யாழில் நடைபெற்ற பட்டதாரிகள் சந்திப்பு – பல்வேறு விடையங்கள் ஆராய்வு

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கான முக்கிய கலந்துரையாடலொன்று வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தின் ஏற்பாட்டில்இன்று ஞாயிற்றுக்கிழமை (08) காலை-09.30 மணி முதல் யாழ். மாவட்டச் செயலகத்திற்கு அருகிலுள்ள வை.எம்.சி மண்டபத்தில் இடம்பெற்றது.

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத் தலைவர் பே.கிரிசாந் தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் அகில இலங்கை ஒன்றிணைந்த வேலையற்ற பட்டாதாரிகள் சமூகத்தின் இணைப்பாளர் தென்னே ஞானானந்த தேரரும் கலந்து கொண்டார்.

இந்தக் கலந்துரையாடலில் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளின் வேலைவாய்ப்புத் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக வடமாகாணத்தில் கடந்த-2012 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை கல்வி கற்று வெளியேறிய ஐயாயிரம் பட்டதாரிகள் இந்தமாதம்-16 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான வேலைவாய்ப்பு நேர்முகத் தேர்வு யாழ். மாவட்டச் செயலகத்தில் இடம்பெறவுள்ளது. இந்நிலையில் குறித்த நேர்முகத் தேர்வு தொடர்பில் இன்றைய கலந்துரையாடலில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தில் மாத்திரம் 3400 வரையான பட்டதாரிகளுக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ள வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளில் பெரும்பாலானோருக்கு உத்தியோகபூர்வ கடிதங்கள் கிடைத்துள்ள போதிலும் குறிப்பிடத்தக்க பட்டதாரிகளுக்கான கடிதங்கள் இன்னமும் கிடைக்கப் பெறவில்லை என வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தின் முக்கிய செயற்பாட்டாளர் அ. முகுந்தன் தெரிவித்துள்ளார்.

நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டோரின் பெயர்கள் விபரப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்தும் நேர்முகத் தேர்வுக்கான கடிதங்கள் கிடைக்கப் பெறாதவர்கள் தொடர்பிலும், 2016 ஆம் ஆண்டு வெளிவாரியாகப் படித்துப் பட்டம் பெற்ற பட்டதாரிகள் இதுவரை வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்காத நிலையில் இந்த விடயம் தொடர்பிலும் நாளை திங்கட்கிழமை காலை யாழ். மாவடட அரசாங்க அதிபரைச் சந்தித்துக் கலந்துரையாடுவதென இந்தக் கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, இன்றைய கலந்துரையாடலில் வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டதுடன் வேலைவாய்ப்புக்கான நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தமது மகிழ்ச்சியையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com