சற்று முன்
Home / செய்திகள் / யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் நாளை திறப்பு – முதல் விமானம் சென்னையிலிருந்து வருகிறது

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் நாளை திறப்பு – முதல் விமானம் சென்னையிலிருந்து வருகிறது

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் உத்தியோகபூர்வமாக நாளை வியாழக்கிழமை முற்பகல் திறந்துவைக்கப்படுகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து திறந்து வைக்கின்றனர்.

சிவில் விமான சேவைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தலைமையில் இடம்பெறும் இந்த நிகழ்வுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்திய அதிகாரிகள் உள்ளிட்ட தரப்புகளுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

திறப்பு விழாவின் அடையாளமாக சென்னை விமான நிலையத்திலிருந்து முதலாவது விமானம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்குகிறது.

எயர் இந்தியாவின் அலையன்ஸ் எயர் விமானமே இவ்வாறு பயணத்தை மேற்கொள்கிறது. அந்த விமானத்தில் எயர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர் அஸ்வானி லோகானி உள்ளிட்ட இந்திய வெளியுறவுத் துறை மூத்த அதிகாரிகள் வருகை தரவுள்ளனர்.

இவர்களை வரவேற்கும் நிகழ்வில் ஜனாதிபதியும், பிரதமரும் பங்கேற்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் விமான நிலையம் திறக்கப்பட்டதும் சென்னை உள்ளிட்ட இந்திய நகரங்களில் இருந்து வாரத்தில் மூன்று சேவைகளை நடத்தவுள்ளதாக அலையன்ஸ் எயர் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் மும்பை, பெங்களூர் மற்றும் கொச்சின் ஆகிய நகரங்களுக்கே விமான சேவையை நடத்த இந்திய அரசு அனுமதியளித்திருந்தது.

எனினும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு சென்னை விமான நிலையத்துக்கான விமான சேவையே என யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதுவர் உள்ளிட்ட தரப்புகள் முன்வைத்த யோசனைக்கு இந்திய அரசு அனுமதியளித்துள்ளது.

இதனால் சென்னை மற்றும் திருச்சி விமான நிலையங்களுக்கு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து வாரத்து 3 விமான சேவைகளை நடத்த அலையன்ஸ் எயர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

அதனடிப்படையில் வரும் 27ஆம் திகதி முதல் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை விமான நிலையத்துக்கு விமான சேவைகளை ஆரம்பிக்க இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை திட்டமிட்டுள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com