சற்று முன்
Home / முக்கிய செய்திகள் / யாழ்ப்பாண சிறைக்குள் அலைபேசி பாவனை இல்லை.

யாழ்ப்பாண சிறைக்குள் அலைபேசி பாவனை இல்லை.

யாழ்ப்பாண சிறைக்குள் கைதிகளின் அலைபேசிப் பாவனை முற்றாக நிறுத்தப்பட்டுவிட்டதாக சிறைச்சாலைகள் உதவி ஆணையாளர் (நிர்வாகம் மற்றும் புனர்வாழ்வு) சந்தன எக்கநாயக்க தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த சிறைச்சாலைகள் உதவி ஆணையாளர் (நிர்வாகம்) யாழ் சிறைச்சாலையின் செயற்பாடுகள் தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது;

யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குள் அலைபேசி பாவனை முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது அலைபேசி பாவனை பூச்சிய நிலையில் காணப்படுகின்றது. இதன் காரணமாக யாழ்ப்பாண சிறையில் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் தண்டனை அனுபவிப்பவர்களுக்கும் சிறைச்சாலைக்கு வெளியிலே போதைப்பொருள் கடத்தல், போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுவோருக்கு மிடையில் தொடர்பு இருக்க வாய்ப்பில்லை.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கைதிகளின் நலன் சரியாக பேணப்படுகிறது. குடிதண்ணீர் மற்றும் ஏனைய அத்தியாவசிய தேவைகள் யாவும் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மற்றும் சிறைச்சாலை அத்தியட்சகரினால் சிறப்பாக செயற்படுத்தப்படுகிறது. ஏனைய சிறைச்சாலைகளோடு ஒப்பிடும் போது யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கைதிகளுக்கான அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்படுகின்றது.

குறிப்பாக யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் குடிதண்ணீர் வெளியிடத்தில் இருந்தே எடுத்து வரப்படுகின்றது. சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் அது திறம்பட செயல் படுத்தப்படுகின்றது. அதேபோல முன்னொரு காலத்தில் வெளியில் இருந்து சிறைச்சாலைக்குள் பொதிகள் எறியும் செயற்பாடு காணப்பட்டது.
அவை அலைபேசி பாவனை இருந்ததன் காரணமாக நடைபெற்றது. எனினும் தற்போது நாம் சிறைச்சாலையில் அலைபேசி பாவனையை முற்றாக நிறுத்திவிட்டோம். அதன் காரணமாக அந்த செயல்பாடும் தற்போது இல்லை.

யாழ்ப்பாண சிறைச்சாலையின் சிறைச்சாலை அத்தியட்சகர் மற்றும் சிறைச்சாலை ஊழியர்கள் கைதிகளின் நலன் தொடர்பில் மிகவும் அக்கறையாக செயற்படுகின்றார்கள். அவர்களுக்குரிய பொழுதுபோக்கு விடயங்களில் பல வசதிகளை செய்து கொடுத்திருக்கிறார்கள். உதாரணமாக சித்திரம் வரைதல், கவிதை எழுதுதல் போன்ற செயற்பாடுகளுக்கு சிறைச்சாலை ஊழியர்கள் ஒத்துழைப்பு வழங்குகின்றார்கள்.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையை பொறுத்தவரை கைதிகள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளார்கள். போதைப்பொருள் தொடர்புடையவர்கள் தனியாகவும் சிறு குற்றங்கள் மற்றும் நீதிமன்ற தண்டப்பணம் செலுத்த முடியாதவர்கள் தனியாகவும் கடும் குற்றமிழைத்தவர்கள் தனியாகவும் மேல் நீதிமன்றங்களில் வழக்குள்ளவர்கள் தனியாகவும் பிரிக்கபட்டுள்ளார்கள். அவர்களுக்கு உரிய சகல வசதிகளும் யாழ்ப்பாணம் சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் வழங்கப்படுகின்றது- என்றார்

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

எகிறும் விலைவாசி – ஒரு கிலோ பால்மா 1300 ரூபா ? 400 கிறாம் 520 ரூபா ??

நாட்டில் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையையும் அதிகரிக்க இறக்குமதியாளர்கள் கோரியுள்ளனர் என்று வர்த்தக அமைச்சர் பந்துல ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com