில் என்னை ஆழவேரூன்றி அகலப் பரவுவதற்கு வழிகாட்டியாகவும் சிறந்ததொரு நிர்வாகியாக இருந்து வழிப்படுத்தியவர். அவரின் வழிகாட்டலில் எனது துறையில் சிறந்த செயற்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளேன், வெளிப்படுத்தி வருகின்றேன். நேர்மை யும், கடமை, கண்ணியம், கட்டுப்பாடும் கொண்டு மக்கள் சேவை யாற்றியவர். எவருக்கும் அஞ்சாத துணிச்சல்மிக்கவர். இத்தகைய குணங்களினால் அவர் பல பாதிப்புக்களை எதிர்கொண்டாலும் கடவுளின் அவதாரமாக மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டி ருக்கும் அவரை நினைத்து நன்றியுடன் இந்நூலை அவருக்கு சமர்ப்பணம் செய்கின்றேன்.

கிராமங்கள்தோறும் நாடகத்தில் பெண்கள் கலைஞர் களாக பங்களிப்பு வழங்கி வந்திருக்கின்றார்கள் -வருகின்றார்கள். அந்தவகையில் இப்பதிவில் பலபெண்கலைஞர்களது விபரங்கள் ஆய்வின்போது கிடைக்காது தவறவிடப்பட்டிருக்கலாம். அதற் காக வருந்துவதுடன் முற்றுமுழுதான ஆய்வுத்தேடல் வீச்சில் கிடைத்த தகவல்களை திரட்டி இந்நூல் பத்தினியம்மா நிதியத்தினூடாக வெளியிடப்படுகின்றது.

இந்நூல் வெளிவருவதற்கு சம்மதம் தெரிவித்த பத்தினியம்மா நிதியத் தலைவர் திரு. ப. இராஜகோபாலன் அவர்களுக்கும் அணிந்துரை வழங்கிய நாடகப் பேராசான் குழந்தை ம. சண்முக லிங்கம் அவர்களுக்கும் நேர்காணலில் ஒத்துழைத்த கலைஞர்கள், அவர்களை வழிப்படுத்திய என் நண்பர்களான திருமறைக்கலா மன்ற பிரதி இயக்குனர் ஜோன்சன்ராஜ்குமார், ஜெகன், செல்மர்எமில், ஜோசேப், தர்மலிங்கம் பாஷையூர் கலைஞர் அ. றொபின்ஷன் இவ் ஆய்வை செய்வதற்கு தூண்டிய பருத்தித் துறை கலாசார உத்தியோகத்தர் சே. செல்வசுகுணா சரவை பார்த்து உதவிய பூநகரி கலாசாரஉத்தியோகத்தர் றஜனி நரேந்திரா, கரைச்சி கலாசார உத்தியோகத்தர் கு. றஜீபன், திருமதி அ. பிறைசினி ஆசிரியை ஆகியோருக்கும் இந்நூலின் வடிவ மைப்பிற்கு உதவிய யாழ். பல்கலைக்கழக பிரதம நூலகர் திருமதி ஸ்ரீலக்ஷ்மி அருளானந்தம் அவர்களுக்கும் இந்நூலினை சிறந்த முறையில் அச்சிட்டுத் தந்த அன்ரா நிறுவனத்தினருக்கும் எனது நன்றிகள்.

மார்க்கண்டு அருள்சந்திரன். M.A
மாவட்ட கலாசார உத்தியோகத்தர்,
கிளிநொச்சி.

01
அறிமுகம்
உலகிலே வாழ்கின்ற ஒவ்வொரு இனமும் தனக்கென்ற தான பண்பாட்டு விழுமியங்களையும், தனித்துவமுடைய கலைச் சிறப்புக்களையும், வரலாற்று அம்சங்களையும் கொண்டதாக வாழ்ந்து வருகின்றனர். அந்தவகையில் இலங்கையிலே வாழ்கின்ற மக்களும் தத்தமக்கென்றதான தனித்துவமுடைய கலைகளையும், பண்பாட்டினையும், வரலாற்றினையும் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் அரங்கியல் ரீதியில் யாழ்ப்பாணத்துப் பெண் கலைஞர்களின் பங்களிப்பு எந்தளவிலே கிடைத்திருக்கின்றது என்பதனை “பெண் நிலை வாதத்தில்” நின்று நோக்காது அரங்கியல் பயில் நிலையில் நோக்குதல் பிரதானமாகின்றது.

அரங்க வரலாறு என்றதுமே ஆண்களை முன்னிலைப் படுத்துவதுண்டு. ஆனால் இத்துறையில் பங்கெடுத்துக் கொண்டு அரங்க வளர்ச்சியில் தமது பங்களிப்பினை வழங்கிய பெண்கள் பலர் இலைமறை காய்களாக வாழ்ந்து வருவதனால் அவர்களது பங்களிப்பினை பதிவுசெய்து கொள்வதாக இவ்வாய்வு நூல் அமைகின்றது. ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சியினை வெறுமனே இலக்கிய ரீதியில் நோக்காமல் செய்முறையில் ஈடுபட்டுள்ள வர்களையும் அவர்களது பாடுகளையும் பதிவுசெய்து கொள்ளு தல் முக்கியமானது எனக் கருதப்பட்ட நிலையில் யாழ்ப்பாண நாடகப் பாரம்பரியத்தில் பெண்கலைஞர்கள் பற்றிய கருது கோள் மேலெழுகின்றது. யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை யில் பல்வேறு அரங்க நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. அவற்றிலே பாடசாலைகள், கல்லூரிகள், பல்கலைக்கழகம், கலை இலக்கிய நாடக மன்றங்கள் எனப் பலதரப்பட்டவர்களது முயற்சிகள் நாள்தோறும் இடம்பெற்ற வண்ணமுள்ளன. பாடசாலைக் காலங்களிலும், உயர்படிப்புக் காலங்களிலும் கலைத்துறையில் ஈடுபட்டுள்ள பல பெண்கள் அவர்களது கற்கையை விட்டு வெளியேறியதன் பின்னர் இடைநிறுத்தி விடுகின்றனர். ஒரு சிலர் தொடரவே செய்கின்றனர். இத்தகைய நிலையில் பெண் கலைஞர்களது பதிவுகள் அவர்களுடன் மறைந்து விடுகின்றன. மேலும் கல்விச்சாலைகளுக்கு வெளியேயும் பல பெண்கள் கலை முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் எமது யாழ்ப்பாணச் சமூக அமைப்பில் பெண்கள் என்னும் கருத்து நிலையில் – பண்பாட்டின் அடிப்படையில் பெண் கலைஞர் களது ஆளுமைகள் பெரும்பாலும் திரைமறைவிலேயே காணப்படுகின்றன. பொதுவாகப் பெண்கள் தங்கி வாழ்பவர்கள், திருமணபந்தத்திற்கு உட்பட்டவர்கள் என்ற சிந்தனைகளின் ஓட்டத்தில் இவர்களது கலைச்செயற்பாடுகளும், ஆளுமை களும் அவர்களுக்குள் அடக்கப்படுகின்றன. அல்லது அரங்கிற்குள் நின்றுவிடுகின்றன. யாழ்ப்பாண அரங்கிலே நாட்டுக்கூத்துக்கள், இசைநாடக முறைகள், பரதம், நவீன நாடகம், ஓவியம், சிற்பம், கவிதை எனப் பல்வேறு தரப்பட்ட கலைச்செயற்பாடுகள் நிகழ்ந்த வண்ணமுள்ளன. இவற்றில் கலைஞர்களாகப் பெண்கள்; அவைக்காற்றுக் கலைக்காற்றிய பங்களிப்பினையும், அரங்கில் முதல் தோன்றிய பெண் கலைஞர்கள் பற்றிய தவறுதலான வரலாற்றுப் பதிவினையும் மீள்வாசிப்புச் செய்துகொள்வதே இவ் ஆய்வு நூலின் நோக்கமாகும்.

ஆய்வுப்பிரதேசம்
இவ் ஆய்வுக்கான பிரதேசங்களாக யாழ்ப்பாணக் குடா நாட்டின் குறிப்பிடத்தக்க பிரதேசங்களான பாசையூர், குருநகர், கொழும்புத்துறை, நாவாந்துறை, இளவாலை, வலிகாமம், வடமராட்சி மற்றும் தீவகம், தென்மராட்சிப் பிரதேசங்களை மையப்படுத்தியதாக ஆய்வுப்பிரதேசம் அமைகின்றது.

ஆய்வு வரையறைகள்
ஆய்வு வரையறையானது யாழ்ப்பாணத்திலே நடை பெறுகின்ற பாரம்பரிய மற்றும் நவீன நாடகங்களை அவற்றின் பயில்நிலைப்போக்கில் நான்கு நிலைப்பட்ட வளர்ச்சியில் நோக்குவது அதிக பயனைத்தரும் என எண்ணுகின்றேன்.
Ø நாட்டுக்கூத்துக்கள்
Ø இசைநாடகம் { பார்சி நாடக மரபு
Ø நவீன நாடகம்
Ø சிந்து நடைக்கூத்து { காத்தவராயன் கூத்து
இவ்வரையறைக்குள் இசை, நடனம், ஓவியம், சிற்பம், கவிதை போன்ற பிறகலைப்பயில்வுகள் ஆய்வுக்குட்படுத்தப்பட வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆய்வுப் பிரச்சினைகள்
யாழ்ப்பாண நாடகப் பாரம்பரியத்தில் பெண்கலைஞர் கள் என்னும் பொருளை ஆய்வுக்குட்படுத்தப்படும்போது பல்வேறு பிரச்சினைகள் எழுகின்றன. பெண்களை “அச்சமும் நாணும், கடனும் முந்து உறுத்த நிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப” என்ற தொல்காப்பியம் களவியற் சூத்திரத்திற் குறிப் பிட்டது போல அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்னும் நால் வகைக் குணங்களுடையவளாகப் பெண்களைப் பார்த்து அவர் கள் கலைத்துறையில் ஈடுபடுவதென்பது சமூகமட்டத்தில் மனிதத் தளர்நிலைக்குட்பட்ட நிலையில் துணிந்து அரங்கில் தோன்றிய பல பெண்கள்பட்ட துயரங்களை வெளிக்கொணர வேண்டிய தேவையுள் ளது. தற்போதைய காலத் தில் கல்விச்சாலைகளில் அரங்கியல் கற்பிக்கப் படுவதனால் பெண்கள் அரங்கில் பாகமாடுதல் என்பது ஏற்றுக்கொள் ளப் பட்ட ஒன்றாக அமைந் திருக்கும் சூழ்நிலையில் ஆரம்பகாலத் தமிழ் நாடக ஆற்றுகைகளில் பெண்களின் பிரசன்னம் இல்லாமலிருந்தமையும், நாடகங்களில் வருகின்ற ஸ்திரிபார்ட் என அழைக் கப்படுகின்ற பெண்பாத் திரங்களை ஆண்களே நடித்துவந்தமையும் கண்கூடு. ஆரம்பகாலங்களில் புராண இதிகாசக்கதைகளையும், கற்பனையில் புனையப்பட்ட வரலாற்றுக் கதைகளையும் அரங்கேற்றிவந்த எம்சமூகத்தில் பெண்கள் வெளிப்படையாக நாடகம் பார்ப்பதற்கு விரும்பாத நிலையில் அரங்கில் பெண் பிரசன்னம் என்பது கேள்விக்குறியாகவே அமைந்திருந்தது. இத்தகைய நிலையினை அமரர் கலையரசு க.சொர்ணலிங்கம் அவர்கள் தனது “ஈழத்தில் நாடகமும் நானும்” என்ற நூலில் ‘நாடகமாடுவதற்கு வசதியான இடம் வீட்டின் முன்புறத்தில் இருந்தது. அக்காலத்தில் பெண்கள் மறைவாக இருந்தே நாடகம் பார்ப்பது வழக்கம். அதற்குப் பொருத்தமாகவே முன்புற விறாந்தையும் அமைக்கப்பட்டிருந்தது. நாடகங்கள் என்று சொல்லுவது நாட்டுகூத்துக்கள்தான். திண்ணையோரமாகத் துணியால் மறைப்புக் கட்டிவிடுவார்கள். பெண்கள் நல்ல வசதியாக உட்கார்ந்திருந்து பார்க்கக்கூடியதாக இருந்தது’ என்ற கூற்றில் அரங்கில் பெண் பிரசன்னம் தொடர்பான தெளிவைத் தந்து நிற்கின்றது எனலாம். மேலும் அரங்கில் பெண்கள் பிரசன்னம் இன்மைக்கான காரணங்களாக
Ø பண்பாட்டுத்தளம்
Ø சமூக நம்பிக்கைகள்
Ø கோயில் வீதிகளில் கூத்துக்கள் ஆடப்பட்டமை.
Ø திருமண பந்தம் தொடர்பானது.
Ø பாரம்பரிய அரங்கில் காணப்பட்டிருந்த சில தவறான நடத்தைகள்.
Ø சமய நம்பிக்கைகள் என்பனவற்றினைக் குறிப்பிடலாம்.

சாதியக் கட்டமைப்பினதும், பாலியல் கூறுகளின் இறுக்கத் தோடும் இருந்த ஆற்றுகைக்கலைகளில் இருந்து சாதிய இறுக்கம் களையப்பட்டபோதிலும் பாலியல் இறுக்கம் நீண்டகாலமாக மரபுநிலை அரங்குகளில் தளர்த்தப்படவில்லை என்பது வரலாறு. ஆரம்பகால நாடகங்களில் பயில்நிலை ஒழுக்கமானது ஆண் நிலைப்பட்டதாக வலுப்பெற்ற நிலையில் பெண்களின் பங்கேற்பிற்கு இடமளிக்கப்படவில்லை.
பாரம்பரிய அரங்க நடவடிக்கைகள் பெரும்பாலும் கோயில் வீதிகளில் ஆடப்பட்டமையினால் பெண்கள் அரங்க நடவடிக் கைகளில் இணையாமல் இருந்திருக்கலாம். அதேபோல கத்தோலிக்கக் கூத்து அளிக்கையில் ஆரம்ப நிகழ்வாக அளிக்கை நடைபெறும் சூழலில் தீயஆவிகளைக் கட்டிப்போடும் வழக்கம் காணப்படுகின்றது. இத்தீய ஆவிகள் பெண்களை இலகுவில் தாவிக்கொள்ளும் என்ற மூடநம்பிக்கையினாலும் பெண்கள் பிரசன்னம் என்பது பிரச்சினைக்குரியதாக இருக்கின்றது. இலங்கைக்கு வருகைதந்த மிஷனரிமார் கல்விப்போதனை களுடன், கன்னியாஸ்திரிகள் தங்குவதற்கான மடங்களையும் அமைத்தனர். இருந்தபோதிலும் 1896இல் இளவாலையில் அமைக்கப்பட்ட கன்னியர் மடத்தில் கன்னியாஸ்திரிகளைக் கொண்டு “ஞானசௌந்தரி” என்ற கூத்துப்பழக்கப்பட்டு அரங் கேற்றப்பட்டதாகவும் அறியமுடிகின்றது.01

மிஷனரிமாரின் செயற்பாடுகளால் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டிருந்த காலத்தில் இவர்களுடைய செயற்பாடு களுக்கெதிராக கண்டனப் போராட்டங்களை நிகழ்த்திய ஆறுமுகநாவலரது பல்வேறு கூற்றுக்கள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற அரங்க முயற்சிகளின் அப்போதைய நிலையினைத் தெளிவாகக்காட்டி நிற்பதனையும் மறைப்பதற்கில்லை. இக்காலத் தில் கோயில் திருவிழாக்களில் நாடகங்கள் மட்டுமல்லாது இசை, நடன நிகழ்வுகளும் நடைபெற்று வந்துள்ளன. இவ்வாறு நடைபெற்ற நிகழ்வுகளை ஆறுமுகநாவலர் தமது “யாழ்ப் பாணத்துச் சமய நிலை” என்ற நூலில் குறிப்பிட்டிருப்பதனைக் காணலாம்.

“சைவ சமயிகளே உங்கள் கோயில்களிலே மகளிருடைய நடனம், சங்கீதம், வாணவிளையாட்டு முதலியவைகளை ஒழித்து விடுங்கள். நிர்வாணமாயும் காமத்தை வளர்த்தற்கு ஏதுவாயுமுள்ள பிரதிமைகளையும் படங்களையும் அமைப்பியா தொழியுங்கள். கோயில்களிலே சைவப்பிரசங்கம், வேதபாரா யணம், தேவார திருவாசக பாராயண முதலியவைகளை செய்யுங்கள்” எனவும் புராண, இதிகாச கருப்பொருள்களை உள்ளடக்கிய நாடகங்கள் மட்டுமன்றி இசைநாடகங்களும் கோயில் திருவிழாக்களில் இரவு நிகழ்ச்சியாக அரங்கேற்றப் பட்டு வந்திருப்பதனையும் அவர் கண்டித்திருக்கிறார்.

“………கைதடியிலே திருவிழா, மூத்தநாயினார் கோயிலிலே திருவிழா, மாவிட்டபுரத்திலே திருவிழா, துன்னாலையிலே திருவிழா, மருதடியிலே திருவிழா என்று சொல்லிக்கொண்டு கூட்டங்கூட்டிக் கஞ்சாலேகியம் உட்கொண்டு தாசிகளுடைய வண்டிகளுக்குப் பின்னாக ஓடிக்கொண்டும் சேணிய தெருவிலே இரணியநாடகம், கள்ளியங்காட்டிலே அரிச்சந்திரவிலாசம், கந்தர்மடத்தடியிலே தமயந்திவிலாசம், நெல்லியடியிலே ஏதோ ஒரு கூத்து, பறங்கித் தெருவிலே ஏரோது நாடகம், சங்குவேலி யிலே இராமநாடகம், மானிப்பாயிலே தருமபுத்திரநாடகம் என்று கேட்டகேட்டவுடனே கஞ்சாலேகியந்தின்று வீராவேசத் தோடு ஈட்டி, வளைதடி, கருங்காலித்தண்டு கைப்பற்றி நடந்து நித்திரை விழித்து உலைந்துகொண்டும் நாடோடிகளாய்த் திரிந்து கெடுவதும் திருவிழாக்களால் விளைந்த பிரயோசனங் களன்றோ……….”

இக்கண்டன உரையிலிருந்து நாடகங்கள் யாழ்ப்பாணத்தில் விடியவிடிய நடைபெற்றிருப்பதனையும் அதனூடாக மேற்கிளம்பிய ஒழுக்க நிலைமைகள் தொடர் பாகவும் புரிந்துகொள்ளும் அதேநேரத்தில் ஆலயச்சூழலின் ஆற்றுகைகளில் பெண்கள் தொடர்பான கருதுநிலைகளையும் வெளிப்படுத்தி நிற்பதனையும் கண்டுகொள்ளமுடிகின்றது. இத்தகைய சூழ்நிலைகள் கலைகளில்;;;; பெண்களின் பிரசன்னம் என்பது தொடர்பிலான பண்பாட்டுப் பிரச்சினைகளை மேற்கிளப்புகின்றன எனலாம்.

(வளரும்………..)

Book Artical - 01

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com