யாழ்ப்பாண நாடகப் பாரம்பரியத்தில் பெண் கலைஞர்கள் – பாகம் 2

Book Adபண்பாடும் பெண்களும்.
யாழ்ப்பாணத்து அரங்கில் பெண் பிரசன்னம் என்பதற்கு முதலில் பண்பாட்டுத்தளத்தினைப் புரிந்து கொள்ளுதல் அவசியமானது. “பண்பாடு என்பது மனித இனத்தின் வாழ்வியல் முறை” ஆகும். இதற்குள் மதம், உணவு, சூழல், மனித உறவு முறைகள், கலைகள், போக்குவரத்து, பணம் போன்ற இன்னோ ரன்ன பிறவிடயங்களைக் கொண்டதாக அமைந்திருக்கின்றது. இவ்விடயம் உயிரியல், சூழல், வரலாற்று அம்சங்கள் வழியாக அறியப்படுவதும் உணரப்படுவதும் ஆகும். மனிதன் தனது ஆன்மாவை ஒழுங்குபடுத்தி ஆளுமையை வெளிக்கொணர்வதற்கு வாழ்க்கையில் தனக்குள்ள பணியின் மூலம் ஆற்றவேண்டிய கடமைகள், உரிமைகள் என்பவற்றைப் புரிந்துகொள்ளுதல் பண்பாடு என உரிமைகள் உலக அறிஞர்கள் வரையறை செய்துள்ளனர். இவ்வரையறையானது பால் அடிப்படையானதன்று. உலகப் பொதுவானது. ஆகவே பண்பாடு சமூகத்தின் அனைத்து மட்டங்களுக்கும் பொதுவானது. ஒரே மாதிரியானது.

இந்நிலை யில் பண்பாடு என்பதில் பெண் பற்றிய கருத்தியல் அகப்புற அழுத்தங்களுக்குள்ளாகி அதிலிருந்து விடுபடும் நிலையறி யாதவளாக குடும்பப்பாரம் சுமக்கும் பொறுப்புடையவளாக சித்தரித்து வருவது கண்கூடு. பெண்கள் தொடர்பாக யாழ்ப் பாணத்துப் பண்பாட்டு நடைமுறைகள் பிரதானமாக கோயில் மற்றும் சமூகக் கட்டுப்பாடுகளினடிப்படையில் மிகவும் இறுக்கமானதொன்றாக விளங்குவதும் கலைமுயற்சிகளில் ஈடுபடுபவர்களை இழிவான கண்ணோட்டத்தில் பார்க்கின்ற பதிவுகள் இங்கு முக்கியமாகின்றன. பல்வேறு காலங்களிலும் எழுந்த இலக்கியங்கள் பெண்கள் தொடர்பாகப் பல செய்தி களைச் சொல்லியிருக்கின்றன. சங்ககாலத்தில்வரும் “விறலி” என்பவள் ஆடல், பாடல் அறிந்தவளாகவும், பாடல் வல்லமை உள்ளவளாகப் “பாடினி”யையும் வெளிப்படுத்தியுள்ளனர். பெண்கள் ஆடுகளத்துடன் தொடர்புபட்டிருந்தவர்கள் என்பதனை உருத்திர கணிகையரின் “நாடகமகளிர் ஆடுகளத் தெடுத்த விசி வீங்க இன்னியம் கடுப்ப” என்ற பாடல் மூலம் புரிந்துகொள்ளமுடிகின்றது. இதன் வழிப்பேறாக யாழ்ப் பாணத்து அரங்கில் பெண் ஆற்றுகையாளர் பிரசன்னம் தொடர்பாக சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளோம். அந்த வகையில் 1960களில், 1970களின் பின் என கூத்து, இசை நாடகம், நவீன நாடகம் என்பவற்றில் ஈடுபட்டுள்ள – ஈடுபட்டுவருகின்ற பெண் கலைஞர்களின் அவைக்காற்றுகைக்கான பங்களிப்பினை கிடைக்கப்பெற்ற தகவல்களை அடிப்படையாகக் கொண்டு அட்டவணைப்படுத்துவதன் மூலம் விளங்கிக்கொள்;ளமுடியும்.

(அட்டவணைகள் )

Book A5 Kilinochchi Final B 01 Book A5 Kilinochchi Final B 02 Book A5 Kilinochchi Final B 03

நாட்டுக்கூத்துக்களில் பெண் கலைஞர்கள்;

நாட்டுக்கூத்து மரபு என்பது யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மன்னார், மலையகம், வன்னிப்பிரதேசங்களில் ஆடப்பட்டு வருகின்ற கூத்துக்களையே கருதி நிற்கின்றது. இத்தகைய கூத்துக்கள் கத்தோலிக்க மதம் சார்ந்ததாகவும், இந்துமதம் சார்ந்ததாகவும் தத்தம் சமய நிலப்பண்பாட்டிற்கேற்ப ஆடப் பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய கூத்துக் கள் பெரும்பாலும் புராணம், இதிகாசம், இலக்கியம் ,பைபிள் போன்றவற்றில் இருந்து கருப்பொருள்களைத் தமதாக்கிக் கொண்டு வட்டக்களரியில் விடியவிடிய ஆடப்பட்டன. இக்கூத்துக்களில் வருகின்ற பெண் பாத்திரங்களை ஆண்களே ஆடினர். இன்றும் ஆடி வருகின்றனர்.

பேராசிரியர் சு.வித்தியானந்தனவர்களது கூத்து நவீன மயப்படுத்துதல் என்னும் முயற்சியில் பாரம்பரியக் கலைவடி வங்கள் பல்கலைக்கழகம் மற்றும் மத்தியதரவர்க்கத்தினுள் உள்வாங்கப்பட்டது. இச்செயற்பாடுகளால் கூத்து நவீனமயப் படுத்தப்பட்டது எனக் குறிப்பிடப்படுகின்றது. இச்செயற் பாடுகளில் முக்கியமாகப் பல மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டதாக அறியமுடிகின்றது. குறிப்பாகப் பெண் பாத்திரங்களுக்;கு பெண்களை நடிக்கவைத்தமை, பெண் பாடகர்களைப் பாட வைத்தமை என்பன குறிப்பிடத்தக்கது. இச்செயற்பாடுகள் 1960களின் பின்னர் ஏற்படுத்தப்பட்டதாகப் பதிவுகள் கூறுகின்ற அதேவேளை யாழ்ப்பாணக் குடாநாட்டின் பாசையூர், கொழும்புத்துறை, குருநகர், நாவாந்துறை, ஆனைக்கோட்டை ஆகிய பகுதிகளில் 1960களிற்கு முன் அல்லது இதே காலப் பகுதியில் அமரர் மனுவல் பாக்கியராசாத்தி, ஜோசவ் திரேசம்மா, வண்ணமணி ஆகிய மூன்றுபெண்மணிகளும் கூத்து அரங்கில் துணிந்து நின்று செயற்பட்டவர்கள் என்பதுடன் 1960ஆம் ஆண்டு குருநகரைச் சேர்ந்த அண்ணாவி ஜேம்ஸ் என்பவரால் அவ்வூர் பெண்பிள்ளைகளைக்கொண்டு “ஞானசௌந்தரி” என்ற கூத்தினைப் பழக்கி அரங்கேற்றி உள்ளமையும் குறிப்பிடத் தக்கது. கூத்துக்களின் வளர்ச்சியில் பெண்களின் பங்கு நேரடி யாகவும், மறைமுகமாகவும் கிடைத்திருக்கின்றது. குறிப்பாக, குருநகர், நாரந்தனை, கரம்பொன், புங்குடுதீவு போன்ற இடங்களில் இந்நிலைமை அதிகம் காணப்பட்டுள்ளது. உதாரணமாக:- 1860-1920களில் வாழ்ந்த நாரந்தனை அண்ணாவி சவினை சந்தியப்பிள்ளையின் மகள் றோசமுத்து சிறந்த பாடகி மட்டுமன்றி எல்லாக் கூத்து ராகங்களும் தெரிந்தவர். இவர் திருமறைக்கலாமன்ற பிரதி இயக்குனர் ஜோன்சன் றாஜ்குமாரின் பேர்த்தியாருமாவார். இவர் தனக்குப் பல கூத்து இராகங்களை சொல்லித்தந்ததாக தனது ஈழத்துக் கத்தோலிக்கக் கூத்துக்கள் என்னும் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.1

மேலும் குருநகரில் 1960ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் குருநகர் உத்தரியமாதா ஆலயத்தில் “ஞானசௌந்தரி” என்ற கூத்து முற்றுமுழுக்க பெண்களாலேயே அரங் கேற்றப்பட்டது. இக்கூத்தில் திருமதி அந்தோனிப்பிள்ளை ஆன் யூலியட் ஒட்டனாகவும், இ.மகேஸ் ஞானசௌந்தரி யாகவும், பி.ரதி செமி யோனாகவும், அல்பிரட் மேரிகிப்போலிற்றா லேனா ளாகவும், சூரிகமலா பிலேந்திரனாகவும் மரியகார்மேல் காவல்காரனாகவும் லூயிஸ் யேட்றூட்டம்மா என்பவரும் இவர்களுடன் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கான ஒப்ப னையினை மறைந்த ஒப்ப னைக் கலைஞன் பெஞ்சமின் அவர்களால் மேற்கொள் ளப்பட்டதும் கவனத்திற் கொள்ளலாம். இதே பகுதி யில் சாமிநாதன் அண் ணாவியாரால் இரு பாலா ரையும் கொண்டு தயாரித் தளிக்கப்பட்ட வாழ்க்கையின் புயல் என்ற கூத்தில் நடித்த இவரது சகோதரியாரான பேபி என்பவர் இன்று சிறந்த அண்ணாவி யாராகத் திகழ்ந்து வருகின்றார். நட்டுவன் என்ற அண்ணாவியாரின் பெண் உறவினர்கள் கூத்தின் ஆடலையும், பாடலையும் தெரிந்த வர்களாக களரியின் பின் நின்று ஆண் கலைஞர்களுக்கான ஊக்க சக்திகளாகத் திகழ்ந்துள்ளனர்.2

வடமராட்சிப் பிரதேசத்தில் கற்கோவளம், மாதனை போன்ற இடங்களில் முற்றுமுழுக்கப் பெண் கலைஞர்களால் அரங்கேற்றப்பட்ட“காத்தவராயன் கூத்து” 1990களிலிருந்து இடம்பெற்று வந்துள்ளன.3 எனவே கூத்து அரங்கில் பெண் பிரசன்னம் மறைமுகமாகவும், நேரடியாகவும் இருந்து வந்துள்ளன. ஆனால் சமூகக்கட்டுப்பாடுகள், புலம்பெயர் நிலை, சமூகப் பார்வைகள், மூடநம்பிக்கைகள் அவர்களது ஆளுமைகளை உள்ளுக்குள்ளேயே அடக்கிய நிலைமையை ஏற்படுத்தியிருக்கின்றது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com