யாழ்ப்பாணத்தில் திருட முயன்று கைதான படையினர் பிணையில் விடுதலை

(17.10.2015) யாழ்ப்பாணம் கைதடிப் பகுதியில் ஏ 9 நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டுள்ள பெரிய வீதி விளம்பரப் பலகைகளின் இரும்புக் கம்பிகளையும் இரும்புச் சட்டங்களையும் நள்ளிரவு நேரத்தில் களவாக வெட்டி எடுத்துச் செல்ல முற்பட்டபோது, சாவகச்சேரி பொலிசாரால் கைது செய்யப்பட்ட 8 படையினரையும் 50 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் சாவகச்சேரி நீதிமன்ற நீதவான் விடுதலை செய்துள்ளார். 
மீண்டும் இவர்கள் மீதான வழக்கு எதிர்வரும் 29ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருட்டுக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட படையினர் யாழ்ப்பாணம் 6ஆவது சிக்னல் படைப்பிரிவைச் சேர்ந்தவர்கள் என சாவகச்சேரிப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
படையினரை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தமுன்னர் அவர்களை பொலிஸ் நிலைத்திலிருந்து மீட்டுச் செல்வதற்கு இராணுவ அதிகாரிகள் முயற்சிகளை மேற்கொண்டிருந்ததாகவும் கைது செய்யப்பட்ட gடையினரை நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைவாகவே கையாள வேண்டும் என்றும், நீதிமன்றத்தின் அனுமதியின்றி அவர்களை இராணுவ அதிகாரிகளிடம் கையளிக்க முடியாது என்றும் பொலிசார் இராணுவ அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
கடந்த சில வாரங்களாக கைதடி நாவற்குழிப் பகுதியின் கண்டி நெடுஞ்சாலையை அண்மித்த பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள் மர்மமான முறையில் அறுத்து எடுத்துச் செல்லப்பட்டிருப்பதை அவதானித்த சாவகச்சேரி பொலிசார் வெள்ளிக்கிழமை இரவு அந்தப் பகுதியில் இரகசியமாகப் பதுங்கியிருந்து நோட்டமிட்டபோது, வாகனம் ஒன்றில் வந்த எட்டு படையினர் விளம்பரப் பலகையொன்றின் இரும்புகள் இரும்புச் சட்டங்களை அறுக்க முற்பட்டபோது கையும் களவுமாக அவர்களைக் பொலிசார் கைது செய்து கொண்டு சென்றுள்ளனர்.
இவர்களை விசாரணை செய்து இவர்களிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்தபோதே, இவர்கள் இராணுவத்தினர் என்ற விடயம் பொலிசாருக்குத் தெரியவந்ததாக பொலிஸ்துறை சார்பில் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com