யாழ்ப்பாண நாடகப் பாரம்பரியத்தில் பெண் கலைஞர்கள் – பாகம் 3

Book Artical - 03யாழ்ப்பாணத்தில் தென்மோடிக் கூத்திலேயே முதன் முதலில் பெண்கள் அரங்கில் நடிக்கும் பாரம்பரியம் உருவாகி யது. அடக்கி வைத்திருந்த தமது ஆளுமைகளை வெளியே கொணர்ந்த பெண்களில் பாசையூர் மனுவல் பாக்கியராசாத்தி என்பவர் 1955ஆம் ஆண்டில் தனது கலைப் பணியை ஆரம்பித்தவர். 1967 இல் திருநீல கண்டன் என்ற கூத்தினை எழுதி 25சதம் நுழைவுச்சீட்டிற்கு அரங்கேற்றினார். இதனால் தனது குடும்பத்துடன் முரண்பட்டு பிரச்சினைக்குள்ளானவர் என்பதும் குறிப் பிடத்தக்கது. மேலும் துதிப்பாடல்கள், நடசாதிப் பாடல்கள், ஆலயப் பாடல்களை மடுமாதா, மண்ணித்தலை, கிளாலி சந்தியோகுமையோ போன்ற ஆலயங்கள் மீது பாடியவர். இக்கலைஞர் பாசையூரில் தலைசிறந்த அண்ணாவியார்களான பிலிப்பையா, அல்பிறட், நெல்சன் போன்றவர்களுடன் இணைந்து செயற்பட்ட பெருமைக்குரியவர். திருநீலகண்டர், ஞானசௌந்தரி, சமர்க்களவீரன் சந்தியோ குமையோ, சிரங்கேட்டசிங்காரி போன்றன இவரால் எழுதப் பெற்று நெறிப்படுத்தப்பட்ட கூத்துக்களில் சிலவாகும். இவரது புதல்வியாரான திருமதி செபஸ்ரியாம்பிள்ளை இராஜேஸ்வரி தாயின் வழியில் செயற்பட்டு வருவதனால் அமரர் மனுவல் பாக்கியராசாத்தியின் கலைப்பணி இன்றுவரை தொடர் கின்றமை குறிப்பிடத்தக்கது.4

இதே காலகட்டங்களில் கொழும்புத்துறைக் கூத்துப் பாரம் பரியத்தில் இருந்து வந்த இன்னுமொரு பெண் அண்ணாவியார் திருமதி ஜோசவ்திரேசம்மா ஆவார். இவர் சிறுவயதிலிருந்தே கூத்துக்களில் நடித்து வந்தவர். மத்தேசு மவுறம்மா, எஸ்த்தாக்கியர், ஜெனோவா, நொண்டி, பண்டாரவன்னியன், கிறிஸ்தோப்பர், தியாகராகங்கள் போன்ற பல கூத்துக்களை நெறிப்படுத்தியவர். தியாகராகங்கள் என்ற கூத்தினை இவரே எழுதி அண்ணாவியாராக இருந்து நெறிப்படுத்தியவர். 1975ஆம் ஆண்டு நொண்டி நாடகத்தினை அண்ணாவி யார் பாவிலுப்பிள்ளையுடன் இணைந்து இலங்கை வானொலியில் ஒலிப்பதிவு செய்து ஒலிபரப்பியவர். அண்ணாவியார் அருட்பிரகாசம் என்பவருடன் இணைந்து கூத்துச்செயற்பாடுகளில் அதிகம் ஈடுபட்ட இவரை திருமறைக் கலாமன்றம் 1993ஆம் ஆண்டு நடத்திய அண்ணாவி மார் கௌரவிப்பு விழாவில் கௌரவிக்கப் பெற்றவர்.5

இளவாலையைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட வண்ணமணி என்பவரும் ஒரு சிறந்த அண்ணாவியாராவார். கலைக்குடும்பத்தில் பிறந்த இவர் சிறு வயதிலிருந்தே பல கூத்துக்களில் நடித்து வந்தவர். அண்ணாவி யார் திரவியம், மனோகரன் போன்றோரின் சகோதரியாரான இவர் முனைப்புடன் கூத்துக்களைப் பழக்கி வருகின்றவர். கற்பலங்காரி, சங்கிலியன், அலங்காரரூபன், நொண்டி, ஊதாரிப் பிள்ளை போன்ற கூத்துக்களை இவர் மேடையேற்றியமை குறிப்பிடத்தக்கது. திருமறைக்கலாமன்றத்தின் அண்ணாவிமார் கௌரவிப்பு விழாவில் கௌரவிக்கப்பெற்றவர். Book Cover
நாவாந்துறைப் பிரதேசத்திலிருந்தும் கூத்து, இசை நாடகத் துறையில் பெண்களின் பங்கு அதிகளவில் உள்ளமையும் குறிப் பிடத்தக்கது. இப்பிரதேசத்தைச் சேர்ந்த திருமதி மேரியம்மா இரவீந்திரன் (சாந்தி) என்பவர் கூத்துப் பாரம் பரியத்திலிருந்து வந்தவர். 1968ஆம் ஆண்டு பிறந்த இவர் 1980களிலிருந்து இத்துறையில் ஈடுபட்டு வருகின்றார். நாவாந்துறை டானியேல் பெலிக்கான் என்ற அண்ணாவி யாரை முதற்குருவாகக் கொண்டு விஜய மனோகரன் என்ற கூத்தில் பிரபு பாத்திர மேற்று நடித்து கூத்து வாழ்வை ஆரம்பித்தார். தொடர்ந்து அருளப்பர், கண்டிஅரசன், அலங்காரரூபன், சங்கிலியன், கற்பலங்காரி, எஸ்தாக்கியார், தேவசகாயம்பிள்ளை, ஏரோடியாள் சபதம், அனைத்தும் அவரே, ஞானசௌந்தரி, ஜெனோவா போன்ற கூத்துக்களில் மந்திரி, ஆலப்பிள்ளை, அலங்காரரூபி, சோழமன்னன், கற்பலங்காரி, தெயோபிஸ், ஞானப்பூ, ஏரோடி யாள், யோபுவின் மனைவி, லேனாள், கோவில் பணிப்பெண், ஆகிய பாத்திரங்களில் நடித்தவர். ஜெனோவா கூத்தினை நெறியாள்கை செய்தவர். அண்ணாவி ஆசீர்வாதம், பாலதாஸ், பேக்மன்ஜெயராசா, ஜோன்சன்றாஜ்குமார் போன்றவர்களது நாடகங்களில் அதிகம் பங்கு கொண்டுள்ளார். கூத்து ஒலிப்பதிவு வெளியீடுகளில் பாடியவர். கூத்து நுணுக்கம் தெரிந்தவர். திருமறைக்கலாமன்றத்தினால் நடத்தப்பட்ட அண்ணாவிமார் கௌரவிப்பு விழாவில்; கௌரவிக்கப்பட்டவர்.

1990களில் இருந்து இதே இடத்தைச் சேர்ந்த ச. யூலியஸ் கொலினா (கயல்விழி) ச. எவரெஸ்ரா (பூவிழி) ஆகிய இரு சகோதரிகளும் கூத்து, இசைநாடகம், நவீன நாடகத்துறைகளில் கொடிகட்டிப் பறந்த சகோதரக் கலைஞர்களாவர். 1994ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் யாழ் திருக்குடும்பக் கன்னியர்மடம் மகாவித்தியாலய மாணவி களாக இருந்த காலத்தில் திருமறைக்கலா மன்றத்தின் செயற்பாடுகளில் இணைந்து பல கூத்து, இசை நாடகங்களில் தமது நடிப்பாலும் பாடும் திறமையாலும் பல ரசிக உள்ளங்களைக் கொள்ளை கொண்ட வர்கள்.6 திருமறைக்கலாமன்றத்தின் பிரதான தயாரிப்புகளில் பிரதான பாத்திரங்களை ஏற்று நடித்தவர்கள். ஞானசௌந்தரி, ஜெனோவா, ஜீவப்பிரயத்தனம், சோழ மன்னன், மயானகாண்டம், ஏழுபிள்ளை நல்லதங்காள் போன்ற நாடகங்களில் பிரதான பாத்திரங்களேற்று நடித்தவர்கள். தற்பொழுது இலண்டனிலும், சுவிற்சலாந்திலும் வசித்து வருகின்றனர்.7 திருமதி ச. யூலியஸ்கொலினா 1994ஆம் காலப்பகுதியில் இந்நூலாசிரி யரிடம் நாடகமும் அரங்கியலும் கற்கையினை க.பொ.த உயர்தர வகுப்பிற்காக பயின்றவர்.

இல 46, சென் அன்ரனிஸ் றோட் பாசையூர் என்ற முகவரியில் வசித்துவரும் திருமதி செபஸ்ரியாம்பிள்ளை இராஜேஸ்வரி என்பவர் அண்ணாவியார் அமரர் திருமதி மனுவல் பாக்கியராசாத்தி என்பவரின் புதல்வியாராவார். 1954 இல் பிறந்த இவர் தனது தாயாரிடம் ஆரம்பக்கலையறிவைப் பெற்றுக்கொண்டதோடு அவரது கூத்துக் களிலும் சிறுவயது முதல் நடித்தும் வந்துள் ளார். இவர் இயல், இசை, நாடகம் ஆகிய கலைகளில் முழுமனதுடன் ஈடுபட்டு வருவதுடன் நாட்டுக் கூத்துக்களை எழுதி நெறியாள்கை செய்து அரங்கேற்றியவர். இவரால் மனஉறுதி, வெற்றிமேல் வெற்றி, விக்கிரமாதித்தன், வலகம்பா, பாலைவனப் புதல்வர்கள், இஸ்ரவேல், கம்லெற் மன்னன் ஆகிய நாட்டுக்கூத்துக்களையும் தொடரும் வெற்றி, தியாகச்சுடர், பாவமன்னிப்பு, தேவமைந்தன், ராஜமகுடம் போன்ற இசை நாடகங்களையும் எழுதியவர். இவரால் நெறிப்படுத்தப்பட்ட நாடகங்கள் பாசையூர் சென்.செபஸ்ரியார் அரங்கு, துண்டி, விளையாட்டு மைதானம், இளங்கலைஞர் மன்றம், பாசையூர் புனிதஅந்தோனியார் விளையாட்டரங்கு யாழ் வைத்தீஸ்வராக் கல்லூரி போன்ற இடங்களில் அரங்கேற்றப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவருடைய கலைச் சேவை யைப் பாராட்டி பாரம்பரிய கலைகள் மேம்பாட்டுக்கழகம் 2005ஆம் ஆண்டு நல்லூர் துர்க்காமணி மண்டபத்தில் நடத்திய விழாவில் முடிசூட்டி “மரபுக் கலைச் சுடர்” என்ற பட்டம் வழங்கியதுடன், பாசையூர் சென்.யோசப் வித்தியாலய உபஅதிபரால் பொன்னாடை போர்த்தியும் கௌரவிக்கப் பெற்றவர்.8

பிரான்சிஸ்பத்மாமாலினி என்பவர் பாசையூரைச் சேர்ந்த கூத்து, இசைநாடகக் கலைஞராக வாழ்ந்து வருகின்றார். பிரபல நாடகக் கலைஞரான யூட்கொலின் என்பவரது சகோதரியான இவர் அண்ணாவியார் அமரர் மனுவல் பாக்கியராசாத்தியின் வழிகாட்டலில் தனது நான்காவது வயதில் “திருநீலகண்டன்” என்ற கூத்தில் ஞானப்பூ என்ற பெண்பிள் ளைப் பாத்திரம் ஏற்று நடிக்கத் தொடங்கி யவர். அன்று தொடங்கிய இவரது கலைப் பயணம் ஞானசௌந்தரி (லேனாள்) வீரகுமாரனின் சபதம், பிரகாசராசன் (முன் அரசன்), அரக்கன், பாம்பாட்டி, விக்கிரமாதித்தன், தியாகத்தழும்பு, சமர்க்களவீரன் சந்தியோகுமையோ போன்ற கூத்துக்களிலும், எல்லாளன் என்ற இசை நாடகத்திலும், கயல்விழி, பூவுக்குள் பூகம்பம், புயலான தேசம், வெற்றியை நாளை சரித்;திரம்சொல்லும் முதலான கற்பனை வரலாற்று நாடகங்களிலும் தனது நடிப்பாற்றலை வெளிப் படுத்தியவர். பாசையூரின் பிரபல நடிகர்களான ஞா.லோறன்ஸ், ஜீவராசா, றொபின்சன், டேமியன், யூட்ஸ்கொலின்ஸ் போன்ற வர்களுடன் இணைந்து நடித்தவர் என்பதுடன் இன்றும் நடித்து வருகின்றார்.9

யாழ்ப்பாணம் பாரம்பரியக்கலைகள் மேம்பாட்டுக்கழகம் முல்லைப் பாங்கிலே அரங்கேற்றிய “வேழம்படுத்த வீராங் கனை” என்ற ஆட்ட நாட்டுக்கூத்தில் நல்லூரை வசிப்பிடமாகக் கொண்ட தாட்சாயினி என்ற ஆசிரியை அரியாத்தை என்ற பாத்திரமேற்று நடித்துள்ளார்;.10

திருமறைக்கலாமன்றத்தினால் உருவாக்கப்பட்டவர்களில் தாழையடிப் பிரதேசத்தைச் சேர்ந்த திருமதி ரசித்தா சாம்பிர தீபன் கூத்துக்களில் தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தியவர். தற்பொழுது லண்டனில் தீபம் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருகின்றார். மேலும் ஜான்சி, டினோயா உதயகுமார், தாரனி போன்றவர்கள் திருமறைக்கலாமன்றத்தின் கூத்து, இசை, நாடகச் செயற்பாடுகளில் பங்கெடுத்துவரும் கலைஞர்களாவர்.11

சிந்துநடைக்கூத்து எனப்படுகின்ற காத்தவராயன் கூத்துக்கலையில் பல கிரா மங்கள் இன்றும் அதன் பொலிவுடன் ஆடி வருகின்றன எனலாம். குறிப்பாக ஆதித்தன் வளவு கோப்பாய் தெற்கு பிரதேசத்தில் குடும்ப உறுப்பினர்களால் ஆடப்பட்டு வருகின் றமை இங்கு குறிப்பிடத்தக்கது. சின்னராசா புவனேஸ்வரியின் சகோதரர்களான இளைய தம்பி கிருஸ்ணன், இளையதம்பி பழனி, அப்புக்குட்டி நடராசா ஆகியோரினைத் தொடர்ந்து இவர்களது பேரப்பிள்ளைகளான சின்னராசா தனுசா (சின்னக் காத்தான், ஆரியப்பூமாலை), விக்னேஸ்வரன் கிரியா (அம்மன்) ஆகியவர்கள் சிறுவயதி லிருந்து இன்றுவரை நடித்து வருகின்றனர். சிறிகாந்தன் சந்திராதேவி (நடு அம்மன்), இராமச்சந்திரன் லக்சிகா (அம்மன்) ஆகியவர்கள் ஆடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.12 இவர்களது ஆற்றுகைகள் மண்கும்பான், காரைநகர், விளான், பண்டத் தரிப்பு, மாசியப் பிட்டி, அம்பானை போன்ற இடங்களில் அரங்கேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மரபு கெடாமல் விடியும்வரை ஆடிவருவதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com